Wednesday, October 2, 2013

சீன நாகரீகமும் அரச வம்சங்களும்

Rajeendra

சீனா ஆசியா கண்டத்தின் கிழக்கில் அமைந்துள்ள ஒரு தீப கற்பம் ஆகும். உலக நிலப்பரப்பில் 1/14 {9597900 சதுர கீ.மீ} பங்கு கொண்ட சீனா வடக்கே மங்கோலியாவையும் வட கிழக்கில் ரஷ்யாவையும் வட கொரியவையும் கிழக்கில் மஞ்சள், கிழக்கு சீன கடல்களையும் தெற்கே வியட்னாமையும் தென் மேற்கே பாகிஸ்தானையும் எல்லையாக கொண்டது. இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு மேலான பழைமையான வரலாறு கொண்ட சீனா சிறப்பான பண்பாடு மற்றும் நாகரிகம் கொண்டதாகும்.

சீன நாகரீகமானது தோற்றம் பெறுவதில் அதன் இயற்கை வளம் முக்கிய பங்கு வகித்தது. குறிப்பாக நீர் வளத்தினை கூறலாம். அந்த வகையில் குவாங்கோ நதியானது சீன நாகரீக விருத்தியில் முக்கிய பங்கு வகித்தது. இதன் நீளம் 5464 கி.மீ ஆகும். குவாங்கோ என்ற சீனச்சொல்லின் அர்த்தம் துயரம் என்பதாகும். நீர் வளம் நிறைந்த சீனாவில் கோதுமை, நெல், குரக்கன், கரும்பு, பருத்தி முதலியன உற்பத்தி செய்யப்பட்டன. சீன நதிகள் போக்குவரத்துக்கு ஏற்ற பாதைகளாக நதிகள் காணப்பட்டன.   

சீனரை மஞ்சள் இனத்தினர் என்று அழைப்பர். மங்கொலிய இனத்தவர் சீனருடன் கலந்தமையால் சீனரை சிலர் மங்கோலியராக கருதினர். ஆனால் சீனர் ஒரு தனிக்குளுவினராகவே வாழ்கின்ரனர். சீன மொழி பற்றி நோக்கினால் கி.மு 2697 ல் எழுதத் தொடங்கியிருக்கின்ரனர் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்ரனர். மூங்கிலில் சீனர்கள் எழுதப் பழகினர். கி.மு 105 ல் சீனர் கடதாசி, எழுதுகோல் கொண்டு எழுதத் தொடங்கினர். சீன எழுத்துக்கள் கீழிருந்து மேலாகவும் வலமிருந்து இடமாகவும் எழுதப்பட்டன. கி.பி 100 இல் தம் பதங்களைக் கொண்ட அகராதி ஒன்றை இயற்றினர்.

சீனர்கள் சமய நம்பிக்கை கொண்டிருந்தனர். இவர்கள் பல தெய்வங்களை வணங்கினர் என்று கூற முடியது. அவர்கள் ஆதி காலம் தொட்டு தனிக்கடவுள் உண்டு என்ற கொள்கை கொண்டிருந்தனர். கி.மு 6ம் நூற்றாண்டில் கன்பூசிய மதமும் தேயோ மதமும் பரவின. பின்னர் இவ்விரு மதங்களும் செல்வாக்கு இழந்து பௌத்த மதம் வளர்ச்சி பெற்றது.
சீனாவின் பாரம்பரிய பண்பாடு பற்றி பேசும் போது, ஒருவரைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவர் தான் கம்பியூசியஸ். சீன மக்களை பொறுத்தவரையில் கம்பியூசியஸின் செல்வாக்கு முதலிடம் வகிக்கின்றது. கம்பியூசியஸ் சீனாவின் கம்பியூசியஸ் தத்துவத்தை உருவாக்கியவர். உண்மையில் கம்பியூசியஸ் தத்துவம் சீனாவின் பழங்கால தத்துவ இயல் குழுக்களில் ஒன்றாகும். அது ஒரு தத்துவச் சிந்தனையாகும். மதச் சிந்தனை அல்ல. சீனாவின் ஈராயிரத்துக்கும் அதிகமான ஆண்டுகளில் நிலப்பிரபுத்துவ சமூகங்களில் சீராக வளர்ந்துள்ள ஒரு முறையான சிந்தனையாக கருதப்பட்டு நீண்டகாலமாக ஆதிக்கத்தில் இருந்து வருகின்றது. கம்பியூசியஸ் சிந்தனை சீனாவின் பண்பாட்டில் ஆழ்ந்த செல்வாக்கை ஏற்படுத்தியது மட்டுமல்ல, சில ஆசிய நாடுகளிலும் தாக்கத்தை உண்டாக்கியது. இன்று சீனர்கள் கடல் கடந்து அனைத்து நாடுகளிலும் பரந்து வாழ்வதால், கம்பியூசியஸ் சிந்தனையின் செல்வாக்கு சீனாவுக்கு அப்பால் ஆசிய நாடுகளில் பரவியுள்ளது என்று கூறலாம்.