Thursday, July 19, 2012

சட்ட ஆட்சி



சட்ட ஆட்சி : ஹிட்லரை முன்னிறுத்தி சில சிந்தனைகள்



இக்கட்டுரையை வரைவதற்காக திரும்ப திரும்ப அச்சாக்கப்படும் சட்டக்கொள்கை கோட்பாடுகளை விளக்க வெறும் கோட்பாட்டளவு விளக்கங்களை மட்டும் விபரிக்காமல் அதன் உண்மை பிரயோக யதார்த்தங்களையும் விளக்க எண்ணினேன். இதற்காக ஓர் உதாரணத்தை யதார்த்தமாக மேற்கோளிட வேண்டிய தேவை ஏற்பட்டது. ஏனெனில் பக்கங்களில் விளக்க வேண்டிய கோட்பாடுகளை வரிகளில் உதாரணங்கள் மூலம் சுட்டி விடலாம். அதற்காக தனி மனித ஆளுமைகள் என்ற விடயப்பரப்பில் ஹிட்லர் என்ற ஆளுமையை தேர்ந்தெடுத்தேன். ஹிட்லரின் இரண்டாம் உலகப்போரும் அவரின் மின்னல் வேக போரியல் தந்திரோபாயங்களும் உலகிற்கு தேவையான அளவில் அறிமுகமானவை. ஆனால் சட்டம் என்ற தனி விடயதானத்தினுள் ஹிட்லர் என்ற தனிமனித ஆளுமை எவ்வாறு செயற்பட்டது என்பது இன்று வரை பரவலான அறிமுகத்திற்கு அப்பாற்பட்டது. அவர் போரியல் உத்திகளில் மட்டும் மின்னல் வீரராக அல்லாது அரசியல் சதுரங்கத்திலும் சட்டம் என்ற போர்க்காய்களை மிகத்திறமையாக நகர்த்தியவராகவும் காணப்பட்டார். 1933ம் ஆண்டு வரை ஜேர்மனி ஒரு ஜனநாயக நாடு ஆனால் இரு இனங்களிடையே புகைச்சலை கொண்டிருந்த தேசம் ஓர் குறிப்பிட்ட சிறுபான்மை இனத்தின் செழிப்பையும் செல்வாக்கையும் பார்த்து மற்றைய பெரும்பான்மை இனம் மனதில் கருவிக்கொண்டிருந்த நேரம் ஹிட்லரின் வரலாறு ஆரம்பமானது. அது நிச்சயம் எமக்கு சட்டத்தின் ஆட்சியினதும் அதன் ஏனைய துணை சட்ட கருது கோள்களினதும் நடைமுறை பிரயோகத்தை தெளிவிக்கும் ஓர் ஊக்கியாக தொழிற்படும் என எண்ணுகின்றேன். இன்று வளநாடுகள் அல்லது வேற்றுக்கொள்கை நாடுகளில் மனித உரிமை மீறல் எனும் குற்றச்சாட்டை முன்னிறுத்தி கொக்கரிப்பதோடு உச்சக்கட்டமாக நாட்டிறைமை என்ற கருதுகோளையே துடைத்தெறிந்து விட்டு வலுக்கட்டாய படை நடவடிக்கைகளில் ஈடுபடும் மேற்குலகம் அன்று ஒரு தனி மனிதன் சுமார் பதினோரு மில்லியன் சிவிலியன்களை கொன்றொழித்த போது தடுக்க தக்க நடவடிக்கை ஏன் எடுத்திருக்கவில்லை ? என்ற வினா இன்றைய மேற்குலகின் அக்கறைத்தன்மையின் உண்மைத்தன்மையை எமக்கு காட்டுகின்றது. சட்ட ஆட்சியின் கீழ் சட்டத்தை மிஞ்சி யாரும் இல்லை என்ற கருத்தியலை சட்டமே நானெனில் மேல் கீழ் சர்ச்சைகளிற்கே இடமில்லை என நிரூபித்தவர் தான் ஹிட்லர். இனி அவரின் வழியில்……………..

சட்டம் எனும் பதத்திற்கு வரைவிலக்கணமொன்றை வகு்க்க துணிந்த எவருமே அதில் வெற்றியடையவில்லை. மாறாக ஏதாவது சொற்கோவைகளை தமது வாசகர்கட்காக வசனமாக்குகின்றனர். சட்டம் என்பது சமூதத்தை ஒழுங்கமைக்கும் ஒரு விதிக்கோவை எனும் விபரணம் எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் அது அடுத்தாக சட்டம் ஓர் நெறியாக சமூகத்தை வழிப்படுத்துகின்றதா  அல்லது ஓர் கட்டளையாக சமூகத்திற்கு ஆணை பிறப்பிக்கின்றதா என்பது இன்று வரை ஆய்வுக்குட்பட்ட விடயம். முதலாம் வினாவிற்கு ஆதரவுடையோர் தம்மை இயற்கை சட்டவாதிகள் எனவும் அரண்டாம் வினாவிற்கு ஒத்து சான்று பகர்வோர் தம்மை ஒழுங்கமைப்பு வாதிகள் எனவும் இரண்டு நிலைக்கும் இடையில் நெகிழ்ந்து நிற்கும் ஓர் புள்ளியே சட்டம் என வாதிடுவோர் தம்மை குரோசியர்கள் என அறிமுகப்படுத்துகின்றனர்.  ஆனால் எமது முழு தலைவலியே அந்த நெகிழ்வுப்புள்ளி தான். எப்போது அது எங்து இருக்கும் என தெளிவாக வரையறுத்து விட்டால் சட்டவாளர்கட்கு பணிகளும் இருக்காது அவர்கட்கான தோற்றுவாய்களும் காணப்படாது. ஏனெினல் அந்த புள்ளி தீர்மானிப்பு என்பது வெறும் விதிகட்கான கோணங்களுக்குள் அடங்கியிருக்க கூடிய விடயமோ அல்லது அடக்கப்படக்கூடிய விடயமோ அன்று  மாறாக அந்தப்புள்ளி நிர்ணயப்புள்ளிகளையே தொடர்சியாக நிர்ணயித்து கொண்டிருப்பது தான் சட்டத்தின் வரலாற்று யதார்த்தம்.


சட்டப்பயிலுணர்களின் முதல் வகுப்பு  எதிர்நோக்கல் வினா ஏன் இத்துறை தேர்ந்தெடுப்பு என்பதாகத்தான் பெரும்பாலும் இருக்கின்றது. பெரும்பாலும் பெறப்படும் விடையும் சட்டம் சமூக மாற்றத்திற்கான உபகரணமாக காணப்படுகின்றது என்பதேயாகும். எனவே சட்டத்தின் மூலம் சமூகத்தை மறுசீரமைக்க முடியும் என்பதாகும். ஆனால் அந்த உபகரணம் எனும் நேருருவாக்கம் வேறுபட்ட இரு தொழிற்கரங்களால் இயக்கப்படுவதை நாம் சிந்தையில் இருத்துவதில்லை அல்லது சிந்திக்க முயன்றதுமில்லை. முதலாவதாக அந்த உபகரணத்தை யார் கையாள்கிறார்கள் இரண்டாவது அந்த உபகரணம் யாரால் வடிவமைக்கப்படுகின்றது. ஆனால் இரண்டு வினாக்கட்கும் ஒரே விடையை நாம் எடுத்துரைப்பின் எங்கோ ஓர் தவறுதலை மேற்கொள்கின்றோம். இந்த உபகரணங்கள் மீயுயர் சட்டங்களாகவோ அல்லது பல்அம்ச நாட்டம்சங்கள் மூலம் வழிகாட்டும் வழித்தடங்களாகவோ அமையலாம். இந்த உபகரண அமைப்புகளே சட்டம் ஓர் ஒழுக்காற்று நெறியா அல்லது ஆணையா என தீர்மானிப்பதாக அமைகின்றது. உபகரண வடிவமைப்பு என்பது இரண்டாவது பதத்தை விட சற்றே கொள்ளளவு கூடியது என்பது வரலாற்று சான்றுகள் மூலம் ஆவணப்படுத்தி விடலாம். ஏனெனில் ஓர் உபகர வடிவமைப்பில் ஓரினத்தன்மையை பொருள்வாக்கோடு உருவாக்கிவிட்டால் அதோடு அதை கையாள வேண்டிய நிலைக்கு மாற்றுபாயமின்றி இயக்குணர்கள் தள்ளப்பட்டால் வடிவமைப்பு பணியே முதன்மை பெறுமே அன்றி கையாளும் பணி அன்று.  ஏனெனில் கையாள் பணியாளுக்கு அவ்வுபகரணத்தை இயக்குவதை விட ஒரே ஒரு மாற்றுாபாயம் இன்னோர் உபகரண வடிவமைப்புத்தான் அல்லது கையாள் என்ற பதவி நிலையை துறப்பதுதான். எனவே எவ்வாறு நோக்கினும் தன்னிச்சையாக முன்னையது முதன்மை பெறுவது நியதி. ஆனால் அதையும் தாண்டி வடிவமைத்தவர்கள் வெகு சிலரே அவ்வாறனவர்கள் எவ்வாறு முதற்பந்தியில் குறிப்பிட்ட நெகிழ்சிப்புள்ளியை எவ்வாறு அல்லது எங்கே நகர்த்துகின்றனர் என்பது தான் தனி மனித ஆளுமைக்கும் சட்ட ஆட்சிக்கும் இடையிலான எதிர்க்கோண நேருருவாக்கத்தை எமக்கு தெளிவாக்கும் குறிப்பேடாகும்.
ஆனால் வரலாற்றுப்பாடம் எமக்களித்த தோற்றுவாய் உபகரண வடிவமைப்பில் ஈடுபட்ட பெரும்பான்மையானோர் சட்டத்தை ஆணையாகவே தொழிற்படுத்தினர் என்பதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக உதாரணம் தான் அடோல்ப் ஹிட்லர். ஏனெனில் அவ்வாறல்லாது இயற்கை சட்டப்பரப்பினுள் யாராவது சட்டத்தை உட்புகுத்தி விட்டால் அவ்வுபகரணமே இயக்குணரை கையகப்படுத்துமே அன்றி இயக்குணரின் தோற்றப்பாங்கு தேவையற்றதாகிவிடும். ஆனால் தர்க்கிப்பதற்கு அப்பாற்பட்ட விடயம் சே குவேரா போன்றோர் ஆக இருக்கலாம். ஆனால் அவர்களால் இந்த உபகரண வடிவமைப்பில் முழுமையடைய முடியவில்லை என்பதே எனது நிலைப்பாடு.அவ்வாறு முழுமையடைந்திருப்பின் அவர்களின் தொழில்முறைமைகளும் ஆணையை நோக்கி பயணித்திருக்கலாம் என்பது திண்ணம். அது பற்றி ஆராய்வதை விடுத்து உபகரண வடிவமைப்பில் முழுமையடைந்தோர் எவ்வாறு அதை பயன்படுத்தினர் என அளவளாவுவது பொருத்தமானதாகும். ஏனெனில் முழுமை பெற்றவர்கள்லேயே உபகரணத்தை செயற்படுத்தவும் முடியும். ஹிட்லரின் சுய வரலாறு எமக்கு மிகையளவாக ஏற்கனவே திணிக்கப்பட்டிருக்கும் எனும் எடுகோளிற்கமைய அவரின் அரசாட்சி முயற்சியாண்மை அல்லது ஆட்சித்துறைக்கான பதவணி கட்டமைப்பு என்பன இன்றைய அரசாண்மை கட்டுமானங்களுடன் கூட ஒப்புநோக்க கூடியவையாகும். இவற்றைப்பற்றிய தொடர்சியான உதாரண மாதிரி ஒப்புநோக்கல்கள் சமகால வடிவமைப்புகளை விளங்கிக்கொள்ள உதவும் என எண்ணுகின்றேன்.


ஆனால் இவ்வாறான தாற்ப்பரியங்களில் மேற்குலக நாடுகளின் வழி தொடரிகளாக செயற்படும் மூன்றாம் மண்டல நாட்டு குடிகளாகிய நாம் அவர்கள் காட்டும் வழித்தடத்தை பின்பற்றுகிறோமே தவிர அதற்கப்பால் உள்ள வரலாற்று எச்சங்களை எண்ணிப்பார்த்ததுமில்லை அல்லது எண்ணிப்பார்க்க விரும்பியதுமில்லை. எம் மனப்பாங்கு அவ்வாறு இன்று வரை வளர்த்தெடுக்கப்பட்டிருக்கின்றது. உலகின் பெரும் மக்கட்செறிவை சென்றடையும் ஊடகங்கள் எல்லாம் மேற்குலக வல்லரசுகளால் வழிநடாத்தப்படுபவை. மிகச்சிறப்பான உதாரணமாக குறிப்பிடின் தகவற்கிடங்கு என்றும் அறிவுக்களஞ்சியம் என்றும் எம்மால் புகழாரம் சூட்டப்படும் இணையம் கூட பலவானின் கைப்பொம்மையாக நின்று ஆா்ப்பரிக்கின்றது. வரலாற்று ஆசிரியா்கள் பக்கம்பக்கமாக கட்டுரைகளை பிரசுரித்தபோதும் நுண்ஆய்வுக்கான ஆதாரங்களை வெளிப்படுத்தாது தங்கள் அபிப்பிராய சம்பாசனைகளையே பதிப்பிக்கின்றார்கள். ஆதாரங்களுக்கான இணைய இணைப்பிகள் பெரும்பாலும் முடக்கப்பட்டோ அல்லது நீக்கப்பட்டோ காணப்படுவதானது வினைத்திறனான தகவற்பாதுகாப்பு என்ற இணையத்தின் தொழில்நுட்ப மூலாதாராத்தையே இன்று நிர்மூலப்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலையிலும் சிந்தனை தெளிவுடையோர் ஹிட்லரின் அன்றைய உபகரண சிருஷ்டிப்பு முறைமைகளை இன்றைய ஜனநாயக   தோலுடைய வல்லரசுகள் அல்லது புறக்கணிக்கத்தக்க அரசுகள் கூட தமக்கான யதார்த்த தொழிற்கருவிகளாக பயன்படுத்துவதை உணரத்துணியாமல் இருப்பது யதார்தத்திற்கு அப்பாற்பட்டது.
ஓர் கொடுங்கோலராக ஹிட்லரை அறிமுகப்படுத்திய அறிவுலகமும் சட்டமும் அதன் கொள்கைகளும் கோட்பாடுகளும் நிரம்பியிருந்த சூழற்காரணின் மத்தியில் சட்ட உபகரண தொழிற்பாடுகளோடு எவ்வித இயக்குகை தொடர்புகளுமற்ற ஒருவரை எவ்வாறு உபகரண வடிவமைப்பாளராக மாற்றியது என்பது பற்றி மௌனித்தே விட்டது. அரசியற்துறை பின்புலமற்று ஓவியராக உருவாக விரும்பிய ஹிட்லரால் எவ்வாறு ஓர் பெரும்நிலப்பாங்கான ஜேர்மனியின் கட்டளையிடும் தலைவராக வரமுடிந்தது. ஒர் நாட்டின் இறைமை, வலுவேறாக்கம் மற்றும் சட்ட ஆட்சி எனும் அடிப்படை கோட்பாடுகளை எவ்வாறு தகர்த்தெறிய முடிந்தது என்பது பற்றிய தொடரே கீழ் ஆராயப்படுகின்றது.