Thursday, November 12, 2015

மலையக மக்கள்



19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சியின்போது பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைகளுக்காக இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட இனக்குழுவினர் மலையகத் தமிழர்கள் ஆவர்.  இவ்வாறு வந்த மக்கள் இலங்கை வரலாற்றிலும் பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்ற வகையிலும் சிறுபான்மை இனக்குழுக்களுள் ஒருவர் என்ற வகையிலும் முக்கியப்படுத்தப்பட்டு நோக்கப்பட வேண்டியவர்களாவர்

மலையக மக்களது வருகை பற்றி முதலில் நோக்குமிடத்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் (மதுரை, திருநெல்வேலி , இராமநாதபுரம் , தஞ்சாவூர் போன்ற மாவட்டங்கள்) தொடர்ந்து பருவ மழை பெய்யாமையின் காரணமாக விவசாயத்துக்கான நீர் ஆதாரம் இல்லாமற்போனது. உணவு உற்பத்தியில் தேக்க நிலை தொடர்ந்ததால், பஞ்சம் அதிகரித்தது. மற்றும் ஆட்சியாளர்களின் நிலவரி, பாசனவரி முதலிய வரிவிதிப்புகளைக் கட்ட இயலாமல் தங்கள் நிலங்களை இழக்க நேரிடும் நிலையும் ஏற்பட்டது. அத்துடன் சாதிக்கொடுமைகள், கடன்கள், ஆங்கிலேயரது காலணித்துவம் பண்ணையாளர்களது கொடுமைகள், வறுமை என பல காரணங்களால் பிரித்தானிய காலணித்துவ நாடுகளுக்குக் குறைந்த கூலிக்குப் பணியாற்ற சமகாலப்பகுதியில் இந்தியத் தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

தங்களது ஊர்களிலிருந்து இராமேஸ்வரத்திற்கு நூற்றுக்கணக்கான மைல் நடந்து வந்து படகுகளில் பயணித்து இலங்கையின் தலைமன்னாரில் இறங்கி அங்கிருந்து கால் நடையாகக் இலங்கையின் பெருந்தோட்டங்களிற்கு அழைத்துவரப்பட்ட இம்மக்களில்; தமது பயணத்தின் பொழுது மலேரியா போன்ற தொற்று நோய்களுக்கு ஆளாகிப் போதிய உணவின்றி 40% வரையினர் மடிந்தனர்

மலையக மக்களது வருகை பல கட்டங்களாக இடம்பெற்றன. 1823ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முதலாவது கோப்பித் தோட்டத்தில் (கம்பளையில் சிங்கப்பிட்டிய) அழைத்துவரப்பட்ட 14 குடும்பங்களைச் சேர்ந்த மலையகத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்கு முன்னர் வந்தவர்கள் இலங்கையின் உட்கட்டமைப்பு வேலைகள், கண்டிப்பகுதியில் இடம்பெற்ற கிளர்ச்சிகளை(1818) அடக்குவதற்கு கொண்டுவரப்பட்டார்கள்.

1827ம் ஆண்டு 10,000 ஆக இருந்த தொழிலாளர் தொகை 1877ம் ஆண்டு 1,45,000 ஆக அதிகரித்தது. 1839ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியத் தொழிலாளர்கள் பெருந்தோட்டங்களில் தொழில் செய்ய அதிகளவில் வரவழைக்கப்படலாயினர். 1839 ஆம் ஆண்டு 2432 தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்தனர். 1838-1843 இற்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 130 கோப்பி பெருந்தோட்டங்கள் திறக்கப்பட்டன. 1846  அளவில் அது 500 ஆக அதிகரித்தது. 1841-1848 இற்கு இடைப்பட்ட காலத்தில் 265, 467   ஆண்கள், 5155 பெண்கள், 2250 சிறுவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களில் 25வீதமானவர்கள் (70,000 பேர்) பல்வேறு காரணங்களினால் இறந்துள்ளனர். இக் கால கட்டத்தில் சுமார் 70 ஆயிரம் கோப்பித் தோட்டத் தொழிலாளர்கள் இருந்துள்ளனர்

கோப்பி பயிர்ச் செய்கையின் போது இந்திய தொழிலாளர்கள் நிரந்தரமாக இலங்கையில் இருந்து தொழில் செய்யவில்லை. கோப்பி பயிர்ச் செய்கையில் தொடர்ச்சியான பாரமரிப்பு தேவையின்மையின் காரணமாக பருவகால தொழிலாளர்களே தேவைப்பட்டனர்

1845 இங்கிலாந்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, குறிப்பாக 1869 காலத்தில் கோப்பி பயிர்களுக்கு ஏற்பட்ட பங்கசுத் தாக்கம் கோப்பி பயிர்ச் செய்கையை வெகுவாகப் பாதித்தது. இந்தச் சூழ்நிலையில்  தேயிலை ஒரு முக்கிய பயிராக மாற்றமடைந்ததுடன் பின்னர் இறப்பரும் முக்கிய பெருந்தோட்ட பயிராக மாறியது. 1867ம் ஆண்டு ஜேம்ஸ் ரெய்லர் தேயிலைப் பயிர்ச்செய்கையை இலங்கையில் ஆரம்பித்தார்.  இதன்மேல் மலையக மக்களின் தொகை வெகு வேகமாக அதிகரிக்கலானது. 1867 ஆம் ஆண்டு 1000 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட தேயிலை பயிர்ச் செய்கை  1875 ஆம் ஆண்டில் 1080 ஏக்கர்களாக அதிகரித்தது. 1890 அளவில் 22000 ஏக்கர்களாக மேலும் உயர்ந்தது. பின்னர் 1930இல் 478,000  ஏக்கர்களாக அதிகரித்தது. 1905 இல் 25,000 ஏக்கர்களில் மாத்திரம் பயிரிடப்பட்டிருந்த இறப்பர் 1910 இல் 188,000 ஆகவும் 1920 இல் 397,000  ஏக்கர்களாகவும் அதிகரித்தது. இந்த இரு பயிர்ச் செய்கைகளின் பரப்பு அதிகரிப்புக்கு ஏற்ற வகையில் தொழிலாளர்கள் தென்னிந்தியாவில் இருந்தே கொண்டு வரப்பட்டனர். இந்த அடிப்படையில் இவர்களது தொகை படிப்படியாக வளர்ச்சி கண்டது.

தேயிலை, இறப்பர் தோட்டங்களில் வேலை செய்ய வந்த தொழிலாளர்கள் நிரந்தரமாக இலங்கையில் தங்கி வாழவரவில்லை ஆயினும் தேயிலை, இறப்பர்  செய்கைகளுக்கான பராமரிப்பு மற்றும் விளைச்சலின் தொடர்ச்சித் தன்மை காரணமாக நீண்ட நாட்கள் தங்கி வேலை செய்யும் நிலை ஏற்பட்டது. 1877 ஆம் ஆண்டு 5000 தொழிலாளர்கள் இருந்த நிலையில் 1911  இல் 530,000  ஆக அதிகரித்தது. இது 41 இலட்சம் மக்கள் தொகை கொண்ட அப்போதைய  இலங்கையின் மொத்த சனத் தொகையில்  12.9 வீதமாகும். 1921 இல் இத் தொகை 602,000 ஆகவும் அதிகரித்தது. 1931 ஆம் ஆண்டில் மலையக மக்களின் சனத்தொகை 8,18,500  ஆனது. இதில் சுமார் 86 வீதமானவர்கள் அதாவது 692,520 பேர்  தோட்டத் தொழிலாளர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.  

மலையகத்தில் இலங்கைக்கு வந்த பின்னர் அம்மக்கள் உயிர் தப்பி வாழ்தலும் மிகவும் கடினமானதாகிவிட்டது. 1841-1846 இற்கு இடையில் 90 ஆயிரம் மக்கள் இறந்து போயினர் என்று புள்ளிவிபரம் கூறுகிறது

மலையகத் தமிழர்கள்  இலங்கையில் நிரந்தரமாக நிலைபெறும் போக்கு 1920-1940 வரையுள் ஏற்படலாயிற்று. 1933ம் ஆண்டுவரை பல இலட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்து சேர்ந்தனர். இவ்வாண்டின் பின்னர் இந்திய அரசு இலங்கைக்குத் தொழிலாளர் அனுப்பப்படுவதைத் தடைசெய்தது. இந்த அடிப்படையில் இவர்களது தோற்றம் இலங்கையில் அமைந்தது என நோக்க முடியும்.

மலையக மக்களின் வளர்ச்சி நிலை பற்றி நோக்கின் 1931ம் ஆண்டு 1,00,000 மலையக மக்கள் வாக்குரிமை பெற்றனர். 1936 ஆம் ஆண்டு தேர்தலின் போது இந்திய வம்சாவளியினருள் வாக்குரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை 145000 ஆக அதிகரித்தது. இருப்பினும் இது நீடிக்கவில்லை. மலையக மக்கள் தமது இருப்பினை உறுதிப்படுத்தும் பொருட்டு பன்னெடுங்காலமாக நீண்ட போராட்டத்தினை நடாத்தி வருகின்றனர். அவர்கள் அமைப்பு ரீதியாக போராட தயாரான ஆண்டாக 1919ம் ஆண்டினைக் குறிப்பிடலாம். இந்த ஆண்டு முதலே சேர். பொன்னம்பலம் அருணாசலமும், பெரியசுந்தரமும் இணைந்து தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் என்ற அமைப்பினை உருவாக்கி மலையக மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்காக குரல் எழுப்பியிருந்தனர்

அநகாரிக தர்மபால இந்திய வர்த்தகர்களுக்கு எதிரான இனவாதத்தினைத் தொடக்கி வைத்தார். யு.நுகுணசிங்க கொழும்பில் வாழும் இந்திய தொழிலாளர்களுக்கு எதிரான இனவாதத்தினைத் தொடக்கி வைத்தார். யு.நுகுணசிங்கவின் தொழிற் சங்கத்தில் உபதலைவராக இருந்த கோ.நடேசைய்யரால்; குணசிங்கவின் இனவாத நடவடிக்கைகளால் அதிலிருந்து விலகி தோட்டத் தொழிலாளர்களுக்கென தனியான தொழிற்சங்கமாக இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தை உருவாக்கி செயற்பட்டார். இச்சங்கம் மலையக தமிழரது இருப்பிற்கும் வளர்ச்சிக்கும் துணையாயமைந்தது

இந்தியத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் தொடங்கப்பட்ட பின்னர் 1935இல் இடது சாரிகளின் தொழிற்சங்கமும் செயற்படலானது. இச்சங்கத்தின் தலைமைகள் தோட்ட நிர்வாகத்தின் அடக்கு முறைக்கெதிராகப் பல்வேறு போராட்டங்களை நடத்தின. பின்னர் இடதுசாரிக் கட்சிகள் மலையக மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. இந்த வகையில் இவர்களது 'முல்லோயாப் போராட்டம்' மலையக தமிழரது வளர்ச்சியில் முக்கிய போராட்டம் எனலாம்.

1935ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட காணி அபிவிருத்திச் சட்டம், கிராமசபை மசோதா சட்டம்(1938) மீன்பிடிச்சட்டம் (1940) கிராமசபை மசோதா அனுமதிப் பத்திரச் சட்டம் (1942) என்பன மலையக மக்களை புறக்கணித்து மற்றைய இனத்தோரின் நலனை உறுதிப்படுத்தின

1948ஆம் ஆண்டு இலங்கைப் பிரசாவுரிமைச் சட்டம் ,அதற்குத் துணயாக 1949ஆம் ஆண்டு இன்னும் இரு சட்டங்கள் (1949இல் இந்தியர், பாக்கிஸ்தானியர் பிரசாவுரிமைச் சட்டம் 1949இல் தேர்தல் திருத்தச்சட்டம்)  மற்றும் 1954இல் இடம்பெற்ற நேரு கொத்தலாவல ஒப்பந்தம் என்பன  மலையக மக்கள் இருப்பினை வெகுவாக பாதித்தன. இச்சட்டங்களின் மூலம் மலையக மக்களின் குடியுரிமை முற்றாகப் பறிக்கப்பட்டது. இதன் மூலம் வாக்குரிமைக்கு தகுதி பெற்ற 850000 மலையகத் தமிழர்களில் 700000 மக்கள் தங்கள் வாக்குரிமையை இழந்தனர். பின்பு 1952-1972 வரை மலையக மக்களுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது. இது இவர்களது அரசியல், சமுதாய இருப்புக்களை கேள்விக்குறியாக்கியது.


1951ஆம் ஆண்டில் 825,000 பேருக்குப் பிரசாவுரிமை கோரி விண்ணப்பித்தனர். 1962ஆம் ஆண்டு வரை 134,000 பேருக்கு மட்டுமே அதாவது விண்ணப்பித்தவர்களில் 16%மானோர்க்கு மட்டுமே பிரசாவுரிமை வழங்கப்பட்டது

1940ஆம் ஆண்டு வரை மலையக அரசியலில் இன ஒடுக்கு முறை பெரியளவில் வளர்ச்சியடைந்திருக்கவில்லை. வர்க்க ஒடுக்கு முறையே பிரதானமாகத் தொழிற்பட்டது. ஆனால் 1931இல் அறிமுகப்படுத்தப்பட்ட டொனமூர் அரசியல் யாப்புடன் இனவாதம் வளரலானது. தமக்கு கிடைத்த அரைகுறை அதிகாரத்தை வைத்துக் கொண்டே நகரத்தில் பணியாற்றிய இந்திய வம்சாவழி அரசாங்க உத்தியோகத்தர்கள் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போன்றோரை பதவியிலிருந்து நீக்கினர். இந்நிலையில் இவற்றுக்கு முகம் கொடுப்பதற்காகத்தான் நேருவின் வழிகாட்டலில் இலங்கை-இந்தியர் காங்கிரஸ் 1939இல் உருவாக்கப்பட்டது. 1940இல் இதனுடைய தொழிற்சங்கம் மலையகத்தில் பணியாற்ற ஆரம்பித்தது. இதுவும் மலையக மக்களது இருப்பிற்கு பலம் சேர்த்தது.

1937ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட உள்ளுராட்சிச்சபைச் சட்டம்;  உள்ளுராட்சித் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை இம்மக்களுக்கு இல்லாமற் செய்தது. இதைவிட அரசாங்க சபைத் தேர்தல்களில் கூட மலையக மக்களின் வாக்கு வீதத்தினைக் குறைப்பதற்காக வாக்குரிமைச் சட்டத்தில் பல கட்டுப்பாடுகள் 1936 தேர்தலின் போது கொண்டுவரப்பட்டன.

1964 ஆம் ஆண்டு சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கையும் அதன் பின்னர் 1974 இல் செய்யப்பட்ட சிறிமா இந்திரா உடன்படிக்கையும் மேற்கொள்ளப்பட்டன.  இதன் விளைவாக கணிசமான அளவு இந்திய வம்சாவளியினர் (6இலட்சம் பேர்) மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். பின்னர் 1983 இலும் இலங்கையில் ஏற்பட்ட பாதுகாப்பற்ற சூழ்நிலைக்காரணமாகவும் பலர் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தனர். 1940களில் இரண்டாவது பெரிய இனமாக (13வீதமாக) இருந்த இந்திய வம்சாவழியினர் 1981இல் 5.5 வீதமாக மாறினர்.
1972இன் காணி சீர்திருத்தச் சட்டம், 1975இன் காணி உச்சவரம்புச் சட்டம் என்பன மலையக மக்களை அவர்கள் வளமாக்கிய நிலங்களிலிருந்து வெளியேற்றின. அத்தோட்டங்கள், பெருந்தோட்டத்துறையுடன் எந்தவித தொடர்புமற்ற சிங்கள கிராமவாசிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன

இந்திய வம்சாவளியினரின் வளர்ச்சி நிலையில் பிரஜாவுரிமை வழங்கும் விசேட சட்டம் 1988 நவம்பர் 9ம் திகதி நிறைவேற்றப்பட்டமை முக்கிய மைல்கல் எனலாம். இதைத் தொடர்ந்து 1989 ஏப்ரல் 26ம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 'வாக்குரிமை வழங்குவதற்கான திருத்தச்சட்டம் புதிதாக பிரஜாவுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினரை வாக்காளர்களாக பதிவு செய்தது.  இம்மக்கள் இன்று பாராளுமன்றத்திலும், மாகாண சபைகளிலும், பிரதேச சபைகளிலும் ஏனைய உள்ளூராட்சி சபைகளிலும் அரசியல் பிரவேசம் செய்ய வழிவகுத்து இருக்கின்றது. இந்த இரண்டு சாதனைகளால் தான் இன்று இந்திய வம்சாவளி மக்கள் ஏனைய சமூகத்தோடு அரசியலிலும் ஏனைய துறைகளிலும் பங்குகொள்ள சந்தர்ப்பம்  ஏற்பட்டு வளர்ச்சி நிலையில் உள்ளனர்.   

1977, 1983 காலங்களில் இரு இன அழிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் மலையகத் தமிழர்களும் அழிக்கப்பட்டனர். 1983இன் பின்னர் வட-கிழக்கில் பாராளுமன்ற அரசியலுக்கு முதன்மையான இடம் இல்லாமல் போனது. விடுதலை இயக்கங்கள் முதன்மையான இடத்தினைப் பெற்றுக் கொண்டன. மலையக இளைஞர்கள் பலரும் இயக்கங்களில் இணைந்து கொண்டனர்.
வட-கிழக்கு நிலைமைகள் மலையகத்திலும் விழப்புணர்வுகளைக் கொண்டு வரத் தொடங்கின. மலையகம், மலையகத் தமிழர் என்ற எண்ணக்கருக்களும் வளர்ச்சியடையத் தொடங்கின. மலையக விடுதலையை மையமாக வைத்த தீவிரவாத இயக்கங்களும் மலையகத்தில் தோன்றின

அம்பேகமுவ, நுவரேலியா பிரதேச சபைகள் மலையக மக்களின் தலைமையில் விடப்பட்டன. கிராம சேவகர், ஆசிரியர்கள் உத்தியோகங்கள் வழங்கப்பட்டன. பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உருவாக்கப்பட்டது. நுவரெலியா மாவட்டம் மலையக மக்களின் கூட்டிருப்பினை வன்மையாக வெளிப்படுத்தும் மாவட்டமாக வளரத் தொடங்கியது. சிறிபாத கல்விக் கல்லூரி மலையக ஆசிரிய உருவாக்கத்திலும் பெரிய பங்கினை ஆற்றத் தொடங்கியது. ஆசிரிய சமூகம் மலையக சமூகத்தில் முக்கிய சமூக சக்தியாக மாறத் தொடங்கியது.

2012 ஆம் ஆண்டு தொகை மதிப்பு திணைக்கள தகவல்களின் படி மலையக மக்கள் மொத்த சனத் தொகையில் 4.2% ஆவர். 2001  மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற சனத்தொகை கணக்கெடுப்புகளில் மலையகத் தமிழர்களின் கணிசமான தொகையினர் தங்களை இந்திய தமிழர் எனப் பதிவுசெய்வதை விடுத்து இலங்கைத் தமிழர் எனப் பதிவுசெய்துள்ளமையே சனத்தொகையில் வீழ்ச்சியை காட்ட காரணம் எனலாம். 2012 குடிசன மதிப்பீட்டின்படி  இது முல்லைத்தீவு 2.5% , திருகோணமலை  1.7%,  கிளிநொச்சி 1.5%, வவுனியா  0.8% , மன்னார் 0.4% ஆகும். மலையக மக்கள் நுவரெலியா மாவட்ட மொத்த சனத்தொகையில் 53.2%ஆக உள்ளனர். நுவரெலியா மாவட்டத்திற்கு அடுத்தபடியாக பதுளை மாவட்டத்தில் 18.4% காணப்படுவதோடு கண்டி, இரத்தினபுரி, கேகாலை , மாத்தளை ஆகிய மாவட்டங்களில் கணிசமான அளவில் இன்று மலையக மக்கள் வாழ்கின்றனர். ஏனைய மாவட்டங்களில் சிறிய எண்ணிக்கையான மலையக மக்கள் வாழ்ந்து வருகின்றனர்

கணிசமான மலையகத்தவர்கள் முறைசாரா துறைகளில் நகரங்களில் பணியாற்றுகின்றனர். ஆடைத் தொழிற்துறையில் பல மலையக இளைஞர், யுவதிகள் பணிபுரிவதோடு  பணிப் பெண்களாக உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் தொழில் செய்கின்ற நிலை மலையகத்தில் காணப்படுகின்றது. அரச துறையில் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு இருப்பதோடு ஏனைய அரச தொழில்களை செய்பவர்கள் மிகவும் குறைவாகவுள்ளனர்.  உயர் தொழில்களில் ஈடுபடுபவர்கள் குறைவானவர்களே. வர்த்தகத்திலும் சுய தொழில்களிலும் ஈடுபடும் சிறு பிரிவினரும் மலையக மாவட்டங்களில் உள்ளனர். இவர்கள்  மலையகத்தில் நடுத்தர வர்க்கமாகவும் எழுச்சி பெறும் வர்க்கமாகவும் உள்ளனர். எனவே, மலையகச் சமூகம் என்பது பெருந்தோட்டத் தொழிலாளர்களை அதிகமாகவும் ஏனைய வகைத் தொழிலாளர்களையும் உள்ளடக்கிய சிறு எண்ணிக்கையுடைய நடுத்தர வர்க்கத்தையும் எழுச்சியுறும் நடுத்தர வர்க்கத்தையும் கொண்டுள்ளமையை அறியலாம்.  இந்த அடிப்படியில் மலையக மக்களது வளர்ச்சி நோக்கப்படுகின்றது.

மலையக தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் நோக்குவது மிகவும் அவசியம். ஏனெனில் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தில் முதுகெலும்பாக திகழும் இவர்கள் முக்கியமாக அரசியல், சமூக, பொருளாதார, ரீதியில் பல இன்னல்கட்கு முகம் கொடுத்து வருகின்றனர். இன்று வரை ஒப்பீட்டளவில் ஏனைய இனங்களை விட பல்வேறு விதத்திலும் பிரச்சினைகளினை எதிநோக்கும் நிலை இவர்களிடத்தே காணப்படுகின்றன. ஒப்பீட்டு நோக்கின் பல்வேறு அடிப்படையிலும் இன்றும் பிந்தங்கிய நிலையில் உள்ளமை வேதனைக்குரியதாகும்.

அரசியல் ரீதியான பிரச்சினைகள் பற்றி நோக்கின் 2009 கணிப்பின்படி மலையக மக்களில் 90 ஆயிரம் பேர் வாக்குரிமை அற்றவர்களாக இருந்துள்ளனர்.  இவர்களுக்குத் தேசிய அடையாள அட்டை இல்லை என்ற காரணத்தை கூறி  வாக்குரிமை நிராகரிக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியதாகும். குடியுரிமையை உறுதிப்படுத்தும் அத்தாட்சி ஆவணங்களை பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிநோக்குகின்றனர். குறிப்பாக அடையாள அட்டையின்றி வங்கி,பிற நிறுவனங்களை அணுக முடியாத நிலையில் உள்ளனர்.

இலங்கையின் ஏனைய இனப்பிரஜைகளை விட சமூக பொருளாதார அடைவுகளில் இவர்கள் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கின்றனர். இதற்கு அரசியல் தலைமைகளும் முக்கிய காரணகர்த்தாக்களாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். மலையகத்தில் நிலவிய தொழிற்சங்க அரசியல், பாராளுமன்ற அரசாங்கத்துடனான அபிவிருத்தி அரசியல் என்ற அத்தனை அரசியலும் அதற்கு தலைமை தாங்கிய ,தாங்கி வருகின்ற தலைவர்களும் மலையகத்தில் உள்ள ஒரு இனப் பிரஜையின் முகவரி, வீடு, காணி உரிமைகளையேனும் இதுவரை பெற்றுக் கொடுக்க முடியவில்லை. மலையக அரசியற் தலைமைகள் இனப்பிரச்சினைத் தீர்வின்போது மலையக மக்களின் தீர்வினையும் வற்புறுத்தும் முயற்சியில் அதிக அக்கறை காட்டாமை. மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

பெருந்தோட்டத் தொழில் என்பது, தோட்ட நிர்வாகத்தோடு எழும் பிரச்சினைகளோடு சம்பந்தப்பட்டதாகும். இப்பிரச்சினைகளைக் கையாள்வது தொழிற்சங்கங்களாகும். தொழிற்சங்கங்களோடு இணைந்த இவர்களின் வாழ்க்கையில் மாற்றுச் சிந்தனைகள் உருவாக, அல்லது உருவாக்க முயல்வோர்களால் தொழிற்சங்கத் தலைமைக்கு ஆபத்து நேரிடும் என சங்கத் தலைமைகள் எண்ணுகின்றன. இத்தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகள் போலவே தங்களை எண்ணுகின்றன. தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் போலவே செயற்பட்டுவருகின்றன. இம்மக்களின் பிரச்சினைகளை அரசியல் ரீதியாக முன்னெடுக்கும் அமைப்புகள் உருவாகாமல் இருப்பதற்கு இத்தொழிற் சங்கத்தலைமைகளே தடையாக இருந்து வருகின்றன.இனரீதியாக தோட்டத் தொழிலாளரை பிரித்து அணிதிரட்டும் அரசியல்வாதிகள் தங்கள் தொழிற்சங்கங்கள் மூலம் தொழிலாளர் உரிமைகளை நசுக்கி விடுகின்றனர்.

2006ம் ஆண்டு இலங்கை அமைச்சரவை தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளையும் ஆட்சி மொழியாக அங்கீகாரம் அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டும் கூட பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள அரசுத் துறைகளில் இச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. ஒரு மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகையில் 12% தமிழர்கள் வாழ்வோர்களானால் நிர்வாக மொழியாகத் தமிழும் இருக்கவேண்டுமென இலங்கை அரசியல் அமைப்பு உறுதி செய்துள்ளது. ஆனால் மலையகத்தமிழர்கள் செறிந்து வாழும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிவோர்களில் 80% சிங்களவர்களாகும். பதுளை நகரமக்கள் தொகையில் 26.3% தமிழர்களாகும். ஆனால் பதுளை மாநகரச் சபையில் பணியாற்றுவோர்களில் 450 பேரில் ஒருவர் மட்டுமே தமிழ் தெரிந்தவராகவுள்ளனர். கண்டி, இரத்தினபுரி, மாத்தளை, பதுளை அப்புத்தளை போன்ற தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் இதே நிலை நீடிக்கின்றது

தோட்டத்துரைமார்களது ஆதிக்கத்தினுள் உட்பட்டுள்ள இவர்கள் அவர்களை மீறி செயற்பட முடியாத வகையில் நடைமுறை நிலை காணப்படுகின்றது. மற்றும் தொழிற்சங்கங்கள் மக்களை தமது கட்டுப்பாட்டுள் உட்படுத்தி தமது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. மக்களது அடிமட்ட பிரச்சினைகள் கூட தொழிற்சங்கங்கள் ஊடாகவே தீர்க்கப்படுகின்றன. அந்த வகையில் மக்களை நிருவகித்து கட்டுப்படுத்தும் அமைப்புக்களாக தொழிற்சங்கங்கள் காணப்படுகின்றன.

15இலட்சம் மக்கள் மலையக தமிழர்களாக வாழ்ந்தாலும் சனத்தொகைக்கேற்ற அளவில் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமை அவர்களது அரசியல், சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை களைவதில் சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றது.

அரசாங்கம் காலாகாலம் நடைமுறைப்படுத்தும் சமூகநலத்திட்டங்கள் இவர்களை உரிய முறையில் வந்தடைவதில்லை. குறிப்பாக சுகாதார வசதி திட்டம், வீட்டுவசதி திட்டம், தேசிய விளையாட்டு அபிவிருத்தி திட்டம் என்பன உரிய முறையில் கிடைக்கப்பெறுவதில்லை. மேலும் சமுர்த்தி, வறுமை ஒழிப்பு திட்டங்களிலிருந்து இவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமையும் கவலைக்குரியதாகும்.

சமூக ரீதியான பிரச்சினைகள் பற்றி பார்ப்பின் 1972ம் ஆண்டில் பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்றாலும் பழையமுறையிலான  கொத்தடிமை வாழ்க்கையும், சுரண்டலும், இன்னல்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. மலையக மக்கள் ஐதாக இருக்கின்ற இரத்தினபுரி, களுத்துறை, மாத்தளை மாவட்டங்களில் மலையக மக்களின் இருப்புக்கான அச்சுறுத்தல்கள் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன. குறிப்பாக சிங்கள பேரினவாதிகளால் அச்சுறுத்தல்கள் இடம்பெறுகின்றன.

இவர்கள் விவசாயிகளாகவே காணப்படுவதனால் அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இன்று ஏறத்தாள 15இலட்சம் மலையக தமிழ் மக்கள் இலங்கையில் வாழ்கின்றனர். மூன்றாவது தலைமுறையிலும் தோட்டத் தொழிலாளர்களாகவே இருக்கின்றனர். மத்தியதர வர்க்க எழுச்சியை மலையக தலைமைகள் சில ஒடுக்குவதும் சமூக முன்னேற்றத்தை ஒடுக்குவதாக உள்ளது. இதனால் இவர்களது வாழ்க்கைத்தர முன்னேற்றம் இவ்வாறு தடுக்கப்பட்டு வருகின்றது.

மலையகத்  தமிழர்கள் எனும் அடையாளம் அவர்கள் இந்தியர் என்ற  அந்நிய உணர்வை அவர்களிடத்தும் ஏனைய இலங்கை வாழும் மக்களிடத்திலும் ஏற்படுத்துவதாக இருக்கின்ற நிலை இன்னமும் தொடர்கின்றமை கவலைக்குரியதாகும். இவர்களை அந்நியப்படுத்தி பலரும் 'தோட்டகாட்டான்' என அழைப்பது வேதனைக்குரியது

ஒரே தடவையில் வர்க்க ஒடுக்குமுறை, இன ஒடுக்கு முறை என்பவற்றை புற ரீதியாக எதிர் நோக்குகின்றனர். அதேவேளை மலையக மக்களில் பெரும்பான்மையினர் சாதி ரீதியான ஒடுக்கு முறை, உள்ளக வர்க்க ஒடுக்கு முறை என்பவற்றிற்கு அக ரீதியாகவும் முகம் கொடுக்கின்றனர். எனவே ஒரே சமயத்தில் இன விடுதலையையும் வர்க்க விடுதலையையும் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அக்காலத்தில் தொழிலாளர்களுக்கென அமைத்துக் கொடுக்கப்பட்ட தொடர்குடியிருப்புகளில் (லயன்கள்) தங்கியிருந்த மக்கள் சுமார் 160ஆண்டுகள் கழிந்த நிலையிலும் அதே லயன் குடியிருப்புகளில் தான் வாழ்ந்து வருகின்றனர். மேலும் சனத்தொகை அதிகரிப்பிற்கேற்ப வீடுகள் கட்டிக்கொடுக்கப்படாத நிலையும், பழைய வீடுகள் சேதமுற்றுள்ள நிலையும் சொந்தமான வீட்டினை கொண்டிராமையும் காணப்படுகிறது. அத்துடன் மண்சரிவு, வெள்ளப்பெருக்கு, கடும் மழை, பனிமூட்டம் ஏற்படும் பிரதேசங்களில் இவர்களது இருப்பிடங்கள் உள்ளமையும் முக்கிய பிரச்சினைகள் எனலாம்.

பெண்களிற்கு அதிக வேலைகள், இளவயது திருமணங்கள், ஊழியரிடையே ஒற்றுமை இன்மை, சாதிப் பிரச்சினைகள் முதலிய சமூகப் பிரச்சினைகளும் இவர்களது வாழ்வில் புரையேடிப்போயுள்ளன.
 
பொருளாதார ரீதியான பிரச்சினைகளாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் நாட்சம்பளத்திற்கு பணிபுரிகின்றமை, தோட்டத் தொழிலாளர்களுக்கான கல்வி, சுகாதாரம், போக்குவரத்து,வீட்டு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மிகக் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றமை, அவர்களது வாழ்க்கைத் தரம் நாட்டின் ஏனைய பொது மக்களது வாழ்க்கைத் தரத்தையும் விட கீழ் மட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளமை முதலியன முக்கிய பிரச்சினைகளாகும்.

தேயிலைத்தோட்டங்கள் துண்டாடப்பட்டு சிங்கள மக்களுக்குப் பகிரப்பட்டமையால் இவர்களது முன்னேற்றங்கள் தடைப்பட்டுள்ளன. இப்படி வழங்கப்பட்ட நிலங்களில் தமிழ்த் தொழிலாளியான ஒரு தோட்டத் தொழிலாளிக்குக் கூட நிலம் வழங்கப்படவில்லை. தோட்டபுறங்களில் வெளியாட்கள் குடியேற்றமும் அதனால் இன முரண்பாடுகளும் அதிகரித்து வருகின்றன.  இம்மக்கள் நில உரிமை பெறுவதையே பெருந்தேசிய ஆதிக்கவாதம் அனுமதிக்கவில்லை. இதுவும் ஒருவகைப் பெருந்தேசிய இன ஒடுக்குமுறை  எனலாம். உதாரணமாக நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்களின் நிலத்தொடர்ச்சியை சிதைக்கும் வகையில் 'மேல்கொத்மலைத்திட்டம்' கொண்டுவரப்பட்டது. இது மலையக மக்களின் கூட்டிருப்பின் ஆதாரத்தையே இது பலவீனப்படுத்தியுள்ளது

கிராமம் மற்றும் நகரத்தைக் காட்டிலும் மிகவும் பின்தங்கிய சமூக பொருளாதார நிலைமைகளிலேயே மலையக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சமமான வேலைவாய்ப்பின்மை, கல்வியில் ஏற்றத்தாழ்வு, வளப்பகிர்வில் ஏற்றத்தாழ்வு, போதிய ஊதியம் வழங்கப்படாமை, நிலையான சம்பளம் இன்மை முதலிய காரணிகள் குடும்ப பொருளாதார நிலையை பாதிக்கின்றது. வறுமை நிலையின் காரணமாக மதமாற்ற செயற்பாடுகள் அதிகரித்து வருவதால் கலாசார முரண்பாடுகள் அதிகரிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
சம்பள உயர்வு பிரச்சினைகள் தொழிற்சங்கங்கள் ஊடாகவே தீர்க்கப்படும் நிலை காணப்படுகிறது. அரச துறைகள் நட்டத்தில் இயங்கினாலும் சம்பள உயர்வுத் திட்டங்கள் காலாகாலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது கண்கூடு. ஆனால் பெருந்தோட்டங்களில் இலாப-நட்ட அடிப்படையில் தான் சம்பள உயர்வு கணிக்கப்படுகின்றது. அதனால் போதிய சம்பளத்தை பெற முடிவதில்லை. நிரந்தமற்ற வருமானம் இவர்களை பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்துகின்றது. வாழ்க்கைச் செலவு படிப்படியாக அதிகரிக்கின்ற சூழ்நிலையில் ஒப்பந்தம் செய்து நாட்கூலி வழங்கி கட்டுப்படுத்துகின்ற முறைமையானது இவர்களை பொருளாதார ரீதியில் பாதிக்கிறது.

தொழிலாளர்களின் அவசர தேவைக்காக அவர்களின் கூலியில் இருந்து அறவிடும் தொகையை கையாளும் முதலாளிகளும், தொழிற்சங்கங்களும் தொழிலாளர்கள் மீது அதிகாரத்தை செலுத்தி கட்டுப்படுத்துகின்றன. தொழிலாளர்களிடம் முதலாளிகள் சந்தாவை அறவிட்டு கொடுக்க முதலாளிகளுக்கு சேவை செய்யும் தொழிற்சங்கங்களாகத் தான் மலையகத்தில் இயங்குகின்றன. அதாவது முதலாளிகளின் நோக்கத்தை பூர்த்தி செய்யும், தொழிற்சங்கங்களாகத் தான் பெரும்பாலும் காணப்படுகின்றன.

தோட்டத் தொழிலாளர் மத்தியில் வறுமை வீதம் 32%ஆக இருக்கிறது. ஆனால் முழு இலங்கையினதும் வறுமை வீதம் 15.2%இற்கும் குறைவாக உள்ளது. தோட்ட மக்கள் தொகையில் 49.2% நாளொன்றுக்குத் தேவையான கலோரி தேவையான அளவு கிடைக்காததோடு அதன் விளைவாக தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பெண்களின் ஆரோக்கியம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பிறந்து 28 நாட்களுக்குள் மரணிக்கும் குழந்தைகளின் விகிதாசாரம் நாட்டின் பொதுவான வீதம் ஆயிரத்துக்கு 13.9 ஆக இருக்கும் போது தோட்டப் பகுதிகளில் அது 31%ஆக இருக்கிறது. 5வயதுக்கும் குறைவான பிள்ளைகளின் மரண விகிதாசாரம் ஆயிரத்துக்கு 51.6% தோட்டப் பகுதிகளில் பிறக்கும் பிள்ளைகளின் வளர்ச்சிக்குன்றல் நகர்ப்புற பிள்ளைகளைவிட மூன்று மடங்காகும்

கல்விப் பிரசினைகள் அவர்களது வருமான ஈட்டத்தினைப் பாதிக்கிறது. கல்வியைப் பெறுவதிலும், வழங்குவதிலும் மலையகத்தில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன. சமுதாயத்தின் மீதான அக்கறை இன்மை, பாடசாலைகளில் புதிதாக மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக பெற்றோரிடம் பெருமளவு நிதி அறவிடப்படுவது, அதிபர், ஆசிரியர்கள் மற்றும் வளப்பற்றாக்குறை, மாணவர்களின் இடை விலகல்,  நகரங்களிலேயே பாடசாலைகள் அமைந்துள்ளமை முதலியன முக்கிய பிரச்சினைகளாகக் கூறலாம். கல்வியறிவின்மையால் தோட்ட வேலைகளினுள்ளே முடங்கிவிடும் நிலை காணப்படுகின்றது.

மலையக மக்கள் தோட்ட வைத்தியசாலைகளையே நம்பியிருக்கின்ற நிலையில் உள்ளனர். தரம் வாய்ந்த வைத்தியசாலைகள் இப்பகுதிகளில் மிகக் குறைவாக காணப்படுகின்றன. பல நோய்கட்கு இம்மக்கள் அடிக்கடி உள்ளாகின்றனர். குருதிச்சோகை நோய் இப்பகுதி மக்களிடத்தே அதிகம் காணப்படுகிறது. காய்ச்சல், தடிமன் வலிப்பு உள்ளிட்ட நோய்கள் அதிகம் ஏற்படுகின்றன. போசாக்கு குறைந்த சிறுவர்கள் இங்கு அதிகரித்துள்ளனர். மேலும் வைத்தியர்கள், தாதிமார்கள் பற்றாக்குறைகளும் காணப்படுகின்றன.
சுகாதார ரீதியான பிரச்சினைகள் பற்றி பார்ப்பின் சுகாதார வசதிகள் வாழ்வதற்குத் தகுதியற்ற முறையில் காணப்படுவதோடு, காலசாரம் மற்றும் வாழ்க்கை முறை மாத்திரமன்றி குடும்ப உறவுகளைக் கூட நெருக்கடிக்குள் தள்ளும் 'லயன் காம்பரா' எனும் குடியிருப்புக்குள்ளேயே முடக்கப்பட்டுள்ளனர்.  சுத்தமற்ற குடிநீர், மாசடைந்த மலசல கூடங்கள், கழிவுகள் சிறப்பாக முகாமைத்துவம் செய்யாமை குடிநீர்வழங்கல் பிரச்சினைகள் முதலிய சுகாதாரப் பிரச்சினைகள் இவர்களைப் பாதிக்கின்றன.
அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இது இவர்களது பொருளாதார ஈட்டத்தை பெரிதும் பாதிக்கின்றது. சொந்த வீடின்மை முக்கிய பிரச்சினையாகும். மேலும் 25%மான மலையக தமிழ் மக்களே மின்சார வசதி பெற்றுள்ளனர். சுத்தமற்ற குடிநீர், ஒடுங்கிய பாதைகள், செப்பனிடப்படாத வீதிகள், நெருக்கமான குடியிருப்புக்கள், விலங்குகள் மற்றும் பூச்சித் தொல்லைகள் (காட்டு யானைகள் மற்றும் அட்டை முதலிய பூச்சிகளால் ஆபத்து), தொழினுட்ப வசதிகள் குறைவு (தந்தி, கணனி, இணையம் முதலியன) பொதுத்தேவைக்கான கட்டடங்கள் இன்மை, தொழிற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் இன்மை உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிநோக்குகின்றனர்.

இவர்களால் செய்கை பண்ணப்படும் கரட், கோவா, லீக்ஸ், உருளைக்கிழங்கு முதலிய வீட்டுத்தோட்ட பயிகளுக்கும் போதிய சந்தைவாய்ப்பின்மை, விலைத்தளம்பல், நியாயமான விலை கிடைக்காமை மற்றும் இடத்தரகர் செயற்பாடுகள் என பல பிரச்சினைகளால் வருமான மட்டம் தாழ்வான நிலையிலேயே உள்ளது.

தோட்டங்கள் தனியார்மயமாக்கல், வேலைப்பளு அதிகம், ஊதிய முரண்பாடு, வாழ்க்கைச் செலவு உயர்வு, வங்கிப் பணவைப்புக்கள் சரிவர பேணப்படாமை, குத்தகை அடிப்படையிலான வேலைகள், மருத்துவச்செலவுகள், சங்க நிதி அறவீடு, தொழில் செய்வதில் விரக்தி முதலியன வருமான மட்ட உயர்வைப் பாதிக்கின்றன

புவியியல் சார் பிரச்சினைகளும் இவர்களது பொருளாதார மேம்பாட்டைப் பாதிக்கின்றன. அந்த வகையில் மண்சரிவு, வெள்ளம், பாறை வீழ்வு, நிலவழுக்குகை, அடை மழை, கடும் பனிஃ குளிர், சேற்று நிலங்கள், மண் போசனை இழப்பு, பனிமூட்டம், மின்னல் தாக்கங்கள் அத்துடன் இரசாயனப்பாவனையால் நிலம், நீர், வளி மாசடைதல் பிரச்சினைகளும் என பல பிரச்சினைகள் தொழில் நடவடிக்கைகளைப் பாதிக்கின்றன

தொகுத்து நோக்கின் இவர்கள் அரசியல், சமூக, பொருளாதார, கலாசார என பல்வேறுபட்ட வகையிலும் பாதிப்பினை எதிர்நோக்கி வருகின்றமை கண்கூடு. இதனை நிவர்த்தி செய்ய மலையக முன்னணி சக்திகள் முதலில் தமது பிரதேசத்தில் மக்களை அறிவூட்டி அரசியல் மயப்படுத்தி மக்களை ஒன்றிணைத்து பிரச்சினைகளைக் களைய முன்வரவேண்டும். மேலும் மலையக தொழிலாளர்கள், வர்த்தகர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், புலமையாளர்கள், என ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் தங்கள் தளங்களில் நின்று கொண்டு மலையகத் தேசியத்திற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக கல்வி விருத்திக்கு பாடுபட வேண்டும்.

இலங்கைப் பிரஜைகளுள் முக்கிய இடம் வகிக்கும் மலையக தமிழர்கள் இலங்கையின் பொருளாதார விருத்தியில் முதுகெலும்பாக திகழ்கின்றனர். ஆனால் அவர்களது வாழ்க்கை பல இன்னல்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவர்களும் ஏனைய இனங்களைப் போல சம அந்தஸ்துடன் நடைமுறை வாழ்வை முன்னெடுத்துச் செல்ல இலங்கை மக்கள் உதவிட வேண்டும்.

                                               




                                                  உசாத்துணை
1. சாரல் நாடன், 2003, மலையக தமிழர் வரலாறு, சாரல் வெளியீட்டகம்,  கொட்டகலை, பக்: 49-96
2. அந்தனி ஜீவா, 2005, மலையக தொழிற்சங்க வரலாறு, வர்த்தா பதிப்பகம், அகுரண,  பக்- 5-14
3. அருணாசலம்.க., 1994, இலங்கையின் மலையகத் தமிழர், தமிழ்மன்ற வெளியீடு, பக்- 6-53
4. சத்தியநாதன்.ச., 1999, மலையக அரசியலும் சமூகமும், ஞானம் பதிப்பகம் கண்டி,  பக்- 9-99
6.  http://www.namathumalayagam.com/2013/03/blog-post_97.html






No comments:

Post a Comment