Tuesday, August 7, 2012

ஜனநாயகம்



ஜனநாயகம் என்றால் என்ன?

எடுத்த எடுப்பில் அதன் உண்மை முகத்தை இலகுவாக புரிந்து கொள்ள முடியாத, மிகவும் சூக்குமமான ஒன்றாகவே உள்ளது. திரிந்து போன நிலையில், கற்பனையான போலியான பகட்டுத்தனத்தில் இது மிதக்கின்றது. பொதுவாக மனிதனின் உரிமை சார்ந்த ஒன்றாக புரிந்து கொள்வது நிகழ்கின்றது. ஆனால் அந்த உரிமை என்பது சூக்குமமாகிவிடுகின்றது. ஜனநாயகத்தின் அடிப்படையே சமூகத்துக்கு எதிரானதும், தனிமனிதனின் குறுகிய நலன்களுக்கும் உட்பட்டதே.

ஒரு சமூக அமைப்பில் ஜனநாயகம் உயிர்வாழ வேண்டுமென்றால், அங்கு ஜனநாயகம் மறுக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த முரண்நிலையின்றி ஜனநாயகம் உயிர்வாழ முடியாது. அதாவது இதில் ஏதோ ஒன்றின்றி ஒன்று இருக்கமுடியாது. இதுவே சமூகத்துக்கு எதிரானதாகவும், தனிமனிதனுக்கு சார்பானதாகவும் மாறிவிடுகின்றது. அதாவது அனைவருக்கும் ஜனநாயகம் இருந்தால், ஜனநாயகம் என்ற கோரிக்கையும் இருக்காது. இது இயல்பில் இன்றைய ஜனநாயக பாராளுமன்றங்களைக் கூட இல்லாததாக்கிவிடும். இது ஒரு விசித்திரமான, ஆனால் நிர்வாணமான உண்மை. இன்றைய ஜனநாயக பாராளுமன்றங்கள் இருக்கும் வரை, ஜனநாயக மறுப்பும் இருந்து கொண்டே இருக்கும். ஜனநாயகத்தின் முரணற்ற உள்ளடக்கம் இதுதான். இன்றைய சமூக அமைப்பு நீடிக்கும் வரை, ஜனநாயகத்தை மறுப்பவன் இருக்க வேண்டும். அதேபோல் ஜனநாயகத்தை கோருபவன் இருக்க வேண்டும். இன்று உலகெங்கும் அனைத்து மனிதர்களுக்கும் ஜனநாயகம் வழங்கிய சமூக அமைப்பு எதுவுமே கிடையாது. ஜனநாயகத்தை இழந்தவனும், அதை மறுப்பவனைக் கொண்டதுமான ஜனநாயக உலகம் தான், இந்த சமூக அமைப்புகள். இந்த நாடாளுமன்றங்கள் அனைத்தும் இதை பாதுகாப்பதில் தான் உயிர் வாழ்கின்றது.

இதுவே மிகவும் உன்னதமான சமூக அமைப்பாக, ஜனநாயகமாக காட்டப்பட்டு போற்றப்படுகின்றது. ஆனால் மக்களுக்கு எதிரான மிகவும் மோசமான ஒரு அமைப்பாக,அதன் உள்ளடகத்திலேயே அது உள்ளது. அதாவது மறுக்கப்படுகின்ற ஒரு அமைப்பாகத் தான், ஜனநாயகம் உள்ளது. ஜனநாயகம் என்ற அடிப்படையிலும் சரி, சமூகத்தில் உள்ள எந்தக் கூறும் சரி, மறுப்பதும் அதை கோருவதையும் அடிப்படையாக கொண்ட ஒரு அமைப்பையே உயர்வானதாக காட்டுகின்றனர். இதற்கு பெயர் ஜனநாயகம். இதை நிலைநாட்டும் உரிமையைத் தான் சுதந்திரம் என்கின்றனர்.

இந்த ஜனநாயகம் என்பது தீர்மானமெடுக்கும் மக்களின் அதிகாரத்தையே மறுதலிக்கின்றது. மாறாக மக்கள் வாக்கு போடுவதையே ஜனநாயகமாக காட்டப்படுகின்றது. இதையே மக்களின் சொந்த தேர்வாக காட்டப்படுகின்றது. ஆனால் இந்த தேர்வு எப்படியானதாக இருந்த போதும், மக்கள் தாம் விரும்பும் ஒரு அமைப்பை இந்த ஜனநாயகம் வழங்குவதில்லை. மாறாக அவர்களை அடக்கியாளும் ஒன்றையே ஜனநாயகம் வழங்குகின்றது. இங்கு மக்கள் வாக்களிப்பது என்பது கூட ஒரு சடங்காக,அதன் மீது ஆதிக்கம் செலுத்த முடியாத ஒன்றாக மாறிவிடுகின்றது. வாக்கு போட்ட தேர்வை திருப்பிப் பெற முடியாத ஒன்றாகிவிடுகின்றது. தேர்வே அர்த்தமற்ற ஒன்றாகிறது. இது சொந்த அடிமைத்தனத்தையே அடிப்படையாக கொண்டதாக மாறிவிடுகின்றது.

இந்த ஜனநாயகம் பெரும்பான்மை மக்களின் அரசியல் பொருளாதார விருப்பங்களை மறுதலிக்கின்றது. தெரிவு செய்யப்படும் இந்த அமைப்பு மூலமே இது நிகழ்கின்றது. தெரிவு செய்யப்படும் உறுப்பு, ஏற்கனவேயுள்ள ஆளும் அதிகார வர்க்கத்துடன் இணங்கி செயற்படும் ஒரு உறுப்பு மட்டும் தான். தெரிவு செய்யப்படும் எந்த உறுப்பினரும் நாட்டை ஆளுகின்ற அதிகார வர்க்கத்தை மீறி, சுயாதீனமாக செயல்பட முடியாது. மாறாக இருக்கின்ற சட்டதிட்டங்களுக்கும், அதேநேரம் அதிகார வர்க்கத்தின் ஒரு உறுப்பாக அதற்குள் தான் சுயமாக செயல்படமுடியும். மக்களின் தேர்வு என்பது போலியானது. மக்கள் தங்களைத் தாங்கள் ஆள்வதற்கு தேர்ந்தெடுக்கின்றனர் என்பது சூக்குமமான ஒரு ஏமாற்று மோசடியாகும்.

உதாரணமாக வாக்குபோட்டு தெரிவு செய்யப்படும் எந்த உறுப்பினரும் சுரண்டல் கட்டமைப்பை இல்லாதாக்க முடியாது. சுரண்டல் அமைப்பை மாற்றுவதை விடுவோம்,முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளிக்கு சார்பாக சட்டங்களை கொண்டுவர முடியாது. இங்கு பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை சட்டமாக்க முடியாது. இதை ஜனநாயகம் அனுமதிக்காது. இந்த ஜனநாயக அமைப்பு சாதியை ஒழிக்க முடியாது. ஆணாதிக்கத்தை கூட ஒழிக்க முடியாது. நிற வெறியை ஒழிக்க முடியாது. இனப்பாகுபாட்டை ஒழிக்க முடியாது. இதற்குள் அங்குமிங்குமாக சீர்திருத்தம் செய்து செயல்படலாமே ஒழிய, அதை ஒழிக்க முடியாது. இதை ஜனநாயகம் அனுமதிக்காது. ஜனநாயகத்தின் இருப்பே இதன் மேல் தான் உள்ளது.
இந்த ஜனநாயகத்தை மக்களிடமிருந்து பாதுகாக்கும் பொலிஸ் என்ற அடக்குமுறை இயந்திரம், பெரும்பான்மை மக்களின் விருப்பை நிறைவு செய்வதில்லை. எந்த முதலாளிக்கும் எதிராக, தொழிலாளிக்கு சார்பாக பொலிஸ் செயல்பட ஜனநாயகம் அனுமதியாது. இதுவே சமூகத்தில் அனைத்துத் துறையிலும் காணப்படுகின்றது. ஜனநாயகம் என்பது ஒரு வர்க்கத்தின் சர்வாதிகார ஆட்சியாகும்.

ஆனால் மக்கள் எந்த ஒரு சக மனிதனையும் அடக்கியொடுக்கி தான் வாழ விரும்புவதில்லை. தான் உழைத்து வாழவிரும்பும் சமுதாயத்தின், ஒரு உயிரியாகவே இருக்கின்றான், இருக்க விரும்புகின்றான். மற்றைய மனிதனை இழிவுபடுத்தி, அவனைத் தாழ்த்தி, இதன் மூலம் அவனின் உழைப்பைப் பிடுங்கி தான் வாழவேண்டும் என்று மக்கள் விரும்புவதில்லை. ஆனால் இதுவே பொதுவான ஆதிக்கம் பெற்ற ஒரு சமூதாய நடைமுறையாக உள்ளது. மக்களின் விருப்பங்களுக்கு அப்பால், இது ஆதிக்கம் பெற்ற ஒன்றாகவே உள்ளது.