Showing posts with label மராட்டிய மன்னர்கள். Show all posts
Showing posts with label மராட்டிய மன்னர்கள். Show all posts

Friday, December 27, 2013

இந்திய வரலாற்றில் மராட்டியர்



Rajeendra

மராட்டிய மன்னர்கள்
ஏகோஜி கி.பி.1676இல் தஞ்சையைக் கைப்பற்றி அங்கு முதன்முதலில் மராட்டியர் ஆட்சியை நிறுவினார். அவர் உட்பட மொத்தம் பதின்மூன்று மராட்டிய மன்னர்கள் தஞ்சையில் இருந்து ஆட்சி புரிந்தனர். இவர்களைத்தான் தஞ்சை மராட்டியர் என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்கள் கி.பி.1676 முதல் 1855 வரை 180 ஆண்டுகள் தஞ்சையில் ஆட்சி புரிந்தனர். இவர்களுள் ஏகோஜி, ஷாஜி, முதலாம் சரபோஜி, துக்கோஜி, பிரதாப் சிங், துல்ஜாஜி, இரண்டாம் சரபோஜிஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இவர்களைப் பற்றி ஒருவர்பின் ஒருவராகக் காண்போம்.

ஏகோஜி (கி.பி.1676-1684)

இவருக்கு வெங்காஜி என்ற மற்றொரு பெயரும் உண்டு. இவர் மராட்டிய போன்ஸ்லே மரபிலே தோன்றிய ஷாஜி போன்ஸ்லே என்பவரின் மகன் ஆவார். ஷாஜி போன்ஸ்லே பீஜப்பூர் சுல்தானிடம் படைத்தலைவராகப் பணியாற்றினார். அக்காலத்தில் இசுலாமிய மன்னர்கள் தங்களுக்கு வெற்றி தேடித் தந்த படைத்தலைவர்களுக்கு, தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட நாட்டில் உள்ள ஒரு சிறு நிலப்பகுதியை, குறிப்பிட்ட ஒரு காலம் வரை ஆட்சி செய்வதற்கு உரிமையாக வழங்கினர். அந்த நிலப்பகுதி ஜாகீர் எனப்பட்டது. ஷாஜி போன்ஸ்லே தென்னிந்தியாவில் படையெடுத்துப் பெற்ற வெற்றிக்கு மகிழ்ந்த பீஜப்பூர் சுல்தான் அவருக்குப் பெங்களூரு பகுதியை ஜாகீராக வழங்கினான்.
ஷாஜி போன்ஸ்லேவுக்கு இரு மனைவியர் இருந்தனர். முதல் மனைவி துர்க்காபாய் ஆவார். இவருக்குக் கி.பி.1630இல் ஏகோஜி பிறந்தார். இரண்டாம் மனைவி ஜிஜாபாய் ஆவார். இவருக்குக் கி.பி. 1629இல் சத்திரபதி சிவாஜி பிறந்தார். சத்திரபதி சிவாஜி தக்காணத்தில் மாபெரும் மராட்டியப் பேரரசை நிறுவி, அதனைக் கி.பி.1674 முதல் 1680 வரை அரசாண்டவர் ஆவார்.
ஏகோஜி தன் தந்தையைப் போலவே பீஜப்பூர் சுல்தானிடம் படைத்தலைவராக இருந்தார். கி.பி.1676இல் தஞ்சையைக் கைப்பற்றி அரசாளத் தொடங்கினார். தன் தந்தை ஷாஜியின் கட்டளைப்படி ரகுநாத் பந்த்என்பவரைத் தனக்கு அமைச்சராக வைத்துக் கொண்டார். இருப்பினும் சில நாட்களில் ஏகோஜியிடம் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக ரகுநாத் பந்த் சிவாஜியிடம் சென்று அவர்க்கு உதவியாக இருக்கத் தொடங்கினார்.
ஏகோஜி அரச தந்திரமும், ஆட்சித் திறனும் மிக்கவர். மாபெரும் வீரராகவும் திகழ்ந்தார். இருந்தபோதிலும் அவர் தனது ஆட்சியின் முற்பகுதியில் தன்னுடைய தமையனார் சிவாஜியின் தொல்லைக்கு உட்பட வேண்டியவராகவே இருந்தார்.

ஏகோஜியும் சிவாஜியும்
சத்திரபதி சிவாஜி தக்காணப் பீடபூமியில் ஆங்காங்கு நடந்துவரும்இசுலாமியர் ஆட்சியை ஒழித்து, இந்துப் பேரரசு ஒன்றை நிறுவப் பெரிதும் பாடுபட்டவர் ஆவார். இவர் பீஜப்பூர் சுல்தானிடம் இருந்த மராட்டிய நாட்டை மீட்டு, கி.பி. 1674இல் அந்நாட்டின் மன்னராக முடி சூட்டிக்கொண்டார். இவர் மொகலாய மன்னர்களை எதிர்த்துப் போர் செய்வதற்குப் பெரும்பொருள் தேவைப்பட்டது. எனவே பெரும்பொருளைத் திரட்டுவதற்காகவும், தக்காண பீடபூமியில் இசுலாமியர் ஆட்சியை ஒழித்துக் கட்டுவதற்காகவும் சிவாஜி கி.பி. 1676இல் தென்னிந்தியாவின் மீது படையெடுத்தார். அவருடைய படை 30,000 குதிரை வீரர்களையும், 20,000 காலாட்படை வீரர்களையும் கொண்டிருந்தது.
பெரும்படையுடன் தமிழகத்தினுள் புகுந்த சிவாஜி பீஜப்பூர் சுல்தானின் ஆதிக்கத்தில் இருந்த செஞ்சிக்கோட்டையையும்வேலூர்க் கோட்டையையும் கைப்பற்றினார்.