Friday, January 3, 2014

மராட்டியரின் எழுச்சியும் சிவாஜியின் முக்கியத்துவமும்


இந்திய வரலாற்றில் மராட்டியரின் எழுச்சி மிக முக்கிய வரலாற்று நிகழ்ச்சி ஆகும். 17ஆம் நூற்றாண்டில் மராட்டியர் எழுச்சி இடம்பெற்றுக் கொண்டது. மன்னன் ஷாஜி பான்ஸ்லே, சிவாஜி என்போர் மராட்டியர் எழுச்சிக்கு காரணமாயினர். சமகாலத்தில் மொகாலய மன்னர்களினால் வட இந்தியாவில் ஆட்சிமுறை முன்னெடுக்கப்பட்டது. மொகாலய மன்னர்களின் தக்கணம் மீதான தாக்குதல் 17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இடம்பெற்றது. இந்த தாக்குதல்களினைத் தடுக்கும் விதமாக இந்து அரசு ஒன்றினை நிறுவும் தேவை நிமிர்த்தம் பெரு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிக்கான அடித்தளத்தினை மராட்டிய மன்னனான ஷாஜி பான்ஸ்லே இட்டார். அதன் தொடர்ச்சியாக அவரது மகன் சிவாஜி என்பார் மராட்டியரது ஆதிக்கத்தினை வட இந்தியாவில் ஏற்படுத்தலானார்.

மராட்டியர் எழுச்சிக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. மராட்டிய மன்னனான சத்ரபதி சிவாஜியும் அவரின் தந்தை ஷாஜி பான்ஸ்லேயும் மராட்டியர் எழுச்சிக்கு மிக முக்கிய காரணமாய் அமைகின்றனர். மேலும் பல அடிப்படைக் காரணங்களும் கூறப்படுகின்றன. இந்தியாவின் புவியியல் அமைப்பானது மராட்டிய மக்களின் தன்மையையும், மன எழுச்சியையும் உருவாக்கவும், ஊக்குவிக்கவும் துணை புரிந்தது. மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் நருமதை ஆற்றிலிருந்து தக்கண பீட பூமியின் தென்மேற்குப்பகுதி வரை காணப்பட்ட அடர்ந்த காடுகள் கொரில்லா போர் முறையைக் கையாள வழிசமைத்தது.

மராட்டிய நாடு வளம் மிக்கதாகவும் வன்மை மிகக் குன்றாமலும் வளப்பம் மிக்குத் தோன்றாமலும் இடைப்பட்ட நிலையில் இருந்தமையால் அந்நாட்டு மக்கள் பெருமுயற்சி உடையவர்களாக இருந்தனர். கருநாடக சமவெளி, சையாதரி மலைப்பகுதிகள் மராட்டிய நாட்டின் முக்கிய பகுதிகளாக காணப்பட்டன. காடுகள் சூழ்ந்த குன்றங்கள் இயற்கைக் கோட்டைகளாக எதிரிகளிடமிருந்து நாட்டினை பாதுகாத்தன. குன்றும், காடும் நிறைந்த இந்த கடினமான பிரதேசத்தில் ஆங்காங்கு காணப்பட்ட கணவாய்கள் ஊடுருவிச் செல்ல எளிதாயிருந்தன. இத்தகைய இயற்கை அரண்களாலான புவியியல் அமைப்பு மராட்டியரை அந்நியராதிக்கத்திலிருந்து பாதுகாத்தது. இதனை சாதகமாக பயன்படுத்தி மராட்டியர்கள் எழுச்சி பெற்றுக்கொண்டனர்.

14ஆம் 15ஆம் நூற்றாண்டுகளில் வடநாடு பூராக பரவிய பக்தி இயக்கம் 17ஆம் நூற்றாண்டில் மராட்டிய நாட்டிலும் செல்வாக்கு பெற்றுக் கொண்டது. சமகாலத்தில் மக்களின் சமய உணர்ச்சி அதிகரிக்கலானது. ஏசுநாதர், துக்காராம் முதலியோர் இந்து சமய பக்தியின்பால் மக்களைத் தூண்டினர். மக்களிடையே சமயத்தின்பால் பற்று ஏற்படலாயிற்று. பக்தி இயக்கமானது சமயத்தினை அடிப்படையாக கொண்டு இந்துக்களை மராட்டிய நாட்டில் ஒன்றுபடுத்திற்று. மராட்டியர் இலக்கியமானது பொதுமக்களும் கற்றுணருகின்ற வகையில் எழுதப்பட்டது. இவ்விலக்கியத்தின் மூலம் மக்கள் மராட்டிய தேசியத்தை வளர்த்துக்கொண்டனர். மராட்டியரிடையே காணப்பட்ட வீர உணர்வும் சமயத்தினைக் காக்க வேண்டும் என்ற பற்றும் மராட்டியரை வலுப்படுத்தியது. வீர உணர்வானது மறுமலர்ச்சியின் வெளிப்பாடாகவும், போரில் ஈடுபாடு கொண்ட இந்து சமயத்தின் புறத்தோற்றமாகவும் தோன்றியது. ராமதாஸர் என்பாரும் இந்து தர்மத்தினைக் பாதுகாத்து அதற்கு புத்துயிர் அளித்து அதனை புதியதொரு சக்தியாக மாற்றியமைத்தார். இவரது செயற்பாடுகள் இந்துக்களிடத்து ஊக்கத்தை அளித்ததுடன் முஸ்லிம்களின் ஆதிக்கத்தினை மட்டுப்படுத்தும் எண்ணம் தோன்றவும் காரணமாயிற்று.