Friday, August 15, 2014

முப்பதாண்டு யுத்தம்(1618-1648)

ஐரோப்பிய வரலாற்றிலே பல புரட்சிகள், போர்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக சமய அடிப்படையில் சிலுவைப்போர், நெதர்லாந்துப்புரட்சி அதே போல் முப்பதாண்டு யுத்தம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இதில் முப்பதாண்டு யுத்தமானது தனிச்சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இப்போரானது சமயப் போரின் இறுதிப் போராகவும், அரசியல் போரின் ஆரம்பப் போராகவும் காணப்படுகிறது. இது கத்தோலிக்கத்தவருக்கும், புரட்டஸ்தாந்தினருக்கும் இடையிலான போராக கொள்ளப்படுகிறது.

சமயப் போராக உருவெடுத்து அரசியல் போராக மாற்றமடைந்த இந்த யுத்தமானது கி.பி1618- கி.பி1648 வரையான முப்பது ஆண்டுகள் நடைபெற்ற காரணத்தினால் முப்பதாண்டு யுத்தம் எனக் கொள்ளப்படுகிறது. கத்தோலிக்க மற்றும் புரட்டஸ்தாந்து சமயச் சார்பில் கூலிப் படையினரே இரு புறமும் பங்குபற்றினர். போரில் ஈடுபட்டவரை விட சாதாரண மக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். பேரரசிற்கும் ஜேர்மனிக்குமிடையிலான போராக இது காணப்படுகிறது.

முப்பதாண்டு யுத்தமானது உரோமப் பேரரசின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டிருப்பினும் பின்னர் படிப்படியாக ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்கும் பரவிக்கொள்கிறது. போரின் போது கத்தோலிக்க சமயச் சார்பாக ஸ்பெயினும் ஆஸ்திரியாவும் பங்கு கொண்டன. கி.பி 1635 இல் ஆதிக்கப் போராக மாறி பின்னர் அரசியல் போராக மாறிக்கொள்கிறது. இறுதியில் ஹப்ஸ்பேர்க் குடும்பத்திற்கும், பூபன் குடும்பத்திற்குமிடையிலான போராக மாறியதென்பது குறிப்பிடத்தக்கது.

போர் ஒன்று ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளும், துணைக் காரணிகளும், உடனடிக் காரணிகளும் பங்கு வகிப்பதனை பல போர்களின் வாயிலாக நாம் அறிந்ததே. இந்த போரிலும் பல காரணிகள் ஏதுவாய் அமைந்தன. அதனை நாம் நோக்குவது சாலச் சிறந்தது. இப்போர் ஏற்பட கத்தோலிக்க சமயத்தவரும், பேரரசும் சேர்ந்து புரட்டஸ்தாந்து சமய மக்களை கொடுமைப்படுத்தியமையே காரணம் எனலாம். அத்துடன் மேலும் பல காரணிகளும் முப்பதாண்டு யுத்தத்திற்கு வழிகோலின.

புனித ரோமானியப் பேரரசர் ஐந்தாம் சார்ள்ஸின் ஆட்சிக் காலப் பகுதியில் ஜேர்மனிய சிற்றரசுகள் தம் பகுதியினருக்கு சமயச் சுதந்திரம் வேண்டும் எனக் கோரி கிளர்ச்சி செய்த போது கிளர்ச்சியை தவிர்க்க ஐந்தாம் சார்ள்ஸ் கி.பி 1555இல் சமாதான உடன்படிக்கையினை செய்தான். இதனால் ஜேர்மனியின் 300 இற்கு மேற்பட்ட சிற்றரசுகளுக்கு சமய விடயங்களில் சுதந்திரம் வழங்கப்பட்டது. ஆனால் கல்வினிய சமயத்தவர்க்கு சலுகைகள் எதனையும் வழங்கவில்லை. இதற்குக் காரணம் இவ்வுடன்படிக்கை ஏற்பட்ட காலத்தில் கல்வினிச சமயமானது பரவியிருக்கவில்லை. அத்துடன் கல்வினிச சமயத்திற்கு மாறியவர்கள் சட்டத்தின் பாதுகாவலை பெறத்தவறியதுடன், கத்தோலிக்க சமயத்தவருடன் பகைமையையும் கொண்டனர். இவ்வாறு ஏற்பட்டுக்கொண்ட சமயப் போட்டிகள் பிற்காலத்தில் போர் ஒன்று ஏற்பட வழிவகுத்தது.

கத்தோலிக்கர்கள் தங்களின் வழியில் புரட்டஸ்தாந்தினரை ஈடுபடுத்த முற்பட்ட போதும் அவர்கள் இதற்கு இசைந்து கொடுக்காமல் கி.பி 1552இல் கொண்டுவந்த நுஉஉடநளயைளவiஉயட சுநளநசஎயவழைn விதியின் முறைப்படி கத்தோலிக்கரின் சொத்துகளைப் பறிமுதல் செய்யக் கூடாது என்று கூறப்பட்டதை மீறி புரட்டஸ்தாந்தர்கள் கத்தோலிக்கரின் குருமடங்கள், சமயத்தலைவர்களின் அலுவலகங்கள், கட்டிடங்கள் முதலானவற்றை தமது உலகியல் தேவைகளுக்கு பயன்படுத்தத் தொடங்கினர். பெரிய நிலப்பரப்பு, கட்டிடங்கள் நடைமுறையில் புரட்டஸ்தாந்தினரின் உடமைகள் ஆகின. இந்த நடவடிக்கையானது சட்டத்திற்கெதிரானதென கத்தோலிக்கள் கூறியமை போட்டியை அதிகரித்தது.

ஐந்தாம் சார்ள்ஸின் பின்னர் வந்த முதலாம் பேடினண்ட், இரண்டாம் மக்ஸிமில்லியன் என்போர் மிதவாதிகளாக காணப்பட்டனர். இவர்கள் ஓரளவு சமயப் பொறையைக் கடைப்பிடித்தனர். இதனால் புரட்டஸ்தாந்து சமயமானது வெகு விரைவாக மக்களிடையே பெரு வளர்ச்சி பெற்று கத்தோலிக்க சமயத்திற்கு அச்சுறுத்தல் விடுத்தது. மேலும் இவர்களின் காலப்படுதியில் போர்கள் தவிர்க்கப்பட்டமையால் புரட்டஸ்தாந்தர்கள் தீவிரமாக செயற்பட இடமளிக்கப்பட்டது. குறிப்பாக பதினாறாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்திலும், பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலுமே கல்வினிசம் துரிதமாக வளர்ச்சி பெற்றது. இதனைத் தமக்கு பாதகமாக கருதிய கத்தோலிக்க மக்கள் புரட்டஸ்தாந்து மக்களுடன் முரண்படத் தொடங்கினர். 
ஜேர்மனியில் ஏற்பட்டுக் கொண்ட எதிர் சீர்திருத்த இயக்கமானது படிப்படையாக வலுவடைந்தது. இரண்டாம் ருடொல்ப்பின் காலம் வரை(1576-1612) இவ்வியக்கம் ஜேர்மனியில் தழைக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பவேரியா, வியன்னா ஆகிய நாடுகளின் பேரவைகளில் மேலாட்சி  உரிமை பெற்று ஆளும் இனத்தவர்கள் ஹப்ஸ்பேர்க் இனத்தவரை விட கத்தோலிக்க சமயத்தில் அதிக ஆர்வமும், அக்கறையும் கொண்டிருந்தனர். இவர்களுடன் கத்தோலிக்க தொண்டர்களின் செயற்பாடுகளும் போரிற்கு காரணமாகியது. யேசு சபையின் செயற்பாடுகள், டிரண்ட் சபையின் செயற்பாடுகள் என்பனவற்றால் ஜேர்மனியில் உள்ள பல கத்தோலிக்க நாடுகளில் உற்சாகம், புத்துணர்வு, சமயப் பற்று என்பன ஏற்பட காரணமாகின. ஜெஸ்யூட் குருமார்கள் பாடசாலைகளையும், வைத்திய சாலைகளையும் நிறுவி சேவை செய்தனர். மேலும் பவேரிய மன்னன் மக்ஸிமில்லியனின் உதவியுடன் கத்தோலிக்க சமயமானது அவரது நாட்டில் வளர்ச்சி பெற்றது. இவனால் கத்தோலிக்க சமயத்தினைச் சேராதவர்கள் நாட்டினை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதனால் வெறுப்புற்ற புரட்டஸ்தாந்தினர் போரிற்குத் தயாராகினர்.

டன்யூப் பகுதியில் உரோமப் பேரரசைச் சேர்ந்த ஒரு சுதந்திர நாடாக டொனோளவேர்த் காணப்பட்டது. அது ஜேர்மனிய சட்ட சபையில் அங்கத்துவமும் வகித்தது. இந்த சுதந்திர நாட்டில் கத்தோலிக்க சமயத்துடன் புரட்டஸ்தாந்து சமயமும் காணப்பட்டது. கத்தோலிக்க சமயக் கொள்கை விடாப்பிடியர்கள் கி.பி1606 இல் கத்தோலிக்க சமய ஊர்வலம் ஒன்றை இந்த நாட்டில் நடத்தினர். ஈற்றில் ஆர்ப்பாட்டமானது கலவரமாக முடிந்தது. அதாவது இவ்வூர்வலத்தை புரட்டஸ்தாந்தினர் கலைத்தனர். இதனால் சமயங்களிடையிலான முறுகல் நிலை வீரியமடைந்தது. கோபமடைந்த கத்தோலிக்க மக்கள் மன்னன் ருடால்பிடம் முறையிட்டனர். ருடால்ப் அந்த நகரினை பேரரசினுள் உட்படுத்தினர். இதனை சாதகமாகக் கொண்டு பவேரிய மன்னன் மக்ஸிமில்லியன் அதனை வலுக்கட்டாயமாக கத்தோலிக்க நாடாக மாற்றினான். இச் செயலானது புரட்டஸ்தாந்து மக்களிடையில் வெறுப்பை அதிகரித்தது.

கி.பி1608 இல் ஒரு புரட்டஸ்தாந்து சங்கமொன்றினை புரட்டஸ்தாந்தினர் ஏற்படித்தினர். டொனள்வேர்த்தில் ஏற்பட்ட அவமானம் மீண்டும் ஏற்படக் கூடாது என்பதே இதற்கான காரணமாகும். இவ்வமைப்பு 'இவான் ஜெலிக்கல் யூனியன்' (கிறிஸ்தவ செய்தி பரப்பும் சங்கம்) என அழைக்கப்பட்டது. இதில் கல்வீனிய சமயத்தினைத் தழுவிய பல இராச்சியங்கள் இணைந்தமை குறிப்பிடத்தக்கது. இதைக் கண்ட கத்தோலிக்கர்கள் தாங்களும் சங்கமொன்றினை அமைக்க தீர்மானித்தனர். கி.பி 1609இல் மக்ஸிமில்லியன் தலைமையில் 'கத்தோலிக்க கூட்டுறவு' என்ற சங்கத்தை நிறுவினர். இதன் நடவடிக்கைகள் புரட்டஸ்தாந்து சமயத்தை நசுக்கும் வகையில் அமைந்தன. இச்செயற்பாடு சமயங்களிடையில் வேற்றுமையினை மேலும் அதிகரித்தது. 
அரசியல் காரணங்களும் போர் ஏற்படக் காரணமாகின. ஐரோப்பிய போரரசனாக காணப்பட்ட இரண்டாம் ருடால்ப் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தமையால் அவனின் சகோதரன் அரசாட்சி செய்தான். இந்த செயற்பாடானது அரசியலில் ஸ்திரமற்ற தன்மையினை தோற்றுவித்தது. மேலும் இக்காலப் பகுதியில் ஐரோப்பாவில் ஆட்சி செய்த முதலாம் பேடினண்ட், மத்தியஸ், இரண்டாம் மக்ஸிமில்லியன் , ருடால்ப் போன்றோர் திறமையற்ற அரசர்களாக விளங்கியமை யுத்தத்திற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியது. இவர்களது செயற்பாட்டால் அரசியல், சமூக, பொருளாதார விடயங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதன் விளைவாக உள்நாட்டில் போர், அயல் நாட்டுத் தலையீடுகள், ஆதிக்கங்கள் முதலியன ஏற்படக் காரணமாகின.


சமயச் சீர்திருத்தம் எற்பட்டமையால் ஜேர்மனிய இளவரசர்கள் புனித ரோமப் பேரரசின் கட்டளைகளை மதிக்கவில்லை. அலட்சியப்போக்குடன் நடந்துகொண்டமையானது ஜேர்மனிய ஒற்றுமை இன்மைக்கு காரணமானது. இதனால் ஜேர்மன் உள்நாட்டு யுத்தத்திற்கு தயாரானது. இதற்கு ஒக்ஸ்பேர்க் உடன்படிக்கையே முக்கிய காரணமாய் அமைந்தது என்பதில் ஐயமில்லை. அத்துடன் மாட்டின் லூதர் மேற்கொண்ட கிளர்ச்சியின் நூற்றாண்டு விழாவை புரட்டஸ்தாந்து மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடியமை கத்தோலிக்கரிடத்தில் பொறாமையை தூண்டியது.
போரிற்கான உடனடிக் காரணமாக பிராக்கில் ஏற்பட்ட புரட்சியைக் கூறலாம். பேரரசின் முடியையும் ஆஸ்திரிய நிலப்பகுதியையும் தமது உறவினனான இரண்டாம் பேடினண்ட் பெறவேண்டும் என வாரிசு அற்ற மத்தியஸ் கருதினான். இதனை பொகிமிய மக்கள் எதிர்த்தனர். சக்கரவர்த்தி பொகிமியாவில் தங்கியிருந்தான். தலைநகர் பிரேக்கின் நிருவாக நடவடிக்கைகளின் நிமிர்த்தம் மாகாண ஆட்சியாளர்கள் சிலரை பிரதிநிதியாக தெரிவு செய்தான். கோபமடைந்த மக்கள் அவர்களின் காவலாட்களை தாக்கிவிட்டு உள்நுழைந்து ஒரு காரியதரிசி உட்பட இருவரை பலகனி (ஜன்னல்) வழியாக கீழே காணப்பட்ட அகழியினுள் தூக்கி எறிந்தனர். பின்னர் புரட்சி அரசாங்கமொன்றை அமைத்தனர். இந்த செயற்பாடானது 'பிரேக்'; நாட்டில் ஜன்னல் வழியாக தூக்கி எறிதல்' என்ற புகழ் பெற்ற நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. இதனால் கோபமுற்ற கத்தோலிக்கர்கள் போரினைத் தொடங்கினர். கி.பி1617இல் இரண்டாம் பேட்டினண்ட் அரசனானான். இவனது சமய வெறியால் புரட்டஸ்தாந்தினர் நசுக்கப்பட்டனர். தேர்தல் நடைபெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்பு இவன் நீக்கப்பட்டு ஐந்தாம் பிரட்ரிக் கி.பி1619 நவம்பரில் முடி சூடப்பட்டார். இதை எதிர்த்து பேடினண்ட் கி.பி1620 இல் போரில் இறங்கினார்.

பொகிமியாவில் தொடங்கிய முப்பதாண்டு யுத்தமானது ஏறத்தாழ மூன்று இலட்சம் மக்களைப் பலி கொடுத்தது. இது தனியான ஒரு யுத்தமாக அன்றி 5 கட்டங்களாக இடம்பெற்றது. இவ்வாறு இடம்பெற்ற போர்கள் ஒன்றுடனொன்று தொடர்புபட்டவையாக அமைந்துள்ளன. பொகிமிய காலப்பகுதி(1618-1620), பலட்டீன் காலப்பகுதி (1621-1623), டென்மார்க் காலப்பகுதி (1625-1629), சுவீடன் காலப்பகுதி (1630-1635) பிரான்ஸ் காலப்பகுதி (1635-1648). இக்கால கட்டங்களை ஆராய்வதன் மூலம் போர் பற்றியும், அதன் போக்கு பற்றியும் அறிய முடியும்.
பொகிமியர்கள் தமது புரட்சி அரசாங்கத்தினை நிறுவ ஜேர்மனிய புரட்டஸ்தாந்தினரிடம் உதவி கோரினர். ஆனால் பெரிய உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. பலட்டீன் பகுதியை கல்வின் சமயவாதியான ஐந்தாம் பிரட்ரிக் ஆட்சி செய்தார். இவருக்கு முன்னர் 1617 இல் கத்தோலிக்கரான மத்தியஸ் இப்பகுதியை ஆட்சி செய்திருந்தார். அவரின் இறப்பால் அரசாட்சியை தற்காலிகமாக பேடினண்ட் பெற்றிருப்பினும் ஐந்தாம் பிரட்ரிக் (1629 நவம்பர்) ஆட்சிக்கு தெரிவு செய்யப்பட்டதும் கோபங்கொண்ட பேடினண்ட் பொகிமியா மீது போர் தொடுத்தான். 
பேடினண்ட் போரினை தொடுப்பதற்காக கத்தோலிக்க சங்க ஆதரவினை நாடினான். இச்சங்கத்தின் தலைவனாக பவேரியா நாட்டுக் கோமகன் மக்ஸிமில்லியன் காணப்பட்டான். இவனது உதவியுடன் பொகிமியாவினுள் கத்தோலிக்க படைகள் 1620இல் புகுந்து 'வெள்ளைக் குன்று' என்ற இடத்தில் போரிட்டு சர்வ நாசம் செய்தன. ஐந்தாம் பிரட்ரிக் போரிலே தோற்கடிக்கப்பட்டார். கத்தோலிக்கப் படைகள் கொள்ளை, அட்டூளியம் செய்தன. பலர் நாட்டை விட்டு விரட்டப்பட்டனர். பிரட்ரிக் ஒல்லாந்துக்கு தப்பியோடினான். போடினண்ட் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டு கத்தோலிக்க சமயத்தினை நாட்டின் ஏகபோக சமயமாக்கினான். 
பொகிமிய போரில் உதவிய மக்ஸிமில்லியனையும் ஸ்பானிய நாட்டவரையும் இணைத்து பலட்டீன் அரசுரிமையை ஏற்படுத்திக் கொள்ள பேடினண்ட் அதிகாரம் வழங்கினான். ஆனால் பலட்டீன் ஒரு புரட்டஸ்தாந்து நாடாக காணப்பட்டது. இவனது இச்செயலானது பலட்டீன் மக்களை சினத்திற்கு உள்ளாக்கியது. மக்ஸிமில்லியனும், பேடினண்ட்டும் புரட்டஸ்தாந்து மக்களிடையில் நிலவிய உட்பிரிவுகளை நன்கு அறிந்திருந்தனர். இதனால் மக்களை தங்களின் வழிப்படுத்த முற்பட்டனர். மக்கள் தங்களிடையிலே பிளவுகளைக் கொண்டிருந்தமையால் எல்லோரும் பின்வாங்கிவிட்டனர். கத்தோலிக்கப்படைகள் தாக்குதலினை மேற்கொண்டு பலட்டீனின் சகல பகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டன. தனக்கு மிகப்பெரும் உதவியை நல்கிய மக்ஸிமில்லியனுக்கே பலட்டீனேற்றை பேடினண்ட் வழங்கினான். புரட்டஸ்தாந்து சமயப் போதகர்கள் நாட்டினை விட்டு விரட்டப்பட்டனர். மேலும் மக்கள் மீது கத்தோலிக்க கோட்பாடுகள் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டன.

புரட்டஸ்தாந்தினர் பலட்டீன் உட்பட பல பகுதிகளிலும் கொடுமைப்படுத்தப்பட்டதைக் கண்ட புரட்டஸ்தாந்து இளவரசர்கள் விழித்துக்கொண்டனர். இங்கிலாந்து, நெதர்லாந்து, சுவீடன், டென்மார்க் முதலிய ஐரோப்பிய புரட்டஸ்தாந்து நாடுகளை இணைத்து ஒரு நட்புறவை ஏற்படுத்த விளைந்தனர். தலமைப் பொறுப்பு இங்கிலாந்திடம் வந்தது. இங்கிலாந்து மன்னன் முதலாம் ஜேம்ஸ் போரினைத் தவிர்க்கும் வகையில் ஒரு திட்டம் தீட்டினான். ஸ்பானியாவுடன் கூட்டுறவை ஏற்படுத்தும் வகையில் தனது மகன் சாள்ஸை ஸ்பானிய இளவரசிக்கு திருமணம் செய்ய முற்பட்டான். அது கனவாகவே போய்விட்டது. இதனால் சீற்றமடைந்த ஜேம்ஸ் ஒல்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளை சேர்த்து கத்தோலிக்கருக்கு எதிராக போரிட முற்படான். போரிற்கான நேரடி உதவிகளை நாடுகள் வழங்கவில்லை. ஆனால் டென்மார்க் அரசன் சில உள்நோக்குடன் போரிற்கு உதவுவதற்கு முன்வந்தான். இதனால் போரிற்குரிய பணச் செலவுகளை வழங்குவதாக டென்மார்க் மன்னனிற்கு ஜேம்ஸ் கூறினான். ஆனால் துரதிஸ்டவசமாக இங்கிலாந்துப் பாரளுமன்றுடன் ஏற்பட்ட பிரச்சனையால் பண உதவிகளை வழங்க ஜேம்ஸால் முடியாமல் போனது. இருப்பினும் ஹப்ஸ்பேர்குகளின் செல்வாக்கினை ஒழிக்கவும், வடகடல் துறைமுக செல்வாகினைப் பரப்பவும் டென்மார்க் மன்னனான கிறிஸ்டீன் முன்வந்தான்.
டென்மார்க் மன்னன் புரட்டஸ்தாந்தினரின் வீரத்தலைவனாக போரில் குதித்தான். போர்களமானது தெற்கிலிருந்து வட ஜேர்மனிக்கு மாற்றப்பட்டது. சமகாலத்தில் தளபதியாக விளங்கிய டிலி என்பவர் கத்தோலிக்கர் சார்பில் போரிற்கு தலமை வகித்தார். போரில் சிறிது காலம் புரட்டஸ்தாந்தினரிற்கே வெற்றிகள் கிடைத்தன. சிறிது காலத்தில் வாலன்ஸ்டைன் தலமையில் கத்தோலிக்கரின் இரண்டாம் சேனை தோன்றியது. தளபதி வாலன்ஸ்டைன் படைச் செலவினை குறைக்கும் நோக்கில் படை தங்கிச் செல்லும் பகுதிகளிலேயே செலவு பொறுப்பேற்கப்பட வேண்டுமென கூறினான். அத்துடன் அனுமதியின்றி சூரையாடலையும் மேற்கொண்டான். இச்செயலினை புரட்டஸ்தாந்து படைகளும் செய்தன. இதனால் ஜேர்மனியில் மிகக் கோரமான முறையில் கொள்ளைகள் இடம்பெற்றன.
கி.பி 1626இல் தளபதி வாலன்ஸ்டைனிற்கும் மற்றும் கிறிஸ்டியனின் படைத்தலைவனான மன்ஸ் பெல்டு என்பவனுக்கும் இடையில் டின்சோயு பாலத்தில் நடைபெற்ற போரில் டின்சோயு தோற்கடிக்கப்பட்டான். பின்னர் கிறிஸ்டியனையும் லட்டர் இடத்தில் வாலன்ஸ்டைன் வெற்றி கொண்டான். ஈற்றில் கிறிஸ்டியன் தேனியத் தீவிற்கு சென்று சரணடைந்தான். கி.பி 1629 இல் சக்கரவர்த்தி கிறிஸ்டியனுடன் 'லூபெக்' என்ற ஒப்பந்தத்தினை செய்தான். இதன் பிரகாரம் ஜேர்மனிய புரட்டஸ்தாந்தினை விட்டு கிறிஸ்டியன் வெளியேற வேண்டும் எனக் கூறினான்.

ஜேர்மனியின் நிலையைக் கொண்டு பார்க்கும் போது கத்தோலிக்கரின் வெற்றி நிறைவாக்கப்பட்டதனைக் காணலாம். கி.பி 1629இல் சக்கரவர்த்தி பேடினண்ட் மீட்டளிப்பு ஆணையை வெளியிட்டான். மீட்டளிப்பு கட்டளைச் சட்டமானது கத்தோலிக்க சமய எழுச்சியின் உச்ச நிலையை காட்டுகிறது. இச்சட்ட பிரகாரம் 1552 இல் செய்யப்பட்ட சமாதான ஒப்பந்தம் முதல் தமது உடமையாக புரட்டஸ்தாந்தினர் கைப்பற்றிய கத்தோலிக்க சமய கட்டிடங்கள், தேவாலயங்கள், அலுவலகங்கள் போன்றன பறிமுதல் செய்யப்பட்டன.  
வெற்றியைத் தேடித்தந்த வாலன்ஸ்டைனின் கொடூர நடவடிக்கைகளைக் கண்ணுற்ற கத்தோலிக்க இளவரசர்கள் அவனுக்கு எதிராக ரடிஸ்பன் என்ற இடத்தில் 1630இல் ஒன்று கூடினர். 'இரை தேடிக் கொள்ளையடிக்கும் ஓநாய்' என இவனை வர்ணித்தனர். இவனை பதவி விலக்க வேண்டும் என எல்லோரும் விரும்பினர். அதன்படி வாலன்ஸ்டைன் சக்கரவர்த்தியால் பதவி விலக்கப்பட்டான்.

வாலன்ஸ்டைனின் திறமையினைக் கண்ணுற்ற சுவீடன் நாட்டு மன்னன் கஸ்டவஸ் தனது நாட்டினை பாதுகாப்பதுடன் ஜேர்மனிய புரட்டஸ்தாந்து அரசர்களுடனும் நட்புக் கொள்ள முயற்சித்தான். இத்தருணத்தில் 1624 இல் பிரான்ஸிடமிருந்து உதவி கிடைத்தது. கி.பி1624 இல் பிரான்ஸிய அரசாங்கம் ரிச்சலியு கையில் வந்தது. பின்னர் ரிச்சலியு மற்றும் கஸ்டவஸ் இடையே 1631இல் பார்வால் டீ என்ற ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆண்டு தோறும் பெருந்தொகைப் பணத்தினை சுவீடன் மன்னனிற்கு வழங்க வேண்டும் என்பதே இவ்வொப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட விடயமாகும்.
வாலன்ஸ்டைன் தளபதி பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் டிலி எல்ப் என்பவன் கத்தோலிக்க படைத் தளபதியாக நியமிக்கப்பட்டான். பின்னர் 1631இல் சுவீடன் படைக்கும் டிலியின் படைக்குமிடையிலான சமரில் டிலி எல்பின் படை படுதோல்வியைச் சந்தித்தது. டிலியின் படை முற்றாக அழிக்கப்பட்டது. கி.பி1632 இல்  மீண்டும் கஸ்டவஸ் போராட்டத்தில் இறங்கினான். பவேரியாவை நோக்கி கஸ்டவஸ் முன்னேறிச் சென்றான். போரின் முடிவில் பவேரியா கஸ்டவஸால் கைப்பற்றப்பட்டதுடன் டிலியும் மரணமடைந்தான்.

கஸ்டவஸ் வியன்னாவையும் கைப்பற்ற எண்ணினான். இதனால் நெருக்குதலிற்கு உள்ளான பேடினண்ட் வாலன்ஸ்டைனினை மீண்டும் படைத்தளபதியாக்க முடிவு செய்தான். வாலன்ஸ்டைன் சில நிபந்தனைகளை மன்னனுக்கு வித்திதான். அதனை ஏற்றுக்கொள்வதாக மன்னன் கூற தளபதி பதவியை ஏற்று போரிட வாலன்ஸ்டைன் முடிவெடுத்தான். கி.பி 1632 இல் லுட்சன் என்ற இடத்தில் கஸ்டவஸ் மற்றும் வாலன்ஸ்டைன் என்போரிடையிலான போரில் சுவீடன் படைகள் வென்ற போதும் துரதிஸ்டவசமாக கஸ்டவஸ் இறந்துவிட்டார். பின்னர் கத்தோலிக்கர் மற்றும் புரட்டஸ்தாந்தினர் இடையே சமாதானத்தினை ஏற்படுத்த வாலன்ஸ்டைன் முடிவு செய்தார். இதனை மன்னனிடம் கூறினான். மன்னன் இதனை நிராகரித்துவிட்டான். வேறு வழியின்றி வாலன்ஸ்டைன் புரட்டஸ்தாந்திடருடன் ஒரு இரகசிய உடன்படிக்கை செய்தான். இதை அறிந்த அரசன் அவனை கி.பி 1634இல் கொலை செய்தான். கஸ்டவஸின் இறப்பின் பின்னர்  நோட்லின்கனில் வாழ்ந்த கத்தோலிக்க சமயத்தவரால் 1634இல் சுவீடன் தேசத்தவர்கள் தோற்கடிக்கப்பட்டு தெற்கு ஜேர்மனை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. பின்னர் பிரேக் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. 
இதுவரை காலமும் இந்த போரானது வெறுமனே சமயப் போராக நடைபெற்றது. ஆனால் பிரான்ஸின் தலையீட்டினால் போரானது அரசியல் போராக மாற்றமடைந்ததனைக் காணலாம். முன்னரே பிரான்ஸ் கஸ்டவஸிற்கு நேரடியாக உதவி இருந்தது. பின்னர் வந்த ரிச்சல்யு ஹப்ஸ்பேர்க் இனத்தின் மீது தனிப்பட்ட வெறுப்புக் கொண்டிருந்தான். ஸ்பானியாவானது நெதர்லாந்தில் கொண்டிருந்த செல்வாக்கினை தகர்க்க வேண்டும் எனக் கருதினான். தனது நோக்கில் வெற்றி பெற நீடித்து வந்த பயமுறுத்தலொன்றை பிரான்ஸின் தலைநகரினப்பால் தடுத்து நிறுத்தினான். அதாவது சுவீடனுடனும் ஒல்லாந்துடனும் நெருங்கிய தொடர்பினைப் பேணினான். பன்னிரண்டு ஆண்டுப் போரின் தற்காலிக போர் நிறுத்தமானது 1621ஆம் ஆண்டுடன் முடிவுற்றதும் ஒல்லாந்தர்கள் போரை மீண்டும் தொடுத்தனர். கடைசித் தருணத்தில் இப்போரானது ஜேர்மனிய யுத்தமாக அமையாது ஹப்ஸ்பேர்க், போர்பன் வம்சத்தவர்களிற்கிடையிலான யுத்தமாக அனைத்து நாடுகளும் பங்கு பற்றிய போராட்டமாக மாறியது.

ஒசுத்திரிய அரச குடும்பமும், ஸ்பானிய அரச குடும்பமும் பரம்பரை பரம்பரையாக பிரான்ஸிற்கு பகைமையான அரச குடும்பங்களாக விளங்கின. சமகாலத்தில் பேரரசானது நலிவுற்றுக் காணப்பட்டது. இந்த நிலை சீர்செய்யப்படின் பிரான்ஸிற்கு அச்சுறுத்தல் ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு ரிச்சல்யு நேரடியாக வெய்மரைச் சேர்ந்த பெர்னாட்டின் தலைமையில் ஒரு படையை அனுப்பினான். 1643இல் பிரஞ்சுப்படைகள் ஸ்பெயினுக்குள் நுழைந்தன. இப்படைகள் ரொக்காய், லென்ஸ் ஆகிய இடங்களில் ஜேர்மனியப் படைகளைத் தோற்கடித்தன.
1642 இல் ரிச்சல்யு இறந்தார். பின்னர் பொறுப்புகளனைத்தையும் மசாரின் என்பவர் பெற்றார். இவர் போரில் ஈடுபடுவதில் நாட்டம் கொள்ளவில்லை. இவர் மிதவாதப் போக்கினை கடைப்பிடித்தான். சமாதானத்தினை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டான். பேரரசர் இரண்டாம் பேடினண்டின் பின்னர் மூன்றாம் பேடினண்ட் பதவி ஏற்றான். மூன்றாம் பேடினண்டுடன் சமரசமாக போக எண்ணினான் மசாரின். இருவரும் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் விளைவாக 'வெஸ்ட்பேலியா உடன்படிக்கை' செய்யப்பட்டது. இதன் மூலம் முப்பதாண்டுகள் நீடித்த போரானது முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

வெஸ்ட்பேலியா உடன்படிக்கைப்படி ஜேர்மனியில் பிரதேசங்கள், நிலம் சம்பந்தப்பட்ட சலுகைகளைப் பற்றி ஆராய்ந்து வரையறுத்துக் கொள்ளப்பட்டது. மற்றும் புரட்டஸ்தாந்தினருக்கும் கத்தோலிக்கருக்கும் இடையில் சமாதானத்தை உண்டாக்க  புதியதோர் அடிப்படைக் கொள்கையை வகுத்தது. ஜேர்மனியில் அரசியல் நிலப்பிரிவு தொடர்பாகவும் கவனத்தில் கொள்ளப்பட்டது.இப்போரினால் ஏற்பட்ட அரசியல் விளைவுகளை பார்ப்போமானால் நெதர்லாந்தானது விடுதலை பெற்ற சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் உரோமானியப் பேரரசிலிருந்து சுவிற்சலாந்தும் விடுதலையைப் பெற்றது. மேலும் பலட்டினேட் இரு பகுதியாக பிரிக்கப்பட்டது. பலட்டினேடின் மேற்குப் பகுதியானது பவேரியக் கோமகனுக்கும் கிழக்குப் பகுதியானது பிறட்ரிக்குக்கும் வழங்கப்பட்டது. பேரரசின் அரசியலாதிக்கமானது படிப்படியாக குறைக்கப்பட்டதனைக் காணலாம். மேலும் பேரரசானது முன்னர் காணப்பட்டதைப் போல் வலிமையும் திறமையும் மிக்க பேரரசாக உடன்படிக்கையின் பின்னர் விளங்கவில்லை. இப்பேரரசானது பெரியவையும் சிறியவையுமாக பல அரசுகளைக் கொண்ட (343 அரசுகள் நிறுவப்பட்டமை) இறுக்கமற்ற ஒரு நாட்டுக் கூட்டவையாகவே விளங்கியது. மேலும் பேரரசில் சட்டங்களை மக்கள் ஏற்கும்படி நிர்ப்பந்திக்கும், படை வீரர்களை திரட்டும், வரிகளை அறவிடும் அதிகாரங்கள் இருக்கவில்லை. ஜேர்மனியின் தலைமையையும் ஒக்ஸ்போர்க் பெறமுடியாமல் போனது. தலைமையினை வகிக்க தவறிய ஒஸ்திரியாவின் சாதனையை வேறு ஒரு நாடு பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. 

பிரான்ஸ், சுவீடன் போன்ற நாடுகள் சில பகுதிகளைப் பெற்றுக் கொண்டன. குறிப்பாக 'மேற்று ராணியின் மும்மண்டலங்கள்' எனப்படும் மெட்ஸ், ரூல், வெர்டன் ஆகிய பகுதிகளைப் பிரான்ஸ் பெற்றதுடன் மேற்கு போமரேனியா, ஓடர், எல்ப், வெசர் ஆற்றைச் சுற்றிய பகுதி, பிரிமன் என்பவற்றை சுவீடனும் பெற்றுக் கொண்டது. பிரான்ஸ் இப்போரின் மூலம் பெற்ற பகுதிகளால் அதன் பலம் அதிகரித்தது. சிறப்பாக இதன் கிழக்குப் பகுதியானது முன்னரை விட மிகவும் பலம் பொருந்தியதாக உருவாக்கப்பட்டது.
இந்த முப்பதாண்டுப் போரின் பின்னர் ஹப்ஸ்பேர்குகளின் புகழ் மங்கத் தொடங்கியது என்று கூறலாம். உரோமப் பேரரசர்கள் ஆட்சியியலில் தங்களின் நிலப்பகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. பேரரசர்கள் மட்டுமன்றி போப்பாண்டவர்களது செல்வாக்கும் குறைவடைந்ததனைக் காணலாம். இவ்விதமாக அனைத்துலக திருச்சபைக் கோட்பாடு நிறுவ வேண்டும் என்ற எண்ணம் சிதறுண்டு போனது. மேலும் ரோமானியப் பேரரசின் தனித்துவம், மதிப்பு, பேரரசுநிலை எதேச்சாதிகாரம் முதலியன வீழ்ச்சியடந்தன. சக்கரவர்த்தியானவர் மேலாண்மை மிக்க கழகமொன்றின் தலைவராக மட்டுமே இருக்க முடிந்தது.

ஆஸ்திரியா மத்தியதரைக் கடற்பகுதியில் ஒரு வல்லரசாக வளர இப்போர் உதவியது. ஜேர்மனி தன்னாட்சி அதிகாரம் கொண்ட நாடுகளாக பிரிக்கப்பட்டது. சுவீடன், பிரான்ஸ் என்பன வல்லரசு நாடுகளாக ஆவதற்கு இப்போர் வழிகாட்டியது. ஸ்பெயின் சோர்வடைந்த நிலையில் பிரான்ஸ் துரித வளர்ச்சி எய்தியது. இதற்கு பிரான்ஸ் போரின் பின்னர் பெற்றுக் கொண்ட வளமான பகுதிகளும் காரணமாக அமைந்தன.

அரை நூற்றாண்டுகளாக ஜேர்மனி ஐரோப்பிய விவகாரங்களில் தலையிட முடியாத நிலை ஏற்பட்டது. ஜேர்மனி போரிற்கு முன்னர் இருந்த நிலையினை அடைய ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு தேவைப்பட்டது. ஜேர்மனியில் ஒருமுகப்படுத்தப்பட்ட ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு கிளையாட்சி அமைக்கும் நிலை வெற்றி பெற்றது. ஜேர்மனியில் அங்கம் வகித்த அரசுகள் யாவும் செயன்முறையில் சுதந்திரத்தைப் பெற்றன. 1648இன் பின்னர் ஜேர்மனியின் மத்தியில் சூழ்ந்திருந்த ஐந்து பிரிவுகளிலேயே உள்ளூர் அரசியல் காரணங்களும், முன்னேற்றங்களும் தங்கியிருந்தன.

யுத்தத்தினால் எற்பட்ட சமுதாய விளைவுகளை பார்ப்போமானால் இந்த யுத்தமானது இரு சமயத்தவருக்கும் வெற்றியைக் கொடுக்கவில்லை. இரு சமயத்தவரும் இணைந்து வாழ வேண்டிய சூழ்நிலையையே ஏற்படுத்தியது. கத்தோலிக்கம், லூதரிசம், கல்வினியம், சுவிங்கிலியம் ஆகிய சமயங்கள் சமமாக கொள்ளப்பட்டு ஐரோப்பா பூராகவும் சமயப்பொறை காணப்பட்டது. மக்களின் மனிதாபிமான கருத்துக்கள் பலவற்றை இந்த யுத்தம் வழங்கியது. போரில் மருத்துவ வசதி, பொதுமக்களைக் காப்பாற்றுதல், தவறுகளைச் சுட்டிக் காட்டுதல் முதலிய நல்லெண்ணங்கள் வளர்ச்சியடைந்தன. அத்துடன் நல்ல உயர்ந்த கோட்பாடுகளும் சமுதாயத்தில் உருவாகின. குறிப்பாக ஒப்புரவாண்மைக் கோட்பாட்டினைக் கூறலாம். இந்த உடன்படிக்கையின் பின்பாக பல போர்கள் இடம் பெற்றாலும் இரு சமயத்தவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தனர் என்பது சிறப்பாக சொல்லப்பட வேண்டிய அம்சமாகும். 

ஜேர்மனியில் இருந்த மக்கள் தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது. ஜேர்மனியில் இப்போரினால் 2ஃ3 பங்கினர் இறந்தனர். ஜேர்மன் பிளவுற்றதால் அதனை மீண்டும் ஐக்கியப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஜேர்மனியில் வளம், ஆற்றல் என்பன குறைவடைந்து விட்டது.  நீண்ட காலமாக பல தலைமுறையினரால் சேர்க்கப்பட்ட செல்வங்களும், அறிவுத்திறன், ஒழுக்க நெறி முதலியன போரினால் மங்கிவிட்டன. நீண்ட காலமாக காணப்பட்ட அடக்குமுறை ஆட்சியினால் பொறுமையும், நேர்மையும் வெறுக்கப்பட்டு இந்த நிலை ஏற்பட்டது. பின்னர் மக்கள் படிப்படியாக உழைப்பின் பெறுமதியினை உணரும் நிலை ஏற்படுகிறது. இது திடீரென ஏற்படவில்லை. யுத்தத்தின் போது போர்ச்சேவை மட்டும் தான் மக்களின் வாழ்க்கைத் தொழிலாக காணப்பட்டது. பின்னர் இந்த நிலை மாற்றப்பட்டு உழைக்கும் வர்க்கம் மீண்டும் ஏற்பட்டது. போரின் போது கொள்ளைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலை மாற்றப்பட்டது. சீர்திருத்தப்பட்ட சமுதாயம் ஒழுக்க நெறியிலிருந்து விலகாத சமுதாயமாக நாளடைவில் உருவாக்கம் பெற்றது.

வெஸ்ட்பேலியா உடன்படிக்கையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் போரினால் ஏற்பட்ட விளைவுகள் என்பன மிக முக்கியமானவையாக கவனத்தில் எடுக்க வேண்டும். லூதரின் சமயத்தவருக்கு கிடைத்த சலுகைகள் அனைத்தும் கல்வீனிய சமயத்தவருக்கும் கிடைத்தது. 1624 இற்கு முன்னர் கத்தோலிக்கரும், புரட்டஸ்தாந்தினரும் வைத்திருந்த சொத்துக்கள் அனைத்தும் அவர்களுக்கே மீண்டும் பெற்றுக் கொடுக்கப்பட்டது. நீதிமன்றங்களிலே கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து நீதிபதிகள் சம அளவில் நியமிக்கப்பட்டனர். மக்கள் சமயப் பொறை, சமவுடமை வாதம், சகிப்புத் தன்மை, மிதவாதப் போக்கு கொண்டவர்களாக மாறினார்கள். சமய வேறுபாடு, ஆதிக்க முறை, போட்டிகள், பொறாமை என்பன சமுதாயத்திலிருந்து அகற்றப்பட்டு ஜனநாயக சிந்தனைகள் சமுதாயத்தில் வளர்ச்சி பெற்றன.
முப்பதாண்டு யுத்தமானது ஐரோப்பிய வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த யுத்தமாக கொள்ளப்படுகிறது. கத்தோலிக்க மற்றும் புரட்டஸ்தாந்து சமயங்களுக்கு இடையிலான போராக தொடங்கி பின்னர் அரசியல் போராக மாற்றமடைந்து இறுதியில் வெஸ்ட்பேலியா உடன்படிக்கையுடன் முடிவடைந்தது. இந்த போரினால் ஜேர்மனி சின்னாபின்னமாக்கப்பட்டது அத்துடன் இப்போரினால் அண்ணளவாக மூன்று இலட்சம் மக்கள் பலியாகியமையு குறிப்பிடத்தக்கது. இப்போரானது கத்தோலிக்கருக்கோ புரட்டஸ்தாந்தினருக்கோ வெற்றியைத் தேடித்தரவில்லை.

No comments:

Post a Comment