Friday, January 3, 2014

மராட்டியரின் எழுச்சியும் சிவாஜியின் முக்கியத்துவமும்


இந்திய வரலாற்றில் மராட்டியரின் எழுச்சி மிக முக்கிய வரலாற்று நிகழ்ச்சி ஆகும். 17ஆம் நூற்றாண்டில் மராட்டியர் எழுச்சி இடம்பெற்றுக் கொண்டது. மன்னன் ஷாஜி பான்ஸ்லே, சிவாஜி என்போர் மராட்டியர் எழுச்சிக்கு காரணமாயினர். சமகாலத்தில் மொகாலய மன்னர்களினால் வட இந்தியாவில் ஆட்சிமுறை முன்னெடுக்கப்பட்டது. மொகாலய மன்னர்களின் தக்கணம் மீதான தாக்குதல் 17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இடம்பெற்றது. இந்த தாக்குதல்களினைத் தடுக்கும் விதமாக இந்து அரசு ஒன்றினை நிறுவும் தேவை நிமிர்த்தம் பெரு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிக்கான அடித்தளத்தினை மராட்டிய மன்னனான ஷாஜி பான்ஸ்லே இட்டார். அதன் தொடர்ச்சியாக அவரது மகன் சிவாஜி என்பார் மராட்டியரது ஆதிக்கத்தினை வட இந்தியாவில் ஏற்படுத்தலானார்.

மராட்டியர் எழுச்சிக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. மராட்டிய மன்னனான சத்ரபதி சிவாஜியும் அவரின் தந்தை ஷாஜி பான்ஸ்லேயும் மராட்டியர் எழுச்சிக்கு மிக முக்கிய காரணமாய் அமைகின்றனர். மேலும் பல அடிப்படைக் காரணங்களும் கூறப்படுகின்றன. இந்தியாவின் புவியியல் அமைப்பானது மராட்டிய மக்களின் தன்மையையும், மன எழுச்சியையும் உருவாக்கவும், ஊக்குவிக்கவும் துணை புரிந்தது. மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் நருமதை ஆற்றிலிருந்து தக்கண பீட பூமியின் தென்மேற்குப்பகுதி வரை காணப்பட்ட அடர்ந்த காடுகள் கொரில்லா போர் முறையைக் கையாள வழிசமைத்தது.

மராட்டிய நாடு வளம் மிக்கதாகவும் வன்மை மிகக் குன்றாமலும் வளப்பம் மிக்குத் தோன்றாமலும் இடைப்பட்ட நிலையில் இருந்தமையால் அந்நாட்டு மக்கள் பெருமுயற்சி உடையவர்களாக இருந்தனர். கருநாடக சமவெளி, சையாதரி மலைப்பகுதிகள் மராட்டிய நாட்டின் முக்கிய பகுதிகளாக காணப்பட்டன. காடுகள் சூழ்ந்த குன்றங்கள் இயற்கைக் கோட்டைகளாக எதிரிகளிடமிருந்து நாட்டினை பாதுகாத்தன. குன்றும், காடும் நிறைந்த இந்த கடினமான பிரதேசத்தில் ஆங்காங்கு காணப்பட்ட கணவாய்கள் ஊடுருவிச் செல்ல எளிதாயிருந்தன. இத்தகைய இயற்கை அரண்களாலான புவியியல் அமைப்பு மராட்டியரை அந்நியராதிக்கத்திலிருந்து பாதுகாத்தது. இதனை சாதகமாக பயன்படுத்தி மராட்டியர்கள் எழுச்சி பெற்றுக்கொண்டனர்.

14ஆம் 15ஆம் நூற்றாண்டுகளில் வடநாடு பூராக பரவிய பக்தி இயக்கம் 17ஆம் நூற்றாண்டில் மராட்டிய நாட்டிலும் செல்வாக்கு பெற்றுக் கொண்டது. சமகாலத்தில் மக்களின் சமய உணர்ச்சி அதிகரிக்கலானது. ஏசுநாதர், துக்காராம் முதலியோர் இந்து சமய பக்தியின்பால் மக்களைத் தூண்டினர். மக்களிடையே சமயத்தின்பால் பற்று ஏற்படலாயிற்று. பக்தி இயக்கமானது சமயத்தினை அடிப்படையாக கொண்டு இந்துக்களை மராட்டிய நாட்டில் ஒன்றுபடுத்திற்று. மராட்டியர் இலக்கியமானது பொதுமக்களும் கற்றுணருகின்ற வகையில் எழுதப்பட்டது. இவ்விலக்கியத்தின் மூலம் மக்கள் மராட்டிய தேசியத்தை வளர்த்துக்கொண்டனர். மராட்டியரிடையே காணப்பட்ட வீர உணர்வும் சமயத்தினைக் காக்க வேண்டும் என்ற பற்றும் மராட்டியரை வலுப்படுத்தியது. வீர உணர்வானது மறுமலர்ச்சியின் வெளிப்பாடாகவும், போரில் ஈடுபாடு கொண்ட இந்து சமயத்தின் புறத்தோற்றமாகவும் தோன்றியது. ராமதாஸர் என்பாரும் இந்து தர்மத்தினைக் பாதுகாத்து அதற்கு புத்துயிர் அளித்து அதனை புதியதொரு சக்தியாக மாற்றியமைத்தார். இவரது செயற்பாடுகள் இந்துக்களிடத்து ஊக்கத்தை அளித்ததுடன் முஸ்லிம்களின் ஆதிக்கத்தினை மட்டுப்படுத்தும் எண்ணம் தோன்றவும் காரணமாயிற்று.


மராட்டியர்கள் மொகலாயரின் அரசியல், இராணுவ தந்திரங்களை அறிந்துகொண்டமையானது மொகலாயரை வீழ்த்தும் செயற்பாடுகளுக்கு உதவியளித்தது. மொகலாய மன்னன் ஜஹாங்கீர் ஆட்சிக் காலத்தில் மொகலாய அரச பிரதிநிதிகளிடமிருந்து பல்வேறு நிருவாக திறமைகளை மராட்டியர்கள் கற்றுக்கொண்டனர். மேலும் பீஜபுரி, கோல்கொண்டா, அகமது நகர் முதலிய ஆட்சிகளுடனும் தொடர்புகளை வைத்துக் கொண்டதன் வாயிலாகவும் அரசியல் மற்றும் இராணுவ தந்திரங்களையும், இரகசியங்களையும் அறிந்து கொண்டனர். இவர்கள் 300 வருடங்கள் முகமதியருடன் கொண்ட தொடர்பினால் பெற்ற அரசியல் அனுபவமானது மராட்டியரின் எழுச்சிக்கு துணைபுரிந்தது.

மராட்டியர்கள் என்றுமே செயல்முறை கோட்பாட்டினராக காணப்பட்டனர். ஒரு பொருள் பயன்தரவல்லது என்று அறிந்துவிட்டால், அதனை விருப்பத்துடன் பயன்படுத்துவதற்கு முயற்சிப்பர். ஒன்று எவ்விடத்து காணப்படினும் அது பயனுடையதெனில் அதனை கடனாக வாங்கிக் கொள்ள தலைப்படுமளவுக்கும் அல்லது புதிதாக தாங்கள் அதனை பின்பற்றவும் தயங்கிலர். இத்தகு மராட்டியரின் குணாதிசயமும் மராட்டியரின் எழுச்சிக்கு வழிசமைத்தது எனலாம்.

17ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியின் சமகால சூழ்நிலைகள் மராட்டியருக்கு சார்பாயமைந்தமையினால் மராட்டியர் தமது இருப்பினை இஸ்திரமான முறையில் நிலைநிறுத்தினர். சமகாலத்தில் இந்திய மேற்குப் பகுதியின் அரசியலாதிக்கம் நலிவடைந்தது. அந்நலிவினை சாதகமாக பயன்படுத்தியே மராட்டியர் எழுச்சி பெற்றுக் கொண்டனர். நைசாம் சாகிபின் அகமது நகர் அரசு மொகாலய பேரரசினுட் கொண்டுவரப்பட்டது. பீஜபுரி இராச்சியமும் பலவீனமடைந்தது. மத்திய அரசின் ஆற்றல் மிக்க கட்டுப்பாடுகளும் தளர்வுற்றன. இதனால் சிறு தலைவர்களின் கொடுங்கோல் செயல்கள் அதிகரிக்கலாயின. வஞ்சனைகளும், சூழ்ச்சிகளும் அதிகரித்தன. கொள்ளையும், கொலைகளும் கொஞ்சி விளையாடின. குறுநில தலைவர்களை கட்டுப்படுத்தும் தனிப்பெருந் தலைவர்கள் மறைந்து போயினர். சமகாலத்தில் பூனாவின் நிருவாகநிலை மிக மோசமாக காணப்பட்டது. இத்தகு சூழ்நிலையில் ஷாஜியின் எழுச்சியும் அதனைத் தொடர்ந்து சிவாஜி அரசினை உறுதிப்படுத்தியமையும் ஒழுங்கு மற்றும் அமைதியை நிலைநாட்டியமையும் மற்றும் இவரது குவிமுக ஆட்சிமுறையின் உறுதிப்பாடு மக்களிடத்து வரவேற்பினைப் பெற்றமையும் மராட்டியரின் எழுச்சியினை தீவிரப்படுத்தின.

மராட்டிய மன்னன் ஷாஜி பான்ஸ்லே என்பாரின் முன்னேற்றகர செயற்பாடுகள் மராட்டியரின் எழுச்சிக்கு காரணமானது. பான்ஸ்லே என்ற குடும்பத்தைச் சேர்ந்த இவர் அகமது நகரில் சமகாலத்தில் ஆட்சி செய்த நிஜாம் ஷாஹிகளின் ஆட்சியில் சிறு இராணுவ அதிகாரியாக இருந்தார். மொகாலயருடனுண்டான போரில் கலந்து கொண்டு தனது திறமையினால் பூனாவையும் அதனைச் சுற்றிக் காணப்பட்ட பகுதிகளையும் ஜாகீராகப் பெற்று புறத்தார் நலியாமல் பாதுகாத்தார். அகமது நகரினைக் கைப்பற்றி மொகலாய பேரரசிற்கு சவால் விடுத்தமையானது மராட்டியரிடத்து துணிச்சலினை ஏற்படுத்திற்று. கர்நாடகத்துடனான போரில் பீஜபுரி மன்னருக்கு வெற்றியீட்டிக் கொடுதமையினால் பெங்களூர் உட்பட பல ஜாகீர்களை இனாமாக பெற்றார். இத்தகு இராணுவ நடவடிக்கைகள் இவரது மகன் சிவாஜியின் நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக காணப்பட்டது. மேலும் வரலாற்றை புதிய பாதையில் புரட்சிகர முறையில் திசை திருப்பிய சிவாஜியை மராட்டியருக்கு அளித்த பெருமையின் வாயிலாகவும்; மராட்டியர் எழுச்சிக்கு ஷாஜி காரணமானார் எனலாம்.









மராட்டியரின் எழுச்சிக்கு மிக முக்கிய பங்கு வகித்தவர் மன்னன் சிவாஜி என்பது கூறத்தக்கது. இவர் தனது துணிகர செயற்பாடுகளால் மராட்டிய அரசினை உறுதிப்படுத்தினார். தனது 19ஆவது வயதிலேயே தன் வீர வாழ்வினைத் தொடங்கினார் கொரில்லா போர் புரிவதில் திறமையானவராக காணப்பட்டார். உடலுறுதியும் மனவலிமையும் கொண்ட மறப்பெரும்படைஇவரதுமுன்னேற்றத்திற்கு பக்க பலமாயிருந்தது. பீஜபுரி, சூரத் நகர் உள்ளிட்ட பல நகரங்களின் நிருவாக நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இவர் காணப்பட்டார். அவுரங்கசீவ் இவரின் நடவடிக்கைகளினால் இவரை சிறையிலடைத்தார். அங்கிருந்து தப்பித்து தனது துணிகர தன்மையினை வெளிப்படுத்தினார். இதனால்   இவருக்கு அவுரங்கசீவால் 'ராஜா' என்று பட்டமும் வழங்கப்பட்டது. இவர் அரசியல் உறுதிப்பாட்டினை ஏற்படுத்த குவிமுக ஆட்சியினை நிறுவினார். தேஷ்முக்கள், தேஷ்பாண்டேக்கள் முதலிய அதிகாரிகளை தனது நேரடி கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தார். நிருவாகத்தில் மேலும் பல மாற்றங்களினை செய்தார். அஷ்ட பிரதானிகள் குழு, பிராந்திய நிருவாகம், வரி முறைகள், தரிசு நிலங்களை வளமாக்கல், உழவர் நலன் பேணல் முதலிய பல செயற்றிட்டங்கள் இவரது ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டன. இவரது சிறப்பான அரசியல் நடவடிக்கைகளின் காரணமாக மொகாலயரிடமிருந்து பல பகுதிகளைப் பெற்று மராட்டியரின் இராச்சியத்தை விரிவுபடுத்தினார். இத்தகு சிவாஜியின் செயற்பாடுகள் மராட்டியர் எழுச்சிக்கு காரணமானது.
தொகுத்து நோக்குமிடத்து இந்து சமய பக்தி இயக்க நடவடிக்கைகளும், வட இந்திய புவியியல் அமைப்பும், மாராட்டியரின் தேசிய உணர்ச்சிப் பெருக்கமும்,  சமகால சூழ்நிலைகளும், மராட்டிய மன்னர்களான ஷாஜி, சிவாஜி முதலிய மன்னர்களின் ஆளுமைகளும் மராட்டிய மக்களின் ஆற்றல்களும் மராட்டியரின் எழுச்சிக்கு காரணமாய் அமைந்தன.

மராட்டியரின் எழுச்சிக்கு மிக அதிகளவான பங்களிப்பினை வழங்கிய மன்னனாக சிவாஜி காணப்படுகிறார். சிவாஜியின் போர் நடவடிக்கைகள், ஆட்சிச் சிறப்பு முதலியன மராட்டிய அரசினை வளப்படுத்தின. இவர் மராட்டிய மன்னர் ஷாஜி பான்ஸ்லேவுக்கும் அவரது முதல் மனைவியான ஜீஜபாய் என்பாளுக்கும் மகனாக 1627 இல் சிவனார் கோட்டை என்ற இடத்தில் பிறந்தார். ஷாஜி 1636 இல் பீஜபுரியில் தனது கடமைகளை மேற்கொண்ட போது தனது இரண்டாம் மனைவியை அழைத்துக் கொண்டு பீஜபுரி சென்றுவிட்டார். இதனால் சிவாஜி தனது தாயாரின் அரவணைப்பில் இருந்தார். தாதாஜி கொண்டதேவ் என்ற அந்தணர் சிவாஜியின் கல்வி நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக காணப்பட்டார். இவரது மேற்பார்வையின் கீழ் ஒரு சீரிய இந்துவாக சிவாஜி வளர்க்கப்பட்டார். இவர் வாழ்ந்த நாடும், இளமையில் பெற்ற கேள்வி அறிவும், தந்தையிடமிருந்து ஓரளவு புறக்கணிக்கப்பட்ட நிலையும் இணைந்து இவரது தன்மையினை உருவாக்கின. 

மன்னன் ஷாஜி பான்ஸ்லே மராட்டியரின் அரசியல், இராணுவ வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தார். தனது மகனான சிவாஜிக்கு முன்னோடியாக திகழ்ந்தார். இவரைப் பின்பற்றி சிவாஜி தக்காணத்தில் மாபெரும் மராட்டியப் பேரரசை நிறுவி,  அதனைக் கி.பி.1674 முதல் 1680 வரை அரசாண்டார். சிறு வயது முதலே இவர் தனது திறமைகளை வெளிப்படுத்தலானார். தனது 18ஆவது வயதில் தேர்னா கோட்டையைக் கைப்பற்றினார். தொடர்ந்து பல கோட்டைகளைக் கைப்பற்றி தனது திறமைகளை வெளிப்படுத்தினார். ரெய்கார், பிரதாபகார் முதலிய கோட்டைகளையும் கட்டி மகாராஷ்டிரத்தைப் பிணைக்கக்கூடிய கோட்டைச் சங்கிலி ஒன்றையும் ஏற்படுத்தினார்.

1656 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சிவாஜியின் செயற்பாடுகள் தீவிரமடைந்தன. இவர் ஜாவலி என்ற சிறு கோட்டையை, அதனைக் காத்து வந்த சிற்றரசரை கொல்லுவித்துக் கைப்பற்றினார். ஜுன்னார், அகமது முதலிய நகரங்கள் வரை புகுந்து கோட்டைகளைத் தாக்க துணிந்தார். இதனைத் தடுக்க தக்கணத்தை நிருவகித்த அவுரங்கசீவ் படையனுப்பி அதில் வெற்றி கண்ட போதிலும் சிவாஜியை முழுமையாக அடக்க முடியவில்லை. இதே வேளை மொகாலயரிடையே ஏற்பட்டுக்கொண்ட பட்டப் போட்டியால் பீஜபுரி, மகாராஷ்டிர பகுதிகளில் சிவாஜி தன் விருப்பின்படி செயற்படலானார். இவரை முற்றாக அழிக்கும் நோக்குடன் பீஜபுரி சுல்தான் தன் படைத்தலைவரான அப்ஸல்கானின் தலைமையில் படையொன்றினை 1659 ஆம் ஆண்டு அனுப்பினான். அப்ஸல்கானை சிவாஜி கொன்றார். பின்னர் மராட்டியப் படைகள் பீஜபுரி மீது தாக்குதல்களை புரிந்து ஏராளமான பொருட்களை கொள்ளையடித்தது. மராட்டியரின் இத்தகு மோசமான  நடவடிக்கைகளால் சினமுற்ற அவுரங்கசீவ் ஷாயிஸ்தகான் என்பானின் தலைமையில் படையொன்றினை அனுப்பினார். ஷாயிஸ்தகான் பூனாவை கைப்பற்றினான். சிவாஜியின் படைகள் நள்ளிரவில் ஷாயிஸ்தகானின் பாசறையினுள் சென்று பெரும் சேதத்தினை விளைவித்தன. பின்னர் ஷாயிஸ்தகானின் படை பின்வாங்கியது. தொடர்ந்து சிவாஜி 1664 ஆம் ஆண்டு சூரத் துறைமுகத்தை தாக்கினார். பின்னர் மொகலாயர்களின் தாக்குதல்களால் 1665 இல் அவுரங்கசீவுடன் சமாதான உடன்படிக்கை செய்ய நேர்ந்தது. பின்னர் அவுரங்கசீவுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் 1666இல் சிவாஜியும் அவரின் மகனும் சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டது. சிறையிலிருந்து சிவாஜியும் அவரின் மகனும் தப்பித்துக் கொண்டனர். இவரது இத்தகு வீர செயலினைப் பாராட்டி அவுரங்கசீவு இவருக்கு 'ராஜா' என்ற பட்டத்தினை வழங்கினார்.

1670-1674 வரையான காலப்பகுதியில் சிவாஜி மேற்கொண்ட தாக்குதல்களில் வெற்றி கிட்டிற்று. இத்தாக்குதல்களும் அதனால் கிடைத்த வெற்றிகளும் மராட்டியரின் எழுச்சியிற்கு சான்று பகர்கின்றன. 1670 ஆம் ஆண்டு சிவாஜி தனது தாக்குதல்களினை உக்கிரப்படுத்தினார். சூரத் பகுதியை மீண்டும் கொள்ளையடித்தார். திடீர் தாக்குதல்களை அடிக்கடி புரியத் தலைப்பட்டார். பிஜாப்பூர்., பிரார், கான்தேஷ், குஜராத், கர்நாடகம் என பல பகுதிகள் இவரது திடீர் தாக்குதல்களால் நிலைகுலைந்தன. சிறப்பான முறையில் அமைக்கப்பட்ட குதிரைப்படைகளின் உதவியுடன் இந்த தாக்குதல்களை மேற்கொள்ளப்பட்டு அவற்றில் சிவாஜி வெற்றியீட்டினார். 1674 ஆம் ஆண்டு சிவாஜி ராய்கட் என்ற கோட்டையில் வைத்து 'சத்ரபதி' என்ற பட்டத்துடன் அரியணை ஏறினார். தமது அரசிற்கு 'சுயராஜ்ஜியம்' என்ற பெயரை வழங்கினார். வேற்றுநாட்டாரின் அடக்குமுறையிலிருந்து விடுபட்டு மராட்டியரின் தேசிய தன்னுணர்வு சிவாஜியின் செயற்பாடுகளால் வளர்ச்சியடைந்தது. மராட்டியரின் எழுச்சியில் முக்கிய இடத்தைப் பெறுகிறார்.

வடமேற்கு இந்தியாவில் மொகலாயர்கள் பெரும் போர்களில் ஈடுபடவேண்டிய கட்டாய நிலைக்கு ஆளாக்கப்பட்டதனால் சிவாஜியின் ஆதிக்கத்தினை கட்டிப்படுத்துவதில் கவனம் குறைந்தது. இந்நிலையினை தமக்கு சாதகமாக பயன்படுத்தியும், கோல்கொண்டா மன்னனுடன் நட்பு ஏற்படுத்தியும் பல போர்களை புரிய தலைப்பட்டார். பீஜபுரி அரசுடன் போர் தொடுத்து செல்வங்களை சூரையாடினார். கோல்கொண்டா மன்னனுடன் 1677ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் செய்துகொண்டு கர்நாடகப் பகுதி மீது போர் தொடுத்து வெற்றிகள் ஈட்டினார். செஞ்சியையும், வேலூரையும் தாக்கி கைப்பற்றி தஞ்சையில் ஆண்ட தமது சகோதரனான ஏகோஜியிடமிருந்து, ஏகோஜியின் நாட்டின் ஒரு பகுதியையும் பெற்றுக் கொண்டார். இத்தகு இவரது போர் நடவடிக்கைகளினால் மராட்டிய அரசு விரிவுற்று எழுச்சி பெற்றது.

சிவாஜியின் சிறப்பான ஆட்சிமுறையானது மராட்டிய அரசியல் நிலையினை இஸ்திரப்படுத்தியது. ஆட்சியாதிக்க கொள்கையினை சிவாஜி பின்பற்றினார். இவர் மையக் குவிமுக அரசினை நிறுவி ஆட்சியை முன்னெடுத்தார். பண்டைக் காலம் முதல் இருந்து வந்த ஊர்காவல் அதிகாரிகளான தேஷ்முக்குகளையும், வருவாய்த்துறை அதிகாரிகளாக இருந்து வந்த தேஷ்பாண்டேக்களையும் தனது நேரடியான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அவர்களைக் கட்டுப்படுத்தி நிருவாகத்தை சீர்படுத்தினார். இவர்களின் கடமைகளைக் கண்காணிக்க கற்கண்கள் என்ற அதிகாரிகளையும் நியமித்தார். மத்திய அரசின் தலைமை இடத்தை மராட்டிய மன்னன் எட்டு வகையான தலைமை அதிகாரிகளுடன் அலங்கரித்தார். இந்த எட்டு வகையான தலைமை அதிகாரிகளும் 'அஷ்ட பிரதானிகள்' என அழைக்கப்பட்டனர். இந்த எட்டு அதிகாரிகளையும் கொண்ட அக்குழுவினை அரசனிற்கு ஆலோசனை கூறும் மன்றமாக மாற்றியமைத்தார். இக்குழுவில் முதலமைச்சர் 'பேஷ்வா' எனப்பட்டார். இவ்வதிகாரிகள் அனைவரும் சிவாஜியின் ஆட்சிக்காலத்தில் மன்னனுக்கு கட்டுப்பட்டு விளங்கினர். சிவாஜி, இவ்வதிகாரிகளின் பதவிகள் மரபுரிமையாக்கவில்லை அத்துடன் மானியங்களோ ஜாகீர்களோ வழங்கவுமில்லை. இச்செயற்பாடு அரசினை மேலும் வலுப்படுத்தியது. 

உழவர்கள், நீதிநிருவாகத்தினர், படை என்பன அரசினை தாங்கிக் கொண்டிருக்கும் 3 தூண்களாக காணப்பட்டன. மராட்டிய அரசிற்குட்பட்ட பகுதியுள்ளும், அயல் பகுதிகளிலிருந்தும் பெற்ற வரிகள் அரசினை வளப்படுத்தியது. வரிவசூலிப்பினை இலகுபடுத்த அரசினை பல பகுதிகளாக சிவாஜி பிரித்தார். பல பிராந்தியங்களாக அரசு பிரிக்கப்பட்டது. ஆட்சியின் அடிமட்ட அலகாக கிராமம் காணப்பட்டது. வரிகள் காசாகவேனும் பொருளாகவேனும் அறவிடப்பட்டன. சவுத், சர்தேசமுகி முதலிய சட்ட, நீதி முறைமைகளுக்கு புறம்பான வரிகளும் அறவிடப்பட்டன. மற்றும் போர்களின் போது கொள்ளையடித்த செல்வங்களும் நாட்டின் அபிவிருத்திக்கு உதவியது. இத்தகைய வருவாய் இல்லாமல் போயிருந்தால் தொடர்ச்சியான போராட்டங்களில் அல்லலுற்றிருக்கவேண்டி இருந்திருக்கக்கூடும். சமயக் கோட்பாட்டு முறைகளை போற்றியமையானது மக்களைக் கவர்ந்தது. மேலும் சமய அடிப்படையில் மக்களிடையே ஒற்றுமை உணர்வையும் ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளையும் இவர் முன்னெடித்தார். எனவே சிவாஜியின் காலத்தில் காணப்பட்ட இத்தகைய சிறப்பான நிருவாகம் மராட்டிய அரசின் எழுச்சிக்கு வழிகாட்டியது.

சிவாஜியின் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மராட்டிய அரசின் உறுதித்தன்மைக்கும் எழுச்சிக்கும் உதவியது. இயற்கையாக காணப்பட்ட மலைக் கோட்டைகள், காடுகள் சூழ்ந்த குன்றங்கள் முதலியன இயற்கைக் கோட்டைகளாக எதிரிகளிடமிருந்து நாட்டினை பாதுகாத்தன. குன்றும், காடும் நிறைந்த இந்த கடினமான பிரதேசத்தில் ஆங்காங்கு காணப்பட்ட கணவாய்கள் ஊடுருவிச் செல்ல எளிதாயிருந்தன. இத்தகு இயற்கை அரண்களை சிறப்பாக பயன்படுத்தியும் கொரில்லா போர்முறையைக் கையாண்டும் நாட்டின் பாதுகாப்பினை சிவாஜி உறுதிப்படுத்தியதன் மூலம் மராட்டிய அரசினை எழுச்சிபெறச் செய்தார். மேலும் இராணுவப் படையும் சிறப்பான கட்டமைப்பினைக் கொண்டு காணப்பட்டது. சிவாஜி மராட்டிய தரைப்படை ஒன்றினை நிறுவினார். படை வீரர்களை தாமே நேரில் பார்த்து சேர்த்துக் கொண்டார். தரைப்படை மற்றும் குதிரைப்படை என்பன சிறப்பாக செயற்படுமளவிற்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக குதிரைப்படையினை எடுத்து நோக்கின் குறைந்த சுமையுடன் ஒரு வீரனை மட்டும் சுமந்து வேகமாக செல்லும் வகையில் குதிரைப்படை தயார் செய்யப்பட்டது. உதாரணமாக சிலதார் குதிரைப்படையினைக் கூறலாம். குதிரைப்படையில் அரசால் நிறுவப்பட்டு பராமரித்து வந்த படை ஒன்றும், அரசின் செலவில் தாங்களே குதிரைகளை வைத்து பராமரித்து வந்த தனிப்படைஞர்படை ஒன்றும் காணப்பட்டது. போர் வீரர்களுக்கும் மட்டுப்பாடுகள் சில காணப்பட்டன. குறிப்பாக பெண்களை போரிற்கு உடனழைத்து செல்லலாகாது, பகைவரிடமிருந்து கைப்பற்றிய பொருட்களை அரசிடம் ஒப்படைத்தல் வேண்டும் போன்ற சில கட்டுப்பாடுகள் காணப்பட்டன. இவ்வாறான சிறப்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் மராட்டிய அரசினை எழுச்சியடையச் செய்தது என்ற வகையில் அவரது முக்கியத்துவத்தை அறிய முடிகிறது.

சிவாஜியின் வீரம் மிக்க செயற்பாடுகள் மராட்டிய அரசினை வலிமைப்படுத்தியது. இவர் சில   சந்தர்பங்களில் எதிரிகளுடன் சமாதான வழிமுறைகளைக் கையாண்டும், சில சந்தர்பங்களில் திடீர் தாக்குதல்களையும் கொரில்லா தாக்குதல்களையும் செய்தும், சில வேளைகளில் நேரடி போர்களில் ஈடுபட்டும் என தனது ராஜதந்திர நடவடிக்கைகளின் மூலம் மராட்டிய அரசினைக் கட்டி எழுப்பினார் என்று கூறுவது பொருத்தமாகும். சிவாஜியின் பின்னர் அவர் மகன் சம்பாஜியும் அதன் பின்வந்த மராட்டிய மன்னர்களும் சிவாஜியைப் போன்று சிறப்பான ஆட்சியினை முன்னெடுக்க தவறியமையின் காரணமாக மராட்டிய அரசு வீழ்ச்சியடந்தது. 

மராட்டிய அரசின் எழுச்சிக்கு வட இந்திய புவியியல் அமைப்பு, மாராட்டியரின் தேசிய உணர்ச்சி,  சமகால சூழ்நிலைகள், ஷாஜி பான்ஸ்லேயின் நடவடிக்கைகள், மற்றும் வீரம் நிரைந்த மராட்டிய மன்னனாக வரலாறு போற்றும் சத்ரபதி சிவாஜியின் நிருவாகத் திறமை, போர் நடவடிக்கைகள் முதலிய காரணங்களும் மராட்டிய மக்களின் ஆற்றல்களும் மராட்டியரின் எழுச்சிக்கு காரணமாய் அமைந்தன. மராட்டிய அரசின் எழுச்சிக்கு சத்ரபதி சிவாஜி, சிறப்பான நிருவாகம், அரசை விரிவுபடுத்தியமை என சிறப்பான பங்களிப்பை வழங்கியமை போற்றத்தக்கது.





Print Friendly and PDF

No comments:

Post a Comment