Friday, August 15, 2014

அக்பர் (1542 –1605)

இந்தியாவில் ஆட்சி செய்த மன்னர்களுள் அக்பரும் தலை சிறந்த மன்னனாகக் கொள்ளப்படுகிறார். மொகாலய பேரரசினை நிறுவுவதில் அக்பரின் பங்களிப்பானது அளப்பரியதாகும். தமது பெருமுயற்சியால் ஒரு பேரரசினை நிறுவி, அதனை ஐம்பது ஆண்டுகள் சிறப்பான முறையில் ஆட்சி செய்தார். இவரது நிருவாகம், அரசியல் நடவடிக்கைகள், சமயக் கொள்கை, வெளிநாட்டுக் கொள்கை, சமூக மற்றும் பொருளாதார ரீதியான பங்களிப்பு, கலைத்துறைசார் பங்களிப்பு என இவரது ஆட்சி பல முக்கியத்துவ அம்சங்களை உள்ளடக்கியது.

அக்பர் சிந்து மாவட்ட அமரர் கோட்டம் என்ற இடத்தில் உமாயூன், ஹமீதா பானு பேகம் தம்பதியினருக்கு கி.பி1542 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 15ஆம் திகதி மகனாகப் பிறந்தார். பிறந்ததும் அக்பருக்கு பெற்றோர் இட்ட பெயர் பாருக்தீன் என்பதாகும். பின்னர் அவரை ஜலாலுதீன் முகம்மது அக்பர் என அழைத்தனர். அக்பர் பிறந்த சமகாலத்தில் தந்தை உமாயூன் தன் நாட்டினை இழந்திருந்தார். தனது குடும்பத்தை காந்தஹாரில் இருக்கும்படி பணித்துவிட்டு உமாயூன் பாரசீகம் சென்றார். பாரசீக மன்னரின் உதவியுடன் தன் இளவல் அஸ்காரியை வென்று காந்தஹாரினைக் கைப்பற்றிக் கொண்டார். 1545 முதல் அக்பர் தனது தந்தையின் பராமரிப்பில் வளர்ந்தார். அக்பர் படிப்பில் நாட்டம் கொள்ளவில்லை. அதேவேளை வேட்டையாடல், போர்ப்பயிற்சி செய்தலில் ஆர்வம் காட்டினார். 

உமாயூனின் சகோதரன் ஹிண்டால் மடிந்தபோது அக்பர் (9ஆவது வயதில்) கஜினியின் ஆளுநராக நியமனம் பெற்றதுடன் ஹிண்டாலின் மகளையும் திருமணம் செய்தார். உமாயூன் டெல்லியின் அரசனானதும் (கி.பி1555) அக்பர் லாகூரின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இளம் வயதான அக்பரின் பாதுகாவலனாக பைராம்கான் அமர்த்தப்பட்டான். உமாயூன் 1556 ஆம் ஆண்டு இறந்தபோது ஆட்சிப் பொறுப்புக்கள் அக்பரிடம் வந்து சேர்ந்தது. 1556 ஆம் ஆண்டு மாசி மாதம் 14ஆம் திகதி அக்பர் டெல்லியின் அரசனாக முடிசூடிக்கொண்டார். 

அக்பர் ஆட்சிப்பீடம் ஏறியபோது பல சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. உமாயூன் இறந்தபோது டெல்லி, ஆக்ரா பகுதிகளை ஹேமு (அடில்ஷாவின் தளகர்த்தா) என்பான் கைப்பற்றிக் கொண்டான். பஞ்சாப் தனக்கு சொந்தமென சிகந்தர் ஷா என்பான் உரிமை பாராட்டினான். மிர்ஸா ஹகீம் என்பான் (அக்பரின் உறவினன்) காபுலில் தனியரசர் போல் ஆட்சியை முன்னெடுத்தான். முகம்மது அடில் ஷா, இப்ராஹிம் ஷா என்போர் அக்பரது ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டனர். பிற மாநிலங்களை ஆட்சி செய்தவர்களும் அக்பருக்கு கட்டுப்படாது செயற்படத் தொடங்கினர். இரண்டு ஆண்டுகள் இடைவிடாத போரினால் நாட்டிலும் பஞ்சம் மலிந்தது. இவை பதின்மூன்று வயது மட்டுமே நிரம்பிய அக்பருக்கு பெரும் சவாலாக காணப்பட்டன. இருப்பினும் பாதுகாவலர் பைராம்கானின் துணையுடன் நாட்டின் ஆட்சியை சிறப்புற நடத்த முயன்றார்.

அக்பரது சிறப்பினை அறிந்து கொள்ள அவரது ஆட்சிமுறை பற்றி நோக்குவது சாலச்சிறந்தது. அவரது ஆட்சி அரேபிய, பாரசீக ஆட்சிமுறைகளைப் பின்பற்றியதாய் அமைந்திருந்தது. துறைகளின் அமைப்பு, மத்திய மற்றும் மாநில ஆட்சியாளர்களின் அதிகார வரம்புகள் முதலானவை அயல்நாட்டு தொடர்பினால் ஏற்பட்டவையாகும். அரசாங்க அலுவல்கள் பற்றிய முடக்கல் போக்கு வரவுகள் அதிகமிருந்தமையால் இதனை 'எழுது தாளினாலான ஆட்சி' என்றும் கூறுகின்றனர்.

அக்பர் நிருவாகத் தலைவராக காணப்பட்டர். சகல துறைகளும் இவருக்குக் கட்டுப்பட்டு செயற்பட்டன. தனக்கு நிருவாக விடையங்களில் உதவிபுரிய அமைச்சரவை ஒன்றினைக் கொண்டிருந்தார். அமைச்சரவையில் முதலமைச்சர், நிதியமைச்சர், இராணுவ அதிகாரி, சமயத்துறை அமைச்சர், தலைமை நீதிபதி, முதலானோர் இடம்பெறுவர். அவர்களின் நியமனம், ஊதியம், பதவி உயர்வு, பதவி நீக்கம் தொடர்பான அதிகாரங்கள் யாவும் மன்னரிடமே காணப்பட்டது. அக்பரிற்கு ஆலோசனைகள் கூற மஜ்லிஸ் என்ற சபை காணப்பட்டது. ஆட்சிமுறைச் செய்திகள், இராணுவ அலுவல்கள், பொதுச்செய்திகள் தொடர்பான ஆலோசனைகளையும் முடிவுகளையும் கூற மொத்தம் இருபது உறுப்பினர் கொண்ட மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு மஜ்லிஸ் சபை செயற்பட்டது.

மாநில நிருவாக அமைப்பினை நோக்குவோமாயின் அரசானது பதினைந்து மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. இவை 'சுபாக்கள்' என்று அழைக்கப்பட்டன. சுபாவின் அதிகார் 'சுபேதார்' என அழைக்கப்பட்டார். இவரின் கீழ் திவான், சதர், அமில், பிடிக்சி, போஸ்தார் முதலிய அதிகாரிகள் பணியாற்றினர். ஒவ்வொரு மாநிலமும் பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இதில் பௌஜ்தார், அமால் குஸார், பிடிக்ச்சி, வட்ட அதிகாரிகள் முதலானோர் காணப்பட்டனர். இதை விடுத்து கருவூலக் காப்பாளரும் காணப்பட்டார். இவருக்கு பொருளாளர் என்ற பிறிதொரு பெயரும் உண்டு.

நகராட்சி முறையினை நோக்குமிடத்து அதில் 'கொத்வால்' என்ற அதிகாரி முக்கியத்துவப்படுத்தப்படுகிறார். கொத்வால் மத்திய அரசால் நியமிக்கப்படுவார். இவர் சிறு நகராட்சிகளைக் கவனிக்க மாவட்ட வருவாய் அதிகாரிகளை நியமிப்பார். நகரங்கள் ஒவ்வொன்றும் பல வட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வட்டமும் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அதற்கு பொறுப்பாக அதிகாரிகளை கொத்வால் நியமிப்பார். நகரினை கண்காணித்தல், விலை நிர்ணயத்தை பேணல், குற்றச் செயல்களைத் தடுத்தல், இறைச்சிக் கடைகளைக் கட்டுப்படுத்தல் என பல கடமைகளில் கொத்வால் கவனம் செலுத்த வேண்டும்.

தன்னாட்சி ஊர் பொதுநல மன்றங்களின் சிறப்பான செயற்பாடானது அக்பரது ஆட்சியிலேயே வெளிப்படுத்தப்பட்டது. ஏனெனில் சுல்தானியராட்சியில் இம்முறை காணப்பட்டிருந்தாலும் இம்மன்றங்களிலிருந்து வருமானம் கிடைக்காமையால் சுல்தானியர்கள் அதனை தனித்தியங்க விட்டனர். ஆனால் அக்பர் ஊர் ஐவராயங்களை சட்டப்படி அனுமதித்தார். அக்பரது தலையீட்டால் ஊராட்சி மன்றங்கள் தகுதி, மதிப்பு பெற்றன. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பொது நலமன்றம் ஒன்று காணப்பட்டது. அம்மன்ற நிருவாகக் குழுவில் ஒவ்வொரு வீட்டுத் தலைவரும் காணப்பட்டனர். ஊர் பொது நிருவாகம், பாதுகாப்பு, துப்பரவு, நீதி, நீர்ப்பாசனம், மருத்துவம் என பல தரப்பட்ட பணிகளை இம்மன்றங்கள் புரிந்தன.

முப்பதாண்டு யுத்தம்(1618-1648)

ஐரோப்பிய வரலாற்றிலே பல புரட்சிகள், போர்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக சமய அடிப்படையில் சிலுவைப்போர், நெதர்லாந்துப்புரட்சி அதே போல் முப்பதாண்டு யுத்தம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இதில் முப்பதாண்டு யுத்தமானது தனிச்சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இப்போரானது சமயப் போரின் இறுதிப் போராகவும், அரசியல் போரின் ஆரம்பப் போராகவும் காணப்படுகிறது. இது கத்தோலிக்கத்தவருக்கும், புரட்டஸ்தாந்தினருக்கும் இடையிலான போராக கொள்ளப்படுகிறது.

சமயப் போராக உருவெடுத்து அரசியல் போராக மாற்றமடைந்த இந்த யுத்தமானது கி.பி1618- கி.பி1648 வரையான முப்பது ஆண்டுகள் நடைபெற்ற காரணத்தினால் முப்பதாண்டு யுத்தம் எனக் கொள்ளப்படுகிறது. கத்தோலிக்க மற்றும் புரட்டஸ்தாந்து சமயச் சார்பில் கூலிப் படையினரே இரு புறமும் பங்குபற்றினர். போரில் ஈடுபட்டவரை விட சாதாரண மக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். பேரரசிற்கும் ஜேர்மனிக்குமிடையிலான போராக இது காணப்படுகிறது.

முப்பதாண்டு யுத்தமானது உரோமப் பேரரசின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டிருப்பினும் பின்னர் படிப்படியாக ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்கும் பரவிக்கொள்கிறது. போரின் போது கத்தோலிக்க சமயச் சார்பாக ஸ்பெயினும் ஆஸ்திரியாவும் பங்கு கொண்டன. கி.பி 1635 இல் ஆதிக்கப் போராக மாறி பின்னர் அரசியல் போராக மாறிக்கொள்கிறது. இறுதியில் ஹப்ஸ்பேர்க் குடும்பத்திற்கும், பூபன் குடும்பத்திற்குமிடையிலான போராக மாறியதென்பது குறிப்பிடத்தக்கது.

போர் ஒன்று ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளும், துணைக் காரணிகளும், உடனடிக் காரணிகளும் பங்கு வகிப்பதனை பல போர்களின் வாயிலாக நாம் அறிந்ததே. இந்த போரிலும் பல காரணிகள் ஏதுவாய் அமைந்தன. அதனை நாம் நோக்குவது சாலச் சிறந்தது. இப்போர் ஏற்பட கத்தோலிக்க சமயத்தவரும், பேரரசும் சேர்ந்து புரட்டஸ்தாந்து சமய மக்களை கொடுமைப்படுத்தியமையே காரணம் எனலாம். அத்துடன் மேலும் பல காரணிகளும் முப்பதாண்டு யுத்தத்திற்கு வழிகோலின.

புனித ரோமானியப் பேரரசர் ஐந்தாம் சார்ள்ஸின் ஆட்சிக் காலப் பகுதியில் ஜேர்மனிய சிற்றரசுகள் தம் பகுதியினருக்கு சமயச் சுதந்திரம் வேண்டும் எனக் கோரி கிளர்ச்சி செய்த போது கிளர்ச்சியை தவிர்க்க ஐந்தாம் சார்ள்ஸ் கி.பி 1555இல் சமாதான உடன்படிக்கையினை செய்தான். இதனால் ஜேர்மனியின் 300 இற்கு மேற்பட்ட சிற்றரசுகளுக்கு சமய விடயங்களில் சுதந்திரம் வழங்கப்பட்டது. ஆனால் கல்வினிய சமயத்தவர்க்கு சலுகைகள் எதனையும் வழங்கவில்லை. இதற்குக் காரணம் இவ்வுடன்படிக்கை ஏற்பட்ட காலத்தில் கல்வினிச சமயமானது பரவியிருக்கவில்லை. அத்துடன் கல்வினிச சமயத்திற்கு மாறியவர்கள் சட்டத்தின் பாதுகாவலை பெறத்தவறியதுடன், கத்தோலிக்க சமயத்தவருடன் பகைமையையும் கொண்டனர். இவ்வாறு ஏற்பட்டுக்கொண்ட சமயப் போட்டிகள் பிற்காலத்தில் போர் ஒன்று ஏற்பட வழிவகுத்தது.

கத்தோலிக்கர்கள் தங்களின் வழியில் புரட்டஸ்தாந்தினரை ஈடுபடுத்த முற்பட்ட போதும் அவர்கள் இதற்கு இசைந்து கொடுக்காமல் கி.பி 1552இல் கொண்டுவந்த நுஉஉடநளயைளவiஉயட சுநளநசஎயவழைn விதியின் முறைப்படி கத்தோலிக்கரின் சொத்துகளைப் பறிமுதல் செய்யக் கூடாது என்று கூறப்பட்டதை மீறி புரட்டஸ்தாந்தர்கள் கத்தோலிக்கரின் குருமடங்கள், சமயத்தலைவர்களின் அலுவலகங்கள், கட்டிடங்கள் முதலானவற்றை தமது உலகியல் தேவைகளுக்கு பயன்படுத்தத் தொடங்கினர். பெரிய நிலப்பரப்பு, கட்டிடங்கள் நடைமுறையில் புரட்டஸ்தாந்தினரின் உடமைகள் ஆகின. இந்த நடவடிக்கையானது சட்டத்திற்கெதிரானதென கத்தோலிக்கள் கூறியமை போட்டியை அதிகரித்தது.

ஐந்தாம் சார்ள்ஸின் பின்னர் வந்த முதலாம் பேடினண்ட், இரண்டாம் மக்ஸிமில்லியன் என்போர் மிதவாதிகளாக காணப்பட்டனர். இவர்கள் ஓரளவு சமயப் பொறையைக் கடைப்பிடித்தனர். இதனால் புரட்டஸ்தாந்து சமயமானது வெகு விரைவாக மக்களிடையே பெரு வளர்ச்சி பெற்று கத்தோலிக்க சமயத்திற்கு அச்சுறுத்தல் விடுத்தது. மேலும் இவர்களின் காலப்படுதியில் போர்கள் தவிர்க்கப்பட்டமையால் புரட்டஸ்தாந்தர்கள் தீவிரமாக செயற்பட இடமளிக்கப்பட்டது. குறிப்பாக பதினாறாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்திலும், பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலுமே கல்வினிசம் துரிதமாக வளர்ச்சி பெற்றது. இதனைத் தமக்கு பாதகமாக கருதிய கத்தோலிக்க மக்கள் புரட்டஸ்தாந்து மக்களுடன் முரண்படத் தொடங்கினர். 
ஜேர்மனியில் ஏற்பட்டுக் கொண்ட எதிர் சீர்திருத்த இயக்கமானது படிப்படையாக வலுவடைந்தது. இரண்டாம் ருடொல்ப்பின் காலம் வரை(1576-1612) இவ்வியக்கம் ஜேர்மனியில் தழைக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பவேரியா, வியன்னா ஆகிய நாடுகளின் பேரவைகளில் மேலாட்சி  உரிமை பெற்று ஆளும் இனத்தவர்கள் ஹப்ஸ்பேர்க் இனத்தவரை விட கத்தோலிக்க சமயத்தில் அதிக ஆர்வமும், அக்கறையும் கொண்டிருந்தனர். இவர்களுடன் கத்தோலிக்க தொண்டர்களின் செயற்பாடுகளும் போரிற்கு காரணமாகியது. யேசு சபையின் செயற்பாடுகள், டிரண்ட் சபையின் செயற்பாடுகள் என்பனவற்றால் ஜேர்மனியில் உள்ள பல கத்தோலிக்க நாடுகளில் உற்சாகம், புத்துணர்வு, சமயப் பற்று என்பன ஏற்பட காரணமாகின. ஜெஸ்யூட் குருமார்கள் பாடசாலைகளையும், வைத்திய சாலைகளையும் நிறுவி சேவை செய்தனர். மேலும் பவேரிய மன்னன் மக்ஸிமில்லியனின் உதவியுடன் கத்தோலிக்க சமயமானது அவரது நாட்டில் வளர்ச்சி பெற்றது. இவனால் கத்தோலிக்க சமயத்தினைச் சேராதவர்கள் நாட்டினை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதனால் வெறுப்புற்ற புரட்டஸ்தாந்தினர் போரிற்குத் தயாராகினர்.

டன்யூப் பகுதியில் உரோமப் பேரரசைச் சேர்ந்த ஒரு சுதந்திர நாடாக டொனோளவேர்த் காணப்பட்டது. அது ஜேர்மனிய சட்ட சபையில் அங்கத்துவமும் வகித்தது. இந்த சுதந்திர நாட்டில் கத்தோலிக்க சமயத்துடன் புரட்டஸ்தாந்து சமயமும் காணப்பட்டது. கத்தோலிக்க சமயக் கொள்கை விடாப்பிடியர்கள் கி.பி1606 இல் கத்தோலிக்க சமய ஊர்வலம் ஒன்றை இந்த நாட்டில் நடத்தினர். ஈற்றில் ஆர்ப்பாட்டமானது கலவரமாக முடிந்தது. அதாவது இவ்வூர்வலத்தை புரட்டஸ்தாந்தினர் கலைத்தனர். இதனால் சமயங்களிடையிலான முறுகல் நிலை வீரியமடைந்தது. கோபமடைந்த கத்தோலிக்க மக்கள் மன்னன் ருடால்பிடம் முறையிட்டனர். ருடால்ப் அந்த நகரினை பேரரசினுள் உட்படுத்தினர். இதனை சாதகமாகக் கொண்டு பவேரிய மன்னன் மக்ஸிமில்லியன் அதனை வலுக்கட்டாயமாக கத்தோலிக்க நாடாக மாற்றினான். இச் செயலானது புரட்டஸ்தாந்து மக்களிடையில் வெறுப்பை அதிகரித்தது.

கி.பி1608 இல் ஒரு புரட்டஸ்தாந்து சங்கமொன்றினை புரட்டஸ்தாந்தினர் ஏற்படித்தினர். டொனள்வேர்த்தில் ஏற்பட்ட அவமானம் மீண்டும் ஏற்படக் கூடாது என்பதே இதற்கான காரணமாகும். இவ்வமைப்பு 'இவான் ஜெலிக்கல் யூனியன்' (கிறிஸ்தவ செய்தி பரப்பும் சங்கம்) என அழைக்கப்பட்டது. இதில் கல்வீனிய சமயத்தினைத் தழுவிய பல இராச்சியங்கள் இணைந்தமை குறிப்பிடத்தக்கது. இதைக் கண்ட கத்தோலிக்கர்கள் தாங்களும் சங்கமொன்றினை அமைக்க தீர்மானித்தனர். கி.பி 1609இல் மக்ஸிமில்லியன் தலைமையில் 'கத்தோலிக்க கூட்டுறவு' என்ற சங்கத்தை நிறுவினர். இதன் நடவடிக்கைகள் புரட்டஸ்தாந்து சமயத்தை நசுக்கும் வகையில் அமைந்தன. இச்செயற்பாடு சமயங்களிடையில் வேற்றுமையினை மேலும் அதிகரித்தது. 
அரசியல் காரணங்களும் போர் ஏற்படக் காரணமாகின. ஐரோப்பிய போரரசனாக காணப்பட்ட இரண்டாம் ருடால்ப் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தமையால் அவனின் சகோதரன் அரசாட்சி செய்தான். இந்த செயற்பாடானது அரசியலில் ஸ்திரமற்ற தன்மையினை தோற்றுவித்தது. மேலும் இக்காலப் பகுதியில் ஐரோப்பாவில் ஆட்சி செய்த முதலாம் பேடினண்ட், மத்தியஸ், இரண்டாம் மக்ஸிமில்லியன் , ருடால்ப் போன்றோர் திறமையற்ற அரசர்களாக விளங்கியமை யுத்தத்திற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியது. இவர்களது செயற்பாட்டால் அரசியல், சமூக, பொருளாதார விடயங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதன் விளைவாக உள்நாட்டில் போர், அயல் நாட்டுத் தலையீடுகள், ஆதிக்கங்கள் முதலியன ஏற்படக் காரணமாகின.

அனுராதபுர ஆட்சியாளர்களும் அவர்கள் நீர்ப்பாசனத்திற்கு செய்த பங்களிப்புக்களும்


இலங்கை வரலாறு தலைநகரங்களை அடிப்படையாக கொண்டதாக காணப்படுவது சிறப்பாகும். இவ்வாறான அரசியல் வரலாற்றில் அனுராதபுரத்திற்கு தனிச் சிறப்பிடம் வழங்கப்படுகிறது. இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட முதலாவது இராசதானியாக அனுராதபுர இராசதானி காணப்படுகிறது. இதன் முக்கிய சிறப்பாக கூறப்படுவது நீர்ப்பாசன தொழினுட்பவியல் வளர்ச்சி மிக உன்னத நிலையினை அடைந்தமையாகும். இவ்வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றியவர்களாக சமகால மன்னர்களைக் கூறலாம். 

அனுராதபுரத்தினை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னர்கள் பற்றி நோக்குமிடத்து, அனுராதபுர இராசதானியானது மிக நீண்ட காலம் நிலைபெற்றிருந்தமையினால் ஏராளமான மன்னர்கள் அதனை ஆட்சி செய்தனர் என்பது நோக்கத்தக்கது. அவர்களை பற்றி அறிந்துகொள்ள எமக்கு உதவும் மிக முக்கிய வரலாற்று நூலாய் அமைவது மகாவம்சமாகும். இந்நூலின் அடிப்படையிலேயே அனுராதபுர இராசதானியின் மன்னர்களினை வரிசைப்படுத்தி நோக்கமுடியும் என்பது இந்நூலின் சிறப்பாகும். 

எமக்கு கிடைக்கின்ற மூலாதார சான்றுகளின் அடிப்படையில் நோக்குவோமாயின் அரசனே நிருவாக அதிபதியாக விளங்கினான் என்பது கண்கூடு. அரச உரிமைகள் பரம்பரை பரம்பரையாக பின்பற்றப்பட்டு வந்த மரபுகளின் அடிப்படையில் பின்பற்றப்பட்டது. அரசியல் ஸ்தாபனங்கள், அவற்றின் ஆரம்பத்தினை பார்ப்பின் அவை ஆரியரின் வருகையுடன் ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. ஆதியில் இங்கு குடியேறிய ஆரியரது நேரடி சந்ததி என்று கூறிக்கொண்டோரே வரலாற்றின் ஆரம்பத்தில் அனுராதபுரத்தில் ஏகத்தலைவர்களாக விளங்கினர். அனுராதபுர இராசதானியின் முதல் மன்னனாக பண்டுகாபயன் கொள்ளப்படுகிறான். பண்டுகாபய மன்னனால் தலைநகராக தெரிந்தெடுக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட அனுராதபுரம் இலங்கையின் கோனாட்சியின் முதல் உத்தியோகபூர்வ தலைநகரம் என்று புகழப்படுவது இங்கு நோக்கத்தக்கது.

அனுராதபுரத்தினை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த மன்னர்களினை பட்டியல்படுத்தி நோக்குவது இலங்கை வரலாற்றின் தொடர் தன்மையினை அறிய அவசியமாகின்றது. அந்த வகையில் முதல் மன்னனாக நோக்கப்படுபவன் பண்டுகாபயனாவான். இவன் கி.மு 437இல் முதல் உத்தியோகபூர்வ தலைநகரமாக அனுராதபுரத்தினை தெரிவுசெய்து ஆட்சி செய்தான். இவனிற்குப் பின் அவனது மகனான மூத்தசிவன் கி.மு 367இலும், அவனது மகனான தேவநம்பிய தீசன் கி.மு 307 இலும், உத்தியன், மகாசிவன் சூரதீசன் ஆகியோர் முறையே கி.மு 267, கி.மு 257, கி.மு 247 ஆகிய ஆண்டுகளிலும் அதனைத் தொடர்ந்து அந்நிய நாட்டவர்களான குதிரை வியாபாரிகளாக வந்து ஆட்சியினைக் கைப்பற்றிய சேனனும் குத்திகனும் கி.மு 237இல் ஆட்சியக் கைப்பற்றினர் என்பது கூறத்தக்கது.

சேனனும் குத்திகன் என்ற அந்நிய நாட்டவர்களிடமிருந்து ஆட்சியினைக் கைப்பற்றி அசேல மன்னன் கி.மு 215 இல் ஆட்சியினைக் கைப்பற்றியாண்டான். அசேலனைக் கொன்று சோழ மன்னனான எல்லாளன் கி.மு 205இல் ஆட்சியினைக் கைப்பற்றி 44 ஆண்டுகள் இலங்கையினை ஆட்சி செய்தான். எல்லாளனைக் கொன்று துட்டகாமினி கி.மு161 இல் ஆட்சியினை முன்னெடுத்தான். இவனின் பின்னர் சத்தாதீசன், தூலத்தனன், இலஞ்சதீசன், காலாட்நாகன் ஆகிய மன்னர்களும் அதன் பின்னர் வட்டகாமினி அல்லது வலகம்பாவும் (கி.மு104) இவனிற்கு பின்னர் ஐந்து தமிழ் அரசர்களும் (கி.மு103- கி.மு088) பின்னர் தமிழ் அரசனிடமிருந்து மீண்டும் ஆட்சியினை வட்டகாமினி கைப்பற்றி கி.மு88 முதல் ஆட்சியினைத் தொடர்ந்தான். அதன் பின்னர் மகாசூளி மகாதீசன்(கி.மு76), சேரநாகன் (கி.மு62), தீசன்(கி.மு50), சிவன், வடுகன், தாருபாதிகதீசன்(கி.மு47), நிலியன், அனுலா, குடகன்னதீசன்(கி.மு42), பாதிகாபயன்(கி.மு20), மகாத்திக மகாநாகன்(கி.மு9), ஆமந்த காமினி(கி.மு21), கனிரசானுதீசன், சூலாபாயன், சீவலி முதலியோர் ஆட்சி செலுத்தினர்.

கி.மு 35 இன் பின்னரான மூன்று ஆண்டுகள் ஆட்சிசெய்த அரசர்கள் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. கி.மு38 இல் இளநாகனும், பின்னர் சந்தமுகசிவன், யசலாலகதீசன், சுப்பாராசன் என்போர் ஆட்சி செய்தனர். வசபன் கி.மு 66ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தான். வங்கனாசிகதீசன்(கி.பி 110), 1ஆம் கஜபாகு(கி.பி 113), மகல்லநாகன்(கி.பி 135), பாதிகதீசன்(கி.பி 141), கனிட்டதீசன், குச்சநாகன், குஞ்சநாகன், 1ஆம் சிறீநாகன், வோகரிக்கதீசன், அபயநாகன், 2ஆம் சிறிநாகன், விஜயகுமாரன், சங்கதீசன், சங்கபோதி(சிறிசங்கபோ), கோதகாபயன், 1ஆம் சேட்டதீசன் ஆகியோர் கி.பி 165- கி.பி 277வரையும், மகாசேனன்(கி.பி 277), சிறீ மேகவண்ணன், 2ஆம் சேட்டதீசன், புத்ததாசன், உபதீசன், மகாநாமன், சோதிசேனன், சத்தகாகன், மித்தசேனன் ஆகிய மன்னர்கள் கி.பி 301- கி.பி 435 வரையும்,அதன் பின்னர் ஆறு தமிழர்கள் ஆட்சிசெய்தனர்.

கி.பி463 ஆம் ஆண்டு தமிழ் அரசனிடமிருந்து ஆட்சியினைக் கைப்பற்றி தாதுசேன்னன் ஆட்சிபுரிந்தான். அவனிற்கு பின்னர் மகனான காசியப்பன்(கி.பி 479-527 வரை கிகிரியாவை ஆட்சி செய்தான். பின்னர் 1ஆம் மொகலான(கி.பி 497), குமார தாதுசேனன், கீர்த்திசேனன், சிவன், உபதீசன், அம்பசாமநேர சிலாகால, தாதாப்பபூதி, 2ஆம் மொகலானா, கீர்த்தி ஸ்ரீமேகவண்ணன், மகாநாகன் ஆகியோர் கி.பி 515- கி.பி 561வரைக்கும் ஆட்சி செய்தனர். பின்னர் 1ஆம் அக்கபோதி(கி.பி 564), 2ஆம் அக்கபோதி (கி.பி598), சங்கதீசன், தல்லமொகலானா, சிலாமேகவண்ணன், 3ஆம் அக்கபோதி, 3ஆம் சேட்டதீசன், 3ஆம் அக்கபோதி(மீண்டும் ஆட்சி), தாதோபதீசன், 2ஆம் காசபன், 1ஆம் த்ப்புலன், 2ஆம் தாதோபதீசன், 4ஆம் அக்கபோதி, தத்தன், உண்ணனாகர அத்ததாத, மானவரம்மன், 5ஆம் அக்கபோதி, 3ஆம் காசபன், 1ஆம் மகிந்தன், 6ஆம் அக்கபோதி, 7ஆம் அக்கபோதி, 3ஆம் காசியப்பன், 2ஆம் மகிந்தன், 2ஆம் தப்புலன், 3ஆம் மகிந்தன், 8ஆம் அக்கபோதி, 3ஆம் தப்புலன், 9ஆம் அக்கபோதி, 1ஆம் சேனன், 2ஆம் சேனன், 1ஆம் உதயன், 4ஆம் காசியப்பன், 5ஆம் காசியப்பன், 4ஆம் த்ப்புலன், 2ஆம் உதயன், 3ஆம் சேனன், 3ஆம் உதயன், 4ஆம் சேனன், 4ஆம் மகிந்தன், 5ஆம் சேனன் ஆகியோர் கி.பி 608- கி.பி 1001 வரைக்கும் ஆட்சி செய்தனர் பின்னர் ஆட்சிப்பீடம் ஏறிய 5ஆம் மகிந்தன்  அனுராதபுர இராசதானியின் இறுதி மன்னனாவான். பின்னர் ராஜராஜ சோழனது ஆதிக்கம் இலங்கையில் ஏற்பட்டமையினைத் தொடர்ந்து இராசதானி பொலனறுவைக்கு இடம் மாற்றப்பட்டது.