Monday, April 13, 2015

இங்கிலாந்து வரலாற்றில் பேரமைச்சரான கிளாஸ்டனின் நிருவாக சீர்திருத்தங்கள்

இங்கிலாந்து வரலாற்றில் விக்டோரியா மகாராணியின் ஆட்சிக்காலமானது அரசியல், சமூக , பொருளாதார துறைகளில் முன்னேற்றம் கண்ட காலம் எனலாம். இத்தகு மாற்றங்களிற்கான மிகமுக்கிய பங்காளராக விளங்கியவர் சமகாலத்தில் அதிகாரத்தில் காணப்பட்ட சிறப்பு வாய்ந்த பேரமைச்சரான கிளாஸ்டன் ஆவார். கிளாஸ்டனது நிருவாகத்துறை ரீதியான சீர்திருந்தங்கள் இங்கிலாந்து வரலாற்றில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்திற்று. இவர் செய்த அரசியல், சமூக, சமய, நீதித்துறை சார்பான சீர்திருத்தங்கள் வாயிலாக இங்கிலாந்து வரலாற்றில் அவர் பெறும் முக்கியத்துவம் எடுத்தியம்பப்படுகின்றது.

கி.பி 1809ஆம் ஆண்டு லிவர்பூலில் சான் கிளஸ்டன், ஆன் தம்பதிகளின் மகனாகப் பிறந்த இவர் நியுகாசில் பிரபுவின் ஆதரவுடன் 1832ஆம் ஆண்டு டோரிக்கட்சி சார்பில் வெற்றி பெற்று அரசியலில் நுழைந்துகொண்டார். 1841ஆம் ஆண்டு மந்திரிசபை உறுப்பினராகவும், 1852ஆம் ஆண்டு கருவூலத்தலைவராகவும் செயற்பட்டார். டோறிக்கட்சியினருடன் முரண்பட்டு பின்னர் தாராண்மை கொள்கையினை பின்பற்றி 1868ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டி மந்திரிசபையினை அமைத்தார். விக்டோரியா மகாராணியின் காலத்தில் இவர் 4 (1868-1873, 1880-1885, 1886, 1892-1894) தடவைகள் பிரதம அமைச்சராக காணப்பட்டார். இவரது காலத்தில் பலவகைச் சீர்திருத்தங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதனால் இவரினாட்சிக்காலத்தினை “ இரண்டாவது சீர்திருத்த சகாப்தம்” என அழைக்கின்றனர். குறிப்பாக பிரித்தானியா, அயர்லாந்து நாடுகளில் பழைய சீர்திருத்தங்கள் முற்றாக மாற்றியமைக்கப்பட்டமை சிறப்பம்சங்கள் எனலாம்.

கிளாஸ்டன் காலத்தில் கொண்டுவரப்பட்ட நிருவாக சீர்திருத்தங்களை நோக்குமிடத்து 1872ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வாக்குரிமை மறுசீரமைப்புச் சட்டம் பற்றியும் நோக்கவேண்டியுள்ளது. இச்சட்டமானது ஏழை மக்களினை நிலக்கிழார்களின் மேலாதிக்கத்திலிருந்து விடுவித்து சுதந்திரமான முறையில் தமது வாக்குகளை அளிப்பதற்கான வழிவகைகளை வழங்கியது. தனிநபர் சுதந்திரம் பேணும் வகையில் வாக்குரிமைச் சீட்டுக்களிம் மூலம் தான் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்ட இச்சட்டமானது தொழிலாளர் வாகுரிமையினை உறுதிப்படுத்தி குடியாட்சி முறையின் முழுமை நிலையடைவதற்கான சந்தர்ப்பத்தினை வழங்கியது என்ற வகையில் முக்கியம் பெறுகின்றது. இது பிரித்தானிய ஜனநாயகத்தின் உச்ச நிலையை அடைவதற்கான முக்கிய சட்டமாக காணப்பட்டது என்ற வகையில் கிளாஸ்டனின் முக்கியத்துவமும் நோக்கப்படுகிறது.

1872ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அனுமதிக்கும் சட்டமானது மது அருந்தும் பழக்கத்தினை கட்டுப்படுத்தியது. கலப்பு மதுபானங்கள் விற்பதை தடை செய்ததுடன் நீதிமன்ற அனுமதி பெற்ற உரிமையாளர்களே மது விற்க முடியும் எனவும் விதிக்கப்பட்டது. மது விற்பதற்கான காலவரையறைகளையும் விதித்தது. இது கலாசார ரீதியான பிரச்சனைகளை குறைப்பதற்கான வழிவகைகளைச் செய்தது.

கோட்வெல் என்பவர் கிளஸ்டன் காலத்தில் திறமை மிக்க போர் அமைச்சராக காணப்பட்டார். இதன் காரணமாக பல இராணுவ சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. கிளாஸ்டன் கூடுதலாக போர் புரிதலை விரும்பவில்லை. மாறாக மக்கள் நல்வாழ்விற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தான் அதிகம் கவனம் செலுத்தினார். போர்ச் செலவுகளை குறைப்பது கிளாஸ்டனின் முக்கிய இலக்காக காணப்பட்டது இதற்கு கோட்வெல்லின் ஒத்துழைப்பும் கிடைத்தது. இராணுவக்கமிஷன்களை விற்கின்ற முறைமையின கோட்வெல் ஒழித்தார். விலைக்கு விற்ற கமிஷன்களை மீண்டும் அரசாங்கம் வாங்கிக்கொண்டது. இதற்காக 1871ஆம் ஆண்டு சட்டம் ஒன்றினை கிளாஸ்டன் காலத்தில் மகாராணி கொண்டுவந்தார். இச்சட்டம் திறமையின் அடிப்படையில் இராணுவத்திற்கு பதவிகளை அளிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியது.

இராணுவ வீரர்களது தனிநபர் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தியதாக 1871ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சீர்திருத்தம் அமைந்தது. மேலும் இராணுவ சீரமைப்பும் சமகாலத்தில் இடம்பெற்றுக்கொண்டது. கோட்வெல் குறுகிய கால இராணுவப்பயிற்சியை ஏற்படுத்தினார். அத்துடன் குடியேற்ற நாடுகளில் சேவையிருந்த 20000 படைவீரர்களை இங்கிலாந்திற்கு வரவழைத்து 6 மாதகாலம் போர்பயிற்சியளித்து அவர்களிற்கு அமைதியான வாழ்வளித்து தேவையேற்படின் அவர்கள் மீள அழைக்கும் வகையிலான முறைமையை ஏற்படுத்தினார்.

நிலைப்படைக்கும், நாட்டுப்படைக்கும் தொடர்புகளை அதிகரிப்பதற்கான வழிகளும் செய்யப்படன. நாட்டுப்படைகளிற்கான பெயர்கள் பிரதேசப்பெயர்களாக மாற்றப்பட்டன. படைப்பகுதி ஒன்று வெளிநாட்டில் போரிடுகையில் இன்னொரு படையானது உள்நாட்டில் பயிற்சி பெறும் என்ற வகையில் படை நிருவாகம் சீரமைக்கப்பட்டது, படையினர்க்கு நவீன துப்பாக்கிகள் வழங்கப்பட்டன. பீரங்கிப்படை, நிலப்படை எண்ணிக்கை அதிகரிப்பு செய்யப்பட்டது. கப்பற்படையிலும் சில சீர்திருத்தங்கள் குறிப்பாக கடற்படையானது ஒரு அமைச்சின்கீழ் கொண்டுவரப்பட்டது. மேலும் கடற்படை உதவிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

1871ஆம் ஆண்டு இவர் கொண்டுவந்த சிவில்சேவைச் சீர்திருத்தமானது அரசாங்க சிவில் சேவையில் உள்வாங்கும் ஊழியர் நியமனம் தொடர்பாக கபினட் அமைச்சர்கள் கொண்டிருந்த அதிகாரத்தை மட்டுப்படுத்தியது. அந்த வகையில் திறமையற்றோர், தமக்கு சார்பானோர், இலஞ்சம் பெற்று நியமித்தல் முதலிய திறமையற்ற சிவில் உத்தியோகத்தர்களது நியமனங்கள் தடைசெய்யப்பட்டன. திறமையடிப்படையில் போட்டிப்பரீட்சையில் சித்திபெற்று அதன் அடிப்படையில் தகுதிக்கேற்ப நியமனங்கள் வழங்கும் முறையானது சிவில்சேவைச் சீர்திருத்தம் மூலம் ஏற்படுத்தப்பட்டது. இதனால் நிருவாக திறமையீனங்கள் குறைக்கப்பட்டன. மேலும் சிவில் சேவையின் உச்சகட்ட பலனையும் பெறமுடிந்தது.

அயர்லாந்தில் மேற்கொண்ட சமயச்சீர்திருத்தமானது கிளஸ்டன் காலத்து முக்கிய நிகழ்வாக கொள்ளப்படுகின்றது. “அயர்லாந்து மக்களை சமாதானப்படுத்துவதே தனது குறிக்கோள்” என்று கூறிய இவர் அதற்கான வழிவகைகளை செய்வதற்கு முன்னின்றார். அயர்லாந்தினை அவர் “உபாஸ்” என்ற நச்சு மரத்திற்கு ஒப்பிட்டார். அங்குள்ள மத நிறுவனம், கல்விமுறை, நிலவுடமை என்பன அந்த மரத்தின் நச்சுக் கிளைகள் எனவும் அக்கிளைகளை வெட்டிவிட வேண்டும் எனவும் தீர்மானித்து அதற்கான சீர்திருத்தங்களை ஏற்படுத்தினார்.

கிளாஸ்டன் அயர்லாந்தில் முதலில் சமய ரீதியான மாற்றங்களை ஏற்படுத்த விளைந்தார். சமகாலத்தில் பெனியன் என்ற இனத்தவர்களது கிளர்ச்சி செயல்களால் இங்கிலாந்து, அயர்லாந்து பகுதிகளில் அமைதிநிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதனை சீர்செய்வதாயின் சமயச்சுதந்திரமானது அயர்லாந்தினர்க்கு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை உணர்ந்தார். அயர்லாந்தில் காணப்பட்ட 80% மக்கள் கத்தோலிக்கர்கள். ஆங்கிலிக்கன் சபையினர் அனுபவித்த உரிமைகள் அவர்களிற்கு மட்டுப்படுத்தப்பட்டமையானது அவர்களது சினத்திற்கான முக்கிய காரணம். இதனைக் கருத்திற்கொண்டு ஐரிஷ் திருச்சபை மசோதா ஒன்றினை 1869ஆம் ஆண்டு பிரித்தானிய பாராளுமன்றில் கொணர்ந்து சட்டமாக்கினார்.

ஐரிஷ் திருச்சபை மசோதாவானது அயர்லாந்தில் ஆங்கிலிக்கன் திருச்சபை சிறப்புரிமைகளை முடக்கியது. ஐரிஷ் மத நிலைய பிரபுக்களது பாராளுமன்ற உரிமைகளும் மட்டுப்படுத்தப்பட்டது. பிற மத நிலையங்கள் சம அந்தஸ்தை பெற்றன. ஐரிஷ் சமயக்கழகங்கள், சமய நீதிமன்றங்கள், சமயச்சட்டங்கள் என்பன ஒழிந்தன. ஐரிஷ் திருச்சபை சுயமாக இயங்கும் வகையிலும் அதன் மேலாதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் கிளஸ்டனது சீர்திருத்தம் அமைந்தது. ஐரிஷ் திருச்சபை அயர்லாந்து மக்களிடம் சுரண்டிய பணமும் அரசுடமையாக்கப்பட்டது. அப்பணமானது ஏழை மக்களிற்கும், சில மதகுருமார்க்கும் அரசால் வழங்கப்பட்டது.

அயர்லாந்தில் கொண்டுவந்த சமயச்சீர்திருத்தம் ஊடாக சமயச் சுதந்திரம் உறுதிசெய்யப்பட்டதுடன் ஐரிஷ் திருச்சபையானது தொண்டர் அமைப்பு போல் செயற்படவும் வழிவகுத்தது. இவரது இத்தகைய செயற்பாடுகள் இராணி, உயர் பிரமுகர்களது எதிப்பினை சம்பாதித்தாலும் அவர் ஒரு தாராளக்கொள்கையினை இந்த இடத்தில் கடைப்பிடித்து அதன் அடிப்படையில் பிரச்சனைகளை தீர்த்து சமாதானத்திற்கான வழிவகைகளை வழங்கினார் எனக் கொள்ள வேண்டும்.

நிலச்சீர்திருத்த சட்டத்தினை அயர்லாந்தில் கொண்டுவந்ததன் மூலம் விவசாயிகளின் மதிப்பினை கிளஸ்டன் பெற்றார். சமகாலத்தில் ஐரிஷ் மக்களில் பெரும்பான்மையினர் விவசாயிகளாக காணப்பட்டனர். நிலக்கிழார்கள் தமது நிலங்களில் இவர்களை வேலைக்கு அமர்த்தி போதிய ஊதியம் கொடுக்காது அல்லல்படுத்தினர். இத்தகு பிரச்சனையினை தீர்க்கும் முகமாக கிளஸ்டன் 1870ஆம் ஆண்டு நிலச்சட்டம் ஒன்றினை கொண்டுவந்தார். இதன்படி நிலக்கிழார்கள் விவசாயிகளை தகுந்த காரணமின்றி நிலத்தை விட்டு வெளியேற்ற முடியாது என்றும் குறித்த விவசாயி ஒருவன் வெளியேற்றப்படின் அவன் குறித்த நிலத்தில் இட்ட உழைப்பிற்கான நஷ்ட ஈட்டினை வழங்க வேண்டும் என்றும் விதிக்கப்பட்டது. தொழிலாளர் நலன் பேணும் வகையிலான இச்சீர்திருத்தமானது பிற்பட்ட காலங்களில் தொழிற்கட்சியின் உருவாக்கத்திற்குக் மறைமுகமாக காரணமாக அமைந்தது எனலாம்.

அயர்லாந்தில் கிளஸ்டன் மேற்கொண்ட மற்றொரு சீர்திருத்த மசோதா கல்வித்துறை சார்ந்ததாக காணப்பட்டது. சமகாலத்தில் அயர்லாந்து கத்தோலிக்கர்கள் பிராடஸ்டெண்ட்களால் நடத்தப்பட்ட கல்லூரிகளில் கல்வி கற்பதற்கான வாய்புக்கள் மறுக்கப்பட்டது. அவர்கள் கத்தோலிக்கர்களுக்கு பிரத்தியோகமான கல்லூரி அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினர். இதன் அடிப்படையில் கிளஸ்டன் 1873ஆம் ஆண்டு ஐரிஷ் பல்கலைக்கழக மசோதாவை கொண்டுவந்தார். சமயச்சார்பற்ற கல்வி முறையையும், கத்தோலிக்கர்கள், புரட்டஸ்தாந்தினர் இணைந்து கற்கும் முறையையும் இம்மசோதா உள்வாங்கியிருந்தது. இம்மசோதா பாராளுமன்றில் தோற்கடிக்கப்பட்டதால் கிளஸ்டன் பதவி விலக நேர்ந்தது.

கிளஸ்டன் பொருளியல் நிபுணத்துவம் மிக்கவர். வரிகுறைப்பு, சிக்கனம், போர்ச்செலவுகளைக் குறைத்தல் விவசாய மேம்பாடு, சமூக மேம்பாடு, உற்பத்தி ஊக்குவிப்பு முதலிய திட்டங்களை கொண்டுவருவதில் அக்கறை காட்டினார். இவர் பொருளாதாரத் துறையில் தலையிடாக் கொள்கையை வெளிப்படுத்தினார். இவர் நிதியமைச்சராக காணப்பட்ட போது(1860) தனது வரவுசெலவுத்திட்டத்தில் மாறுதல்களைக் கொண்டுவந்தார். அந்த வகையில் பொருட்களுக்கான சுங்கவரிகளை குறைத்தார். இதனால் பிரான்சுடனான வர்த்தகத்தில் கட்டிப்பாடற்ற வாணிபம் வளர்ச்சி பெற்றது. அத்துடன் அவுஸ்ரேலியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு தனிச்சலுகை வழங்கினார். இத்தகு செயல்கள் நாட்டின் வருமானம், உற்பத்திகளை பாதித்ததாக சிறிது காலம் காணப்பட்டாலும் பொருளாதாரப் புரட்சி நாட்டினை பலம், செல்வம் மிக்கதாக மாற்றிற்று. தனிமனித வருமானமும் இந்த கால் நூற்றாண்டுள் மூன்று மடங்காக சுகாதார விருத்தியும் இதன்பால் ஏற்பட்டுக்கொண்டது. 1896வரை விலவாசியும் குறைவடைந்து காணப்பட்டது.

1861ஆம் ஆண்டு பணமசோதாக்களை ஒன்றுபடுத்தி தனி பட்ஜட்டாக கொண்டுவந்தார். அரசாங்க செலவுகளை நன்கு குறைக்கும் வகையில் அந்த பட்ஜட் காணப்பட்டது. இதன் காரணமாக வருமானவரி, தேநீர் வரிகளை அரைவாசியாக குறைக்கவும் முடிந்தது. மக்களிடத்து சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க தபாலக சேமிப்பு முறை ஒன்றினையும் கொண்டுவந்தார். 1865ஆம் ஆண்டில் நிதி தணிக்கை சட்டத்தினை ஏற்படுத்தியதுடன் பொதுக்கணக்கு தணிக்கை குழு ஒன்றினையும் அமைத்தார். இக்குழுவானது வரவுசெலவுக் கணக்குகளை பரிசீலனை செய்ய நிறுவப்பட்டது. இதனால் நிதி மோசடிகள், பற்றாக்குறைகள், குறைபாடுகள் ஏற்படுவது குறைக்கப்பட்டது. அத்துடன் 200 பவுன்களுக்கு கீழாக உள்ள வருமானம் பெறுவோர்களின் வருமான வரியையும் குறைத்தார்.

கிளஸ்டன் கல்வித்துறை ரீதியில் முன்னேற்றங்களை ஏற்படுத்தும் வழிவகைகளையும் செய்யத்தவறவில்லை. அந்த வகையில் இவரது காலத்தில் கல்வியமச்சராக காணப்பட்ட போர்ஸ்டர் 1870ஆம் ஆண்டு கல்விச் சட்டம் ஒன்றினைக் கொண்டுவந்தார். கல்விக்கழகங்கள்  தமக்குரிய பள்ளிகளை அமைக்க வேண்டும் எனவும், அதற்கான அவகாசம் ஒரு வருட காலம் என்றும் அதன் பின்னர் அரசாங்கத்தால் பள்ளிகள் இல்லாத இடங்களில் பள்ளிகள் அமைக்கப்பட்டு உள்ளூர் குழுக்களுக்கு வழங்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் இச்சட்டம் வலியுறுத்தியது. கல்வி நடவடிக்கைகள் பரவலாக்கப்பட இச்சீர்திருத்தம் வழிசமைத்தது. மேலும் 1868ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பொதுப்பள்ளிச் சட்டமானது சில பள்ளிகளின் நிருவாக அமைப்பினை திருத்தியமைத்தது. கல்விச்சீர்திருத்தங்கள் பிற்பட்ட காலங்களில் வரிமுறையற்ற கல்வி, இலவசக்கல்வி, மானியக்கல்வி, அனைவருக்கும் கல்வி, கட்டாயக்கல்வி முறைகளின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது.

தென்னாபிரிக்காவில் போயர் இன மக்கள் சுயாட்சி கோரி புரட்சியில் ஈடுபட்டனர். அதனை அடக்க முயன்ற பிரித்தானியப்படையானது மஜூபா குன்றின் அருகின் வைத்து தோற்கடிக்கப்பட்டது. இதன் பின்னர் போயர்களிற்கு சுயாட்சி வழங்குவதற்கு தீர்மானித்த கிளஸ்டன் இரு நிபந்தனைகளின் அடிப்படையில் சுயாட்சி வழங்கினார். பிற ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்புகளினை ஏற்படுத்தலாகாது மற்றும் தமது நாட்டில் குடியேறும் ஐரோப்பியர்க்கு சமவுரிமை வழங்கவேண்டும் என்பன அந்த நிபந்தனைகளாகும்.





No comments:

Post a Comment