Tuesday, March 4, 2014

கிரோக்கத்தில் ஒலிம்பிக்



கிரேக்கம் ஒரே நாடாக இருந்தபோதிலும், ஆட்சிமுறை நகர ராஜ்ஜியங்களுக்கிடையே மாறுபட்டது. உதாரணமாக, ஸ்பார்ட்டாவில் மன்னராட்சி: ஏதென்ஸில் கி.மு. 1066 வரை மன்னராட்சி இருந்தது. இதற்குப் பிறகு, மாஜிஸ்ட்ரேட் நகர ராஜ்ஜியத் தலைவரானார், மக்களாட்சி மலர்ந்தது. இந்த முறையில், உயர் குடியினர் மட்டுமே வாக்குரிமை பெற்றவர்கள். இவர்களுள், ஓட்டளிக்க இருபது வயது ஆகவேண்டும். இரண்டு சபைகள் இருந்தன. போலே (Boule) என்பது மேல்சபை. கீழ்ச்சபையின் பெயர் எக்ளீஸியா (Eclesia).

மேல்சபையின் அங்கத்தினர் எண்ணிக்கை 500. கிரேக்கத்தில் பத்து வகை மரபுக் குடியினர் இருந்தார்கள், ஒவ்வொரு மரபிலிருந்தும் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் 50 அங்கத்தினர்கள் குலுக்கல் முறையில் போலே அங்கத்தினர்களாத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்களின் பதவிக் காலம் ஒரு வருடம், எக்ளீஷியா விவாதிக்க வேண்டிய முக்கிய பிரச்னைகள் எவை என்று போலே வடிகட்டி முடிவுசெய்யும். இவை மட்டுமே எக்ளீஷியாவின் பரிசீலனைக்கு வரும். மேல்சபை நாட்டு விடுமுறை தவிர்த்த மீதி எல்லா நாள்களிலும் சந்திக்கும்.

எக்ளீஸியாவில்  இரண்டு வருட ராணுவ அனுபவம் பெற்ற வாக்குரிமை பெற்ற அனைவரும் உறுப்பினர் ஆகமுடியும். எக்ளீஸியா நாற்பது நாள்களுக்கு ஒரு முறை கூடும். எல்லோரும் பேசலாம். பிரச்னைகளை விவாதித்தபின் கை தூக்கல் மூலம் வாக்கு எடுக்கப்படும். சில சமயங்களில் ரகசிய வாக்கெடுப்பும் நடப்பதுண்டு.

எக்ளீஷியாவில் 40,000 அங்கத்தினர்கள் இருந்தார்கள். குறைந்தபட்சம் 6000 பேர் வந்தால்தான் கூடம் நடத்தலாம். கூட்டம் குறைவாக இருந்தால், 300 அடிமைகள் கைகளில் சிவப்பு நிறத்தில் முக்கிய நீளக் கயிற்றைச் சுழற்றியபடியே நகரின் வீதிகளை வலம் வருவார்கள். யார் மேலெல்லாம் கயிறு  பட்டதோ, அவர்கள் உடனே கூட்டத்துக்கு வரவேண்டும், அல்லது அபராதம் கட்டவேண்டும்.

எக்ளேஷியாவுக்கு ஏகப்பட்ட அதிகாரங்கள் இருந்தன. அண்டை நாடுகளோடு சண்டை அல்லது சமாதானத்துக்கான முயற்சிகள், வெளிநாட்டுக் கொள்கை, ஏற்றுமதி இறக்குமதி உறவுகள் ஏற்படுத்துதல், நாட்டின் வரவு செலவுக் கணக்கை நிர்வகித்தல், ராணுவ நிர்வாகம், மக்கள் நலத் திட்டங்கள் வகுத்தல், நிறைவேற்றல், மதம் தொடர்பான செயல்கள், குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகள் போன்றவை எக்ளேஷியாவின் முக்கியப் பொறுப்புகள். எக்ளேஷியா வருடத்துக்கு நாற்பது நாள்கள் கூடும். கூட்டம் திறந்த வெளி மைதானத்தில் நடக்கும்.  அதிகாலையில் பூசையோடு தொடங்கும், அடுத்து மிருக பலி. கூட்டத்தில் வரி பாக்கி வைத்திருப்பவர்கள், ஒழுக்கமற்றவர்கள், குற்றவாளிகள், பெற்றோரைப் புறக்கணித்தவர்கள், யுத்தங்களில் பங்கேற்காமல் நழுவியவர்கள் ஆகியோர் பேச அனுமதிக்கப்படமாட்டார்கள். பிறர் யார் வேண்டுமானாலும் பங்கேற்று தங்கள் கருத்துக்களைச் சொல்லலாம்.

நிர்வாகத்தில் ராணுவம் மிக முக்கியமானது. ஸ்ட்ராட்டகோய் (Strategoi) என்பது ராணுவத் தளபதி பதவி. ஒவ்வொரு மரபுக்கும் ஒருவராகப் பத்துத் தளபதிகள் நியமிக்கப்பட்டார்கள். தேர்தல்மூலம் பதவி பெற்ற இவர்களின் ஆட்சிக் காலம் ஒரு வருடம்.  ராணுவ நிர்வாகம், வீரர்கள் பயிற்சி, தளவாடங்கள் திட்டமிடுதல், வாங்குதல், ராணுவக் கணக்கு வழக்குகள், பிற நகர ராஜ்ஜியங்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்துதல் போன்றவை ஸ்டாரட்டகோய்களின் கடமைகள்.


ராணுவத்தில் பல வகையினர் இருந்தார்கள், இவர்களுள் காலாட்படை, குதிரைப்படை, கடற்படையினர் ஆகியோர் செல்வந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். வில்லாளிகள், ஈட்டி எறிபவர்கள், வாள் வீச்சாளிகள் ஆகியோர் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். போர் முனையில் முன்னணியில் எதிரிகளை எதிர் மோதியவர்கள் இந்த வறுமைக் குல வாரிசுகள்தான்!
நீதி பரிபாலனம் செம்மையாக நடந்தது. போலீஸ் வேலைகளுக்கு அடிமைகள் மட்டுமே அமர்த்தப்பட்டார்கள். வழக்காடு மன்றங்களுக்குக் குலுக்கல் முறையில் நீதிபதிகள்  தேர்ந்தெடுக்கப்பட்டார்கள், இவர்களின் பதவிக்காலம் ஒரு வருடம், யார் வேண்டுமானாலும், சாட்சிகள் இருந்தால், யார் மீதும் குற்றம் சாட்டி, நீதிபதிகளின் முன்னால் கொண்டுவரலாம். சில்லறை வழக்குகளை விசாரிக்க முப்பதி நீதிபதிகள் அடங்கிய நடமாடும் குழு இருந்தது. குற்றம் சாட்டப்பட்டவரே தனக்காக வாதாடலாம். இன்னொரு ஆச்சரியம், விசாரணை முடிந்தபின், குற்றவாளியே தனக்கு என்ன தண்டனை என்பதைத் தீர்மானிக்கலாம். இந்த மரபு நேர்மையோடு கடைப்பிடிக்கப்பட்டது மிக ஆச்சரியம்! அபராதம், வாக்குரிமை பறிக்கப்படுதல், சூடு போடுதல், கசையடி, சொத்துக்கள் பறிமுதல்போன்றவை சாதாரணமாக அளிக்கப்பட்ட தண்டனைகள். கொடூரமான  சில குற்றங்களுக்கு மரண தண்டனையும் வழங்கப்பட்டது.

ஒலிம்பிக் பந்தயங்கள்

கிரேக்க ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமைக்கு உச்சகட்ட உதாரணம் ஒலிம்பிக் போட்டிகள். நாட்டின் பல்வேறு நகர ராஜ்ஜியங்கள் தங்கள் வேறுபாடுகளை மறந்து உணர்வால் இணையப் பாலம் வகுத்ததும் ஒலிம்பிக் பந்தயங்கள்தாம். ஒலிம்பிக் பந்தயங்களின் ஆரம்பம் இதிகாசக் கதை. கிரேக்கர்களின் முழு முதற் கடவுளான ஜீயஸ் சின்னக் குழந்தையாக இருந்தார். அவர் அருகே ஹெராக்கிள்ஸ்   என்னும் குட்டி தேவதையும் அவருடைய ஐந்து தம்பிகளும் இருந்தார்கள்.  ஜீயஸ் அழுதார். வேடிக்கை காட்ட என்ன செய்யலாம் என்று ஹெராக்கிள்ஸ் யோசித்தார். தம்பிகளுக்குள் ஓட்டப் பந்தயம் நடத்தினார். ஜெயித்தவனுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்? அருகில்  ஆலிவ்  மரம் இருந்தது. அதன் கிளையை வளைத்து வெற்றி மாலையாகச் சூட்டினார்.  ஜீயஸுக்கு வழிபாடாக, விழாவாக ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்டன.

ஒலிம்பிக் பந்தயங்கள் கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்துக்கும் முன் தோன்றி மூத்தவை என்று இதிகாசம்சொன்னாலும், கி.மு. 776 – இல் முதல் ஒலிம்பிக் நடத்தப்பட்டது என்று ஆதாரங்கள் கூறுகின்றன. ஜீயஸுக்கு வணக்கம் செலுத்தும் போட்டி அவர் தொடர்பு கொண்ட இடத்தில் நடப்பதுதானே முறை? அவர் பேரன் பெலப்ஸ் பெயரில் அமைந்த பெலொப்பனீஸ் பகுதியில் இருக்கும் ஒலிம்பியா நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடத்த முடிவெடுத்தார்கள். (ஏன், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை? அந்த ஜீயஸைத்தான் கேட்கவேண்டும்)

ஹெராக்கிள்ஸ் நினைவாக, ஓட்டப் பந்தயம்தான் முக்கிய இடத்தைப்  பிடித்துக்கொண்டது. மாரத்தான்  என்னும் நெடுந்தூர ஓட்டம் கி.பி. 1896 – இல் சேர்க்கப்பட்டது. இதற்குச் சுவாரஸ்யமான வரலாற்றுப் பின்னணி உண்டு. கி.மு. 700 காலகட்டத்தில் அண்டை நாட்டுப் பாரசீகர்கள் ஏதென்ஸ்மீது படையெடுத்து வந்தார்கள். எல்லையில் எதிரி. ஏதென்ஸ் நிலைமையை எடை போட்டார்கள். அவர்களிடம் போதிய படைகளும், தளவாடங்களும் இல்லை. 140 மைல் தொலைவில்  இருந்த  நகரமான ஸ்பார்ட்டாவின்  உதவி அவசரமாகத் தேவைப்பட்டது. மின்னலெனச் செய்தி அனுப்பவேண்டும். குதிரை வீரனை அனுப்பலாம். அது ஒரு வேளை பாரசீகக ஒற்றர்களுக்குத் தெரிந்துவிட்டால், காலம் தாழ்த்தாமல் தாக்குதல் தொடங்கிவிடுவார்கள். என்ன செய்யலாம் என்று யோசித்தபோது ஃபெய்டிப்பிடிஸ் (Pheidippides)  என்னும் போர்வீரர் உதவிக்கு வந்தார். மனதில் செய்தி, கால்களில் பலம், நெஞ்சில் உரம் – மூன்றையும் தாங்கிக்கொண்டு ஓடத் தொடங்கினார். ஸ்பார்ட்டா அடைந்தபிறகுதான் அவர் கால்கள் நின்றன. ஸ்பார்ட்டா அரசர் தன் ஆதரவை அளித்தார். ஒரே ஒரு நிபந்தனையோடு – அமாவாசை முடிந்தவுடன் ஸ்பார்ட்டா படைகள் புறப்படும். நல்ல நாளில் கிளம்பினால்தான் வெற்றி நிச்சயம் என்று குறிகாரர் சொன்னதுதான் காரணம்.
ஃபெய்டிப்பிடிஸ் ஓட்டம் மறுபடி ஆரம்பம். ஏதென்ஸ் போய்ச் சேருவதுவரை நிற்காத நெடும் ஓட்டம். உதவி வரப்போகிறது என்னும் உத்வேகம் எதென்ஸ் வீரர்களுக்கு எக்கச்சக்க துணிச்சல் கொடுத்தது, பலம் கொடுத்தது. ஸ்பார்ட்ட உதவி வரும் முன்னரே, பாரசீகப் படையினரை ஓட ஓட விரட்டினார்கள்.

வெற்றி! வெற்றி! வெற்றி! தலைநகர் ஏதென்ஸுக்கு இந்தச் சந்தோஷச் சமாச்சாரத்தை உடனேயே சொல்லவேண்டுமே? தகுதியான ஆள் ஃபெய்டிப்பிடிஸ்தான். அவரைத் தளபதி அழைத்தார். “நம் நாட்டு மக்களிடம் இந்த மகிழ்ச்சியான சேதியைச் சொல்லுங்கள்.” வேகப் புயல் ஓடினார். ஏதென்ஸ் நகரின் எக்ளீஷியா கூடும் மன்றத்துக்குப் போனார். “கொண்டாடுங்கள். நாம் ஜெயித்துவிட்டோம். இவைதாம் ஃபெய்டிப்பிடிஸின் இறுதி வார்த்தைகள். ஆமாம், தாய்நாட்டுக் கடமையை முடித்த அவர் சடலமாகச் சாய்ந்தார். மாரத்தான் போட்டி இந்த வீரத் திருமகனுக்கு கிரேக்க சகோதரர்களும், உலகமும் அடிக்கும் நன்றி சல்யூட். ஓட்டப் பந்தயத்தில் தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகளில் தாண்டுதல், மல்யுத்தம், குத்துச் சண்டை, ஈட்டி எறிதல் போன்ற பந்தயங்கள் அரங்கேறத் தொடங்கின.

ஒலிம்பிக் எல்லா கிரேக்க நகர ராஜ்ஜியங்களும் உற்சாகத்தோடு பங்கேற்கும் விழா. இரு ராஜ்ஜியங்களுக்குமிடையே பகைமை இருந்தாலும், ஏன், போரே நடந்துகொண்டிருந்தாலும், எல்லா மோதல்களையும் நிறுத்திவிட்டு, மறந்துவிட்டு ஒலிம்பிக்கில் பங்கேற்பார்கள்.கிரேக்க நாடு முழுக்க விழாக்கோலம் பூணும். மக்கள் வெள்ளம் அலை அலையாகத் திரண்டு வரும். இது வெறும் விளையாட்டுப் போட்டியல்ல, எந்த ராஜ்ஜியம் நம்பர் 1 என்று நிரூபிக்கும் உல்லாசமான திறமைப் போர், தேசியத் திருவிழா!
ஒலிம்பிக் ஐந்து நாள்கள் நடைபெறும். முதல் நாளில் தொடக்க விழா.  அன்று ஒவ்வொரு ராஜ்ஜிய வீரர்களும் வண்ண வண்ண உடைகள் அணிந்து மைதானத்தில் தேர்களில் ஊர்வலமாக வருவார்கள். அடுத்த நிகழ்ச்சி ஜீயஸுக்குப் பூஜை. ஏராளமான பலிகள். பிறகு ஆட்டம் தொடங்கும். மூன்றாம் நாள், ஜீயஸுக்கு 100 மாடுகளைப் பலி கொடுப்பார்கள். குத்துச் சண்டைகள், மல் யுத்தம், குதிரைப் பந்தயங்கள் ஆகிய போட்டிகள் தொடரும். கடைசி நாள், மயிர்க் கூச்செறிய வைக்கும் ரதப் போட்டி.

ஐந்தாம் நாள் போட்டிகள் எல்லாம் முடிந்தபின் பரிசளிப்பு விழா. வெற்றி பெற்றவரின் பெயர், அவருடைய குடும்ப விவரம், ஆகியவற்றை அறிவிப்பாளர் உரக்கப் படிப்பார். மக்கள் கரவொலி மைதானம் முழுக்க எதிரொலிக்கும், ஆலிவ் மர இலைகளாலான மாலகள்தாம் பரிசுகள். ஆமாம், விளையாட்டு வீரர்களை உந்தித் தள்ளியது பொன்னும், பொருளுமல்ல. ஆலிவ் மாலைகள்தாம்.
ஒலிம்பிக்கில் இரண்டு சோகங்கள் நிகழ்ந்தன.
பண்டைய கிரேக்கத்தில் ஒலிம்பிக் போட்டிகளைப் பார்க்கப் பெண்களுக்கு அனுமதி கிடையாது.

ரோமர்கள் கிரேக்கத்தைத் தங்கள் ஆட்சியின்கீழ்க் கொண்டுவந்தபோது, கி.பி. 394 – இல் ஒலிம்பிக் போட்டிகளை நிறுத்திவிட்டார்கள். மறுபடியும் ஒலிம்பிக் தொடங்கியது கி.பி. 1896ல்தான்.

No comments:

Post a Comment