Tuesday, March 4, 2014

சிந்துவெளி நாகரிகம்


சிந்து சமவெளி கால நகரங்கள் அற்புதமாகத் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டிருந்தன.  ஒவ்வொரு நகரத்திலும் இரண்டு பகுதிகள்: ஒரு பகுதி தரை மட்டத்தில், இன்னொரு பகுதி செயற்கையாக உருவாக்கப்பட்ட குன்றின்மேல். இரு பகுதிகளையும் கோட்டைகள் பிரித்தன. உயரத்தில் இருந்த பகுதி அக்ரோப்போலிஸ் என்று அழைக்கப்பட்டது.  இங்கே, பொதுமக்கள் கூடும் அரங்கங்கள், கோயில்கள் , நெற்களஞ்சியங்கள் இருக்கும். மொஹெஞ்சதாரோ நகரத்தில் பொதுக் குளியலறை இருந்தது.

தரைமட்டப் பகுதிதான் மக்கள் வசிக்கும் இடம். இங்கே சாலைகள் 30 மீட்டர் அடி அகலம் கொண்டவை. எல்லாச் சாலைகளும் செங்குத்தாகச் சந்தித்தன. இதனால், சாலைகளுக்கு நடுவே இருந்த பகுதிகள் செவ்வக வடிவம் கொண்டவை.  இந்தப் பகுதிகளில் வீடுகள் கட்டப்பட்டன.  கட்டுமானத்துக்கு உலையில் சுடப்பட்ட செங்கற்களைப் பயன்படுத்தினார்கள். இவை 1:2:4 என்னும் விகிதத்தில் உயரம், அகலம், நீளம் என சமச் சீரானவை. ஒரு சில வீடுகள் மிகப் பெரியவை. மாடி வீடுகளும் இருந்தன. பெரிய வீடுகளில் விசாலமான முற்றம் இருந்தது.

பண்டைய நாகரிகங்களில் சிந்து சமவெளியில்தான் மிகச் சிறந்த சுகாதார வசதிகள் இருந்தன. எல்லா வீடுகளிலும், குடிநீர் வசதிகளும், குளியல் அறைகளும், கழிப்பறைகளும் இருந்தன.  ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா? நகரங்களில் கழிவுநீர் வடிகால் அமைப்பு இருந்தது. எல்லா வீதிகளிலும் மூடிய சாக்கடைகள் இருந்தன. வீடுகளின் அசுத்த நீர் இவற்றில் சென்று சேரக் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தன.  5000 வருடங்களுக்கு முன்னால், இத்தனை கச்சிதமாகத் திட்டமிடப்பட்ட நகரங்களும், வீடுகளுமா?
நெற்களஞ்சியங்கள் பிரம்மாண்டமானவை – 150 அடி நீளம், 75 அடி அகலம், 15 அடி உயரம். அதாவது, 1,68.750 அடி கொள்ளளவு. இவற்றுள் 3 வரிசைகள், 27 சேமிப்புக் கிடங்குகள்! இந்து சமவெளியின் விவசாயச் செழிப்புக்கு வேறென்ன ஆதாரம் வேண்டும்.

இன்னொரு முக்கிய அம்சம், பொதுக் குளிப்பிடங்கள். வட்டச் சுவர்கொண்ட உயரமான கிணறுகள், படிக்கட்டுகளுடன் நீள்சதுரப் பொதுக் குளியல் துறைகள், அதைச்சுற்றிலும் சிறிய குளியல் அறைகள்.  இவற்றுள் பிரம்மாண்டம், மொஹெஞ்சதாரோவில் இருந்த பெரும் குளியலறை (கிரேட் பாத்) 179 அடி நீளமும், 107 அடி அகலமும் கொண்ட பகுதி இது. மையத்தில் 39 அடி நீளம், 23 அடி அகலம், 8 அடி ஆழம் கொண்ட நீச்சல் குளம். அடியில் தண்ணீர் தேங்கி நிற்பதற்காகச் செங்கற்கள் நெருக்கமாகப் பதிக்கப்பட்டிருந்தன. குளத்தின் உள்ளே ஏறி, இறங்க வசதியாக இரண்டு பக்கங்களிலும் படிக்கட்டுகள் இருந்தன.

குளத்தைச் சுற்றி ஆடைகள் மாற்றுவதற்கான அறைகள் இருந்தன. அவற்றில்  கிணறுகள் இருந்தன. கிணறுகளுக்குள் தண்ணீர் இறைத்துக் குளத்துக்குள் பாய்ச்சலாம். குளத்தின் அழுக்கு நீரை வெளியேற்ற வடிகால் குழாய்கள் இருந்தன. நகரங்களில் இருந்த கட்டடங்கள் வியக்க வைப்பவை. சுட்ட செங்கற்களால் அமைக்கப்பட்ட இவற்றில், சிமெண்ட் போன்ற சுண்ணாம்பும், செம்மண்ணும் சேர்ந்த ஒரு கலவையைப் பயன்படுத்தினார்கள். அருகருகே இரண்டு செங்கற்களை வைத்து, அவற்றின் நடுவே இன்னொரு செங்கல்லைப் பொருத்தி, கலவையைப் பூசினார்கள். உறுதியான கட்டடங்களை உருவாக்கும் இந்தப் பொறியியல் அறிவு நம்மை வியக்கவைக்கிறது.
நகரங்களுக்கு வெளியே, விசாலமான கோட்டைகள் இருந்தன. அவற்றுக்குள்ளும் வீடுகள் – சில மிகப் பெரியவை, பல சிறியவை. வெள்ளம், எதிரிகள் தாக்குதல் ஆகியவை நடந்தால், தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, ஆட்சிபீடத்தில் இருந்தவர்கள் இந்தக் கோட்டைவீடுகளைப் பயன்படுத்தியிருக்கலாம்.

கிரோக்கத்தில் ஒலிம்பிக்



கிரேக்கம் ஒரே நாடாக இருந்தபோதிலும், ஆட்சிமுறை நகர ராஜ்ஜியங்களுக்கிடையே மாறுபட்டது. உதாரணமாக, ஸ்பார்ட்டாவில் மன்னராட்சி: ஏதென்ஸில் கி.மு. 1066 வரை மன்னராட்சி இருந்தது. இதற்குப் பிறகு, மாஜிஸ்ட்ரேட் நகர ராஜ்ஜியத் தலைவரானார், மக்களாட்சி மலர்ந்தது. இந்த முறையில், உயர் குடியினர் மட்டுமே வாக்குரிமை பெற்றவர்கள். இவர்களுள், ஓட்டளிக்க இருபது வயது ஆகவேண்டும். இரண்டு சபைகள் இருந்தன. போலே (Boule) என்பது மேல்சபை. கீழ்ச்சபையின் பெயர் எக்ளீஸியா (Eclesia).

மேல்சபையின் அங்கத்தினர் எண்ணிக்கை 500. கிரேக்கத்தில் பத்து வகை மரபுக் குடியினர் இருந்தார்கள், ஒவ்வொரு மரபிலிருந்தும் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் 50 அங்கத்தினர்கள் குலுக்கல் முறையில் போலே அங்கத்தினர்களாத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்களின் பதவிக் காலம் ஒரு வருடம், எக்ளீஷியா விவாதிக்க வேண்டிய முக்கிய பிரச்னைகள் எவை என்று போலே வடிகட்டி முடிவுசெய்யும். இவை மட்டுமே எக்ளீஷியாவின் பரிசீலனைக்கு வரும். மேல்சபை நாட்டு விடுமுறை தவிர்த்த மீதி எல்லா நாள்களிலும் சந்திக்கும்.

எக்ளீஸியாவில்  இரண்டு வருட ராணுவ அனுபவம் பெற்ற வாக்குரிமை பெற்ற அனைவரும் உறுப்பினர் ஆகமுடியும். எக்ளீஸியா நாற்பது நாள்களுக்கு ஒரு முறை கூடும். எல்லோரும் பேசலாம். பிரச்னைகளை விவாதித்தபின் கை தூக்கல் மூலம் வாக்கு எடுக்கப்படும். சில சமயங்களில் ரகசிய வாக்கெடுப்பும் நடப்பதுண்டு.

எக்ளீஷியாவில் 40,000 அங்கத்தினர்கள் இருந்தார்கள். குறைந்தபட்சம் 6000 பேர் வந்தால்தான் கூடம் நடத்தலாம். கூட்டம் குறைவாக இருந்தால், 300 அடிமைகள் கைகளில் சிவப்பு நிறத்தில் முக்கிய நீளக் கயிற்றைச் சுழற்றியபடியே நகரின் வீதிகளை வலம் வருவார்கள். யார் மேலெல்லாம் கயிறு  பட்டதோ, அவர்கள் உடனே கூட்டத்துக்கு வரவேண்டும், அல்லது அபராதம் கட்டவேண்டும்.

எக்ளேஷியாவுக்கு ஏகப்பட்ட அதிகாரங்கள் இருந்தன. அண்டை நாடுகளோடு சண்டை அல்லது சமாதானத்துக்கான முயற்சிகள், வெளிநாட்டுக் கொள்கை, ஏற்றுமதி இறக்குமதி உறவுகள் ஏற்படுத்துதல், நாட்டின் வரவு செலவுக் கணக்கை நிர்வகித்தல், ராணுவ நிர்வாகம், மக்கள் நலத் திட்டங்கள் வகுத்தல், நிறைவேற்றல், மதம் தொடர்பான செயல்கள், குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகள் போன்றவை எக்ளேஷியாவின் முக்கியப் பொறுப்புகள். எக்ளேஷியா வருடத்துக்கு நாற்பது நாள்கள் கூடும். கூட்டம் திறந்த வெளி மைதானத்தில் நடக்கும்.  அதிகாலையில் பூசையோடு தொடங்கும், அடுத்து மிருக பலி. கூட்டத்தில் வரி பாக்கி வைத்திருப்பவர்கள், ஒழுக்கமற்றவர்கள், குற்றவாளிகள், பெற்றோரைப் புறக்கணித்தவர்கள், யுத்தங்களில் பங்கேற்காமல் நழுவியவர்கள் ஆகியோர் பேச அனுமதிக்கப்படமாட்டார்கள். பிறர் யார் வேண்டுமானாலும் பங்கேற்று தங்கள் கருத்துக்களைச் சொல்லலாம்.

நிர்வாகத்தில் ராணுவம் மிக முக்கியமானது. ஸ்ட்ராட்டகோய் (Strategoi) என்பது ராணுவத் தளபதி பதவி. ஒவ்வொரு மரபுக்கும் ஒருவராகப் பத்துத் தளபதிகள் நியமிக்கப்பட்டார்கள். தேர்தல்மூலம் பதவி பெற்ற இவர்களின் ஆட்சிக் காலம் ஒரு வருடம்.  ராணுவ நிர்வாகம், வீரர்கள் பயிற்சி, தளவாடங்கள் திட்டமிடுதல், வாங்குதல், ராணுவக் கணக்கு வழக்குகள், பிற நகர ராஜ்ஜியங்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்துதல் போன்றவை ஸ்டாரட்டகோய்களின் கடமைகள்.